தினமலர் விமர்சனம்
என்.டி.ஆரின் பேரனும், பிரபல தெலுங்கு நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர்., - இலியானா ஜோடி நடித்து தெலுங்கில் சக்கைபோடு போட்ட "சக்தி" படத்தின் தமிழ் டப்பிங்தான் "ஓம் சக்தி".
இந்தியாவை அழித்து ஏனைய உலக நாடுகளை தங்களது கட்டுபாட்டில் கொண்டு வரத் துடிக்கும் எகிப்து கொள்ளை கும்பல் ஒன்று, அதற்காக இந்தியாவில் உள்ள ராஜ குடும்பம் ஒன்றில் கையில் இருக்கும் சர்வசக்தி பொருந்திய வைரத்தை கொள்ளையடிக்க பல தலைமுறையாக திட்டமிடுகிறது. முதல் தலைமுறையில் சில ரகசியங்களையும், விஷயங்களையும் அவர்களிடம் கோட்டை விடும் ஜூனியர் என்.டி.ஆர்., அடுத்த தலைமுறையில் அவர்களை புரட்டி எடுத்து அந்த வைரத்தின் மூலம் இந்தியாவையும் மற்ற உலக நாடுகளையும் காக்கும் நம்பமுடியாத கதைதான் "ஓம் சக்தி" படத்தின் மொத்த கதையும்! அதை நம்பும் படியாக வித்யாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருப்பது தான் படத்தின் பெரிய பலம்!
ஜூனியர் என்.டி.ஆரின் ஆக்ஷன் அதிரடி தமிழ் சினிமாவுக்கு புதுசு! இலியானாவின் காஸ்டியூமும், கவர்ச்சியும் ப்ளஸ்! பிரபு, எஸ்.பி.பி., நாசர், ஜாக்கிஷெரப், சோனுசூது உள்ளிட்டவர்கள் படத்தின் பளீச் பாத்திர பலம்! புராதண கோயில்கள், குளீர் காஷ்மீர், சுளீர் பாலைவனங்கள் மற்றும் துபாய், எகிப்து உள்ளிட்ட வெளிநாட்டு லொகேஷன்கள், கும்பமேளா காட்சிகள் உள்ளிட்ட பலவும் ஓம் சக்தியின் வெற்றி சக்திகள்!
மணிஷர்மாவின் இசை, மருதபரணியின் வசனம், மெஹர் ரமேஷின் இயக்கம் எல்லாமும் சேர்ந்து ஓம் சக்தியை ஒருமுறை அல்ல பலமுறை பார்க்க தூண்டும் சக்திகள்!
மொத்தத்தில் "ஓம் சக்தி", தமிழ் சினிமாவுக்கு "புதிய உத்தி!"