ஆர்ஆர்ஆர்
விமர்சனம்
தயாரிப்பு - டிவிவி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - ராஜமவுலி
இசை - மரகதமணி
நடிப்பு - ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட்
வெளியான தேதி - 25 மார்ச் 2022
நேரம் - 3 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5
'பாகுபலி' இரண்டு பாகப் படங்களும் இந்திய அளவில் தெலுங்கு சினிமாவைக் கொண்டு போய் சேர்த்தது. ராஜமவுலி அந்தப் படங்கள் மூலம் இந்தியாவின் முதன்மை இயக்குனர்களில் ஒருவர் என்று பெரிதும் பாராட்டப்பட்டார். அவரது இயக்கத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு வெளிவந்துள்ள படம்தான் 'ஆர்ஆர்ஆர்'.
தெலுங்கு மண்ணில் இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரைப் பற்றிய படம் என்று படம் ஆரம்பித்த நாளிலிருந்தே சொல்லி வந்தார்கள். ஆனால், அந்த போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அவர்களது பெயர்களைப் பயன்படுத்தி ஒரு கமர்ஷியல் சினிமாவாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.
1920களில் நடக்கும் கதை. ஆந்திரா பகுதியிலிருந்து ஒரு பழங்குடி சிறுமியை அடிமையாக டில்லி கொண்டு செல்கிறார் டில்லி கவர்னரின் மனைவி. தங்கள் இன சிறுமியை மீட்டு கொண்டு வர ஜுனியர் என்டிஆர் தலைமையில் ஒரு குழு டில்லி செல்கிறது. டில்லியில் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் போலீஸ் வேலையில் இருப்பவர் ராம்சரண். சிறுமியை மீட்க சிலர் வந்துள்ளார்கள் என்று டில்லி கவர்னருக்குத் தெரிய வருகிறது. என்டிஆரைப் பிடிப்பவர்களுக்கு சிறப்பு அதிகாரி பதவி வழங்கப்படும் என கவர்னர் அறிவிக்கிறார். என்டிஆரைப் பிடித்துக் கொடுத்து அதிகாரி பதவியையும் வாங்குகிறார் ராம்சரண். என்டிஆரைத் தூக்கிலிடுவதற்கு முன்பு அவரைத் தப்பவும் வைக்கிறார் ராம்சரண். எதற்கு ?, ஏன் ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் இதுவரை பிரம்மாண்டம் என்று நாம் சிலாகித்து பாராட்டிக் கொண்டதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்திருக்கிறார் ராஜமவுலி. இந்தப் படத்தில் காட்டியிருக்கும் பிரம்மாண்டம், கதைக் களம், அதற்காகப் போடப்பட்ட அரங்குகள், படமாக்கம், தொழில்நுட்பம் என ஒற்றை மனிதராக தெலுங்கு சினிமாவை மீண்டும் ஒரு முறை வேறு தளத்திற்கு உயர்த்தியிருக்கிறார்.
ஜுனியர் என்டிஆர், ராம்சரண் இருவருமே அவரவர் கதாபாத்திரங்களுக்கான பொருத்தமான தேர்வு. போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இருவரில் யாருக்கு அதிகப் பெயர் கிடைக்கும், யார் முதலிடத்தைப் பிடிப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாத அளவிற்கு தங்களது நடிப்பால் வியக்க வைக்கிறார்கள். இருவருக்குமே வலிமையையும், ஆக்ஷனையும் காட்டக் கூடிய கதாபாத்திரங்கள். இருவரும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள்.
படம் முழுவதுமே என்டிஆர், ராம்சரண் ஆகியோரது தோள்களில்தான் நிற்கிறது. அதனால் மற்ற கதாபாத்திரங்கள் எடுபடாமல் போவது எதிர்பாராத ஒன்று. ராம்சரணின் காதலியாக அவ்வப்போது வந்து போகிறார் ஆலியா பட். மொத்தமாக ஒரு பக்க வசனம் பேசியிருந்தாலே அதிகம். என்டிஆர் - ஒலிவியா மோரிஸ் இடையிலான காட்சிகள் ஆர்யா - எமிஜாக்சன் நடித்த 'மதராசப்பட்டிணம்' படத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
ராம்சரண் மாமாவாக சமுத்திரக்கனி, சில காட்சிகளில் வந்து போகிறார். பிளாஷ்பேக்கில் கணவன் மனைவியாக அஜய் தேவகன், ஸ்ரேயா. வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடுவதற்காக பயிற்சி கொடுக்கும் தலைவனாக அஜய் தேவகன். கொஞ்ச நேரமே வந்தாலும் மற்ற கதாபாத்திரங்களில் உணர்ச்சிப் பெருக்கான நடிப்பால் அவரைப் பற்றிப் பேச வைக்கிறார். டில்லி கவர்னர் ஸ்காட் துரை ஆக ரே ஸ்டீவன்சன்.
படத்தின் உருவாக்கத்தில் இசையமைப்பாளர் மரகதமணி, ஒளிப்பதிவாளர் செந்தில் குமார், கலை இயக்குனர் சாபு சிரில், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்ரீனிவாஸ் மோகன், சண்டைப் பயிற்சியாளர்கள் என அனைவரும் இயக்குனர் ராஜமவுலிக்கு சரியாக உறுதுணை செய்திருக்கிறார்கள். குறிப்பாக சண்டைக் காட்சிகளின் படமாக்கம் வியக்க வைக்கிறது.
படத்தின் நீளம் 3 மணி நேரம் இருந்தாலும் படம் போவது தெரியவில்லை. இடைவேளை வரையிலான காட்சிகள் சில பல திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்கின்றன. இடைவேளைக்குப் பின் கதை சொல்லல் சாதாரணமாகப் போய்விட்டது. இப்படித்தான் கதை போகும் என்பதை யூகிக்கவும் முடிகிறது.
தெலுங்கு ரசிகர்களுக்கும், ஹிந்தி ரசிகர்களுக்கும் வேண்டுமானால் படம் புதிதாகத் தெரியலாம். ஆனால், தமிழ் ரசிகர்கள் இது போன்ற பல பிரம்மாண்ட சுதந்திரப் போராட்ட படைப்புகளை 60 வருடங்களுக்கு முன்பே பார்த்துவிட்டனர். அவற்றின் இன்றைய 2022 வெர்ஷன்தான் இந்த 'ஆர்ஆர்ஆர்'.
ஆர்ஆர்ஆர் - பிரம்மாண்ட 'ஆர்'வம்
ஆர்ஆர்ஆர் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
ஆர்ஆர்ஆர்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
ராம் சரண் தேஜா
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியன் வாரிசு ராம் சரண் தேஜா. 1985ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறந்த ராம் சரண், அப்பாவை போலவே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டவர். பூரி ஜெகநாத் இயக்கிய சிறுத்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராம் சரண் அதன் பின்னர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர் உயர்ந்தார். தற்போதைய டோலிவுட்டின் முன்னணி நடிகர் இவர் தான். இவர் நடித்த மகதீரா படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இணைந்தது. 2012ம் ஆண்டு உபாசனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார்.