பிரம்மாஸ்திரா : பாகம் 1 – ஷிவா,Bhramastra: Part 1 - Shiva
Advertisement
3

விமர்சனம்

Advertisement

இயக்கம் - அயன் முகர்ஜி
இசை - சைமன் பிராக்ளின், ப்ரீத்தம்
நடிப்பு - ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், மவுனி ராய்
வெளியான தேதி - 9 செப்டம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 43 நிமிடம்
ரேட்டிங் - 3 /5

அயன் முகர்ஜி இயக்கத்தில், ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், மவுனி ராய், நாகார்ஜுனா மற்றும் சிறப்புத் தோற்றத்தில் ஷாரூக்கான் நடித்து ஹிந்தியில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம்.

இந்து மத இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு கற்பனைக் கதையை உருவாக்கி விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் மூலம் திரையில் மாயாஜாலம் நிகழ்த்தி அதை 3 டியில் பார்க்க வைத்து வியக்க வைத்திருக்கிறார்கள். விஎப்எக்ஸ் இல்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு படம் முழுவதும் அவை வியாபித்திருக்கிறது.

டிஜே--வாக இருப்பவர் ரன்பீர் கபூர். அவருக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அவரது கனவில் சில சம்பவங்கள் வந்து போகிறது. அதில் ஒரு சம்பவம் நிஜமாக நடக்கிறது. அடுத்த சம்பவம் நடக்கப் போவதை முன் கூட்டியே உணர்ந்து அதை தடுக்கப் போகிறார். அதன் பிறகு குரு அமிதாப்பச்சனை சந்திக்கிறார். அப்போதுதான் அவருக்கு சில உண்மைகள் தெரிய வருகிறது. பிரம்மாஸ்திரம் என்ற அதி சக்தி வாய்ந்த அஸ்திரத்தை ஒரு கும்பல் கைப்பற்ற முயற்சிக்கிறது. அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் ரன்பீர். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பிரம்மாஸ்திரம் மூன்று பாகங்களாக இருக்கிறது. அதில் ஒரு பாகத்தை சயின்ட்டிஸ்ட் ஆன ஷாரூக்கான் காப்பாற்றி வருகிறார். இரண்டாவது பாகத்தை ஆர்ட்டிஸ்ட்டான நாகார்ஜுனா காப்பாற்றி வருகிறார். மூன்றாவது பாகம் யாரிடம் இருக்கிறது என்பது தெரியாது. ஷாரூக்கானிடம் இருக்கும் முதல் பாகத்தை மவுனி ராய் தலைமையிலான ஒரு கூட்டம் கண்டுபிடித்து அவரைக் கொன்று கைப்பற்றுகிறது. அவரிடமிருந்து மேலும் தகவலை அறிந்து அடுத்த இரண்டு பாகங்களைத் தேடி புறப்படுகிறார்கள். அவர்களை எதிர்த்துத்தான் ரன்பீர் போராடுகிறார். இதுதான் முதல் பாகம்.

படத்தின் கதை ஆரம்பத்தில் புரியவில்லை. ஷாரூக்கிடம் இருந்துதான் படம் ஆரம்பமாகிறது. அவர் பேசும் வசனம் புரியாத அளவிற்கு பின்னணி இசை அதிகமாக ஒலிப்பதால் புரியவேயில்லை. போகப் போகத்தான் நம்மால் கதையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அது படத்துடன் ஆரம்பத்திலேயே ஒன்றவிடாமல் தடுக்கிறது. இதை இயக்குனர் சரி செய்திருக்க வேண்டும்.

சூப்பர் பவர் கொண்ட மனிதராக ரன்பீர் கபூர். நெருப்பு அவரை எதுவும் செய்யவே செய்யாது. ஆனால், தனது சக்தியை அவர் ஆரம்பத்தில் பயன்படுத்த மாட்டார். அமிதாப்பச்சனை சந்தித்த பின்பு முறையான பயிற்சி பெற்று அதன் பின் அக்னிபுத்திரனாக மாறுகிறார். ரன்பீர் கபூருக்கு இந்தப் படம் முக்கியமான ஒரு படமாக அமைந்திருக்கிறது.

அவருக்கும் ஆலியா பட்டுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் நெருக்கம் அதிகம். இந்த முதல் பாகத்தைப் பொறுத்தவரையில் இவர்கள் காதல்தான் அதிகம் இருக்கிறது. மற்ற விஷயங்களை விட அதுவே பிரதானமாக இருக்கிறது. அதனால் கிளைமாக்சையும் காதலைச் சொல்லியே முடித்திருக்கிறார்கள். ரன்பீர், ஆலியா இருவருமே திரையில் உருகி உருகிக் காதலித்திருக்கிறார்கள். ரன்பீர் ஆக்ஷனில் அசத்தினால், ஆலியா அழகில் அசத்துகிறார்.

இடைவேளைக்குப் பின்புதான் அமிதாப்பச்சன் வருகிறார். சீனப் படங்களில் வரும் 'ஷாவோலின்' குரு போல இந்தப் படத்தில் அஸ்திரங்களைப் பற்றி அறிந்துள்ள ஒரு குருவாக நடித்திருக்கிறார். அவரது தலைமையில் உள்ள குழுதான் அஸ்திரங்கள் அனைத்தையும் பாதுகாத்து வருகிறது. அவரது குழுவைச் சேர்ந்தவர்களாக ஷாரூக்கான், நாகார்ஜுனா. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கிறார்கள். ஷாரூக் அளவிற்கு நாகார்ஜுனாவுக்கும் கூடுதலாக சில காட்சிகளை வைத்திருக்கலாம்.

இடைவேளை வரையில் கதை ஒரு பிடிப்பில்லாமல் நகர்கிறது. ரன்பீர், ஆலியா காதல் காட்சிகள் மட்டுமே அதிகமாக உள்ளது. இடைவேளைக்குப் பின்னர்தான் மாயாஜாலமாக பரபரப்பாகப் போகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் மிரட்டலாகவே உள்ளது.

சைமன் பிராங்க்ளின், ப்ரீத்தம் பின்னணி இசையும் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் வேலையைச் செய்தவர்களுக்குத்தான் வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கும். மலைப் பிரதேசத்தில் நடக்கும் கார் சண்டைக் காட்சி, ரன்பீர், மௌனி ராய் இடையிலான நெருப்புப் போராட்டம் பரபரப்பாக அமைந்துள்ளது.

இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தை இரண்டரை மணி நேரமாக சுருக்கியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். படத்தின் ஆரம்பத்தில் அஸ்திரங்களைப் பற்றியும், பிரம்மாஸ்திரா பற்றியும் இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லி படத்தை ஆரம்பித்திருக்கலாம். குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும், குடும்பத்துடன் பார்க்கலாம். இந்து மதப் பின்னணியில் கற்பனை கலந்த ஒரு பேண்டஸி திரைப்படம்.

பிரம்மாஸ்திரா - பிரம்மாண்டம்

 

பட குழுவினர்

பிரம்மாஸ்திரா : பாகம் 1 – ஷிவா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓