குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சாகசங்கள் நிறைந்த த்ரில்லர் படம் தான் "ஜகா ஜசூஸ்". ரன்பீர், கத்ரீனா கைப் நடித்துள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து அநாதையாக்கப்பட்டவர் ஜகா எனும் ரன்பீர் கபூர். ஒரு நாள் இவரது வாழ்க்கையில் அப்பா என்று பதால் பக்சி எனும் சஸ்வத் சாட்டர்ஜி வருகிறார். ஆரம்பத்தில் அவரை ஏற்க மறுக்கும் ரன்பீர், பின்னர் அவரை ஏற்று கொள்கிறார். பேச்சு சரியாக வராத ரன்பீருக்கு பாட்டு பாடினால் பேச்சு கொஞ்சம் வருகிறது. ரன்பீரை பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டு அவரை விட்டு செல்கிறார் சஸ்வத். ரன்பீரும் படிப்பை முடிக்கிறார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரன்பீருக்கு சஸ்வத்திடமிருந்து வீடியோ வடிவிலான பிறந்தநாள் வாழ்த்து வருவது வழக்கம். ஆனால் ஒரு பிறந்தநாளுக்கு அவரிடமிருந்து வாழ்த்து வரவில்லை. அதனால் தன் தந்தைக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிக்க களமிறங்குகிறார் ரன்பீர். அவருக்கு உதவ பத்திரிகையாளரான ஸ்ருதி சென் குப்தா எனும் கத்ரீனா கைப் வருகிறார். இருவரும் இணைந்து சஸ்வத்தை கண்டுபிடித்தார்களா... இல்லையா... என்பது ஜகா ஜசூஸ் படத்தின் த்ரில்லர் நிறைந்த பரபரப்பான மீதிக்கதை.
நடிப்பை பொறுத்தமட்டில் ரன்பீர், கத்ரீனா கைப் இருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். கத்ரீனாவை விட ரன்பீர், நடிப்பில் இன்னும் மிளிர்ந்திருக்கிறார்.
ரன்பீரின் அப்பாவாக வரும் சஸ்வத் சாட்டர்ஜி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுரவ் சுக்லா ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு ஓவியப்பதிவாக தெரிகிறது.
பிரீதம்மின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருந்தாலும், அதிகப்படியான பாடல்கள் ரசிகனை சலிப்படைய செய்கின்றன.
அக்வி அலியின் படத்தொகுப்பு ஓகே., படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.
அனுராக் பாசுவின் இயக்கத்தில் குறையேதும் இல்லை. படத்தில் கதை என்று பெரிதாக இல்லை என்றாலும், அதை திரைக்கதையாக கொண்டு வந்து, ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு அருமையான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் முன்பாதி சிறப்பு. ஆனால் இடைவேளைக்கு பிறகு படம் சற்று மெதுவாக நகர்வதும், படத்தின் நீளமும்(2 மணி நேரம் 41 நிமிடம்) ரசிகனை கொஞ்சம் சலிப்படைய செய்கிறது. இதை இயக்குநர் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். அதேப்போன்று படம் குழந்தைகளை கவரும் வகையில் படமாக்கப்பட்டிருப்பது சற்றே பலவீனம்.
மொத்தத்தில், ஜகா ஜசூஸ் - குழந்தைகளுக்கு டபுள், டிரிபிள் ஓகே., ஆனால், வயது வந்தோருக்கு ஓகே., அவ்வளவு தான்!