வருண் தவான், ஆலியா பட் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து வெளியாகியுள்ள ரொமான்ட்டிக், காமெடி படம் தான் பத்ரிநாத் கி துல்ஹனியா. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா...? என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, பத்ரிநாத் எனும் வருண் தவான், ஜான்சியில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். ஒருநாள் நண்பரின் திருமணம் ஒன்றுக்காக ராஜஸ்தானில் உள்ள கோட்டாவிற்கு செல்கிறார். அங்கு ஹீரோயின் வைதேகி எனும் ஆலியா பட்டை காண்கிறார். வழக்கம்போல் கண்டதும் காதல் ஏற்படுகிறது. தன் காதலை வருண் சொல்ல, ஆரம்பத்தில் மறுக்கும் ஆலியா, பின்னர் அதை ஏற்கிறார். திருமணம் செய்யலாம் என்று வரும்போது அதற்கும் ஆலியா மறுக்கிறார், பின்னர் அதையும் சமாளித்து ஆலியாவை திருமணத்திற்கு சம்மதம் செய்ய முயலுகிறார். அதற்கு ஆலியா ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன் சகோதரி கிரணுக்கு(அகன்ஷா சிங்) திருமணம் நடந்தால் தான், தானும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூற, கிரணுக்கு மாப்பிளை தேடும் படலத்தில் இறங்குகின்றனர்.
ஒருவழியாக பூஷண் எனும் அபர்சக்தி குராணா, கிரணுக்கு மாப்பிள்ளை என்று முடிவாகிறது. கிரணுக்கும், வைதேகிக்கும் ஒரேநாளில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. திருமண நாள் அன்று திடீரென ஆலியா பட் ஓடி விடுகிறார். இதனால் வருண்-ஆலியா திருமணம் நின்றுபோகிறது. தனது சகோதரியின் திருமணம் மட்டும் நடக்கிறது. திருமணத்திற்கு எல்லாம் சம்மதம் சொல்லிவிட்டு திருமண நாள் அன்று எதற்காக ஆலியா வீட்டை விட்டு ஓடினார், வருண், ஆலியாவை தேடி கண்டுபிடித்தாரா...?, இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்தார்களா...?, இல்லை திருமணம் அப்படியே நின்றுபோய் ஆலியா-வருண் இருவரும் பிரிந்து வேறு ஒரு வாழ்க்கையை அமைத்து கொண்டார்களா...? என்பது படத்தின் மீதிக்கதை!
வருண் - ஆலியா இடையேயான கெமிஸ்ட்ரி மீண்டும் ஒருமுறை பக்காவாக பொருந்தியிருக்கிறது. இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் அவ்வளவு அழகாக தெரிகிறது.
வருணின் நண்பராக வரும் சாகில், தன் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பதோடு, படத்தையும் வேறு ஒரு லெவலுக்கு கொண்டு போய் உள்ளார்.
இவர்களை மாதிரியே வருண் சகோதரரின் மனைவியாக வரும் ஸ்வேதா பாசு, ஆலியாவின் சகோதரி அகன்ஷா சிங் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
அமால் மாலிக், தன்ஷிக், அகில் சச்தேவா என பாடல்களுக்கு மூன்றுபேரும், பின்னணி இசைக்கு ஜான் ஸ்டீவர்ட் என படத்திற்கு மொத்தம் நான்கு பேர் இசையமைத்திருப்பதால் என்னவோ பாடல்கள் ரசிகர்களை வெகவாக கவரவில்லை. பின்னணி இசை மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
நேகா பர்த்தியின் ஒளிப்பதிவில் ரம்மியம், அதற்கு மனனன் சாகரின் படத்தொகுப்பும் பக்காவாக பொருந்தியிருக்கிறது.
கதை என்று பெரிதாக இல்லாவிட்டாலும் திரைக்கதையை ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி கொண்டு போய் சேர்த்ததில் இயக்குநர் சாசாங் கைத்தான் ஜெயித்திருக்கிறார். அதிலும் படத்தில் வரும் வசனங்களும், காமெடி காட்சிகளை ரசிகனை வெகுவாக கவர்ந்திருக்கிறது. முதல்பாதி முழுக்க காமெடி காட்சிகளுடன் சிரிப்பொலியில் தியேட்டரே அதிருகிறது. அதேசமயம், பின்பாதி ரசிகர்களுக்கு சற்றே மெதுவாக நகருவது சலிப்பை தட்டுகிறது. மற்றபடி ஒரு அழகிய காதல் கதையுடன், கொஞ்சமல்ல நிறையவே காமெடியையும் கலந்து பழைய ‛ஒயினை' புதிய பாட்டிலில் கலந்து ரசிகர்களுக்கு பக்கா விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் சாசாங்.
மொத்தத்தில், ‛பத்ரிநாத் கி துல்கஹியா' - ரசனை!