விமர்சனம்
ரேட்டிங் - 3.5/5
குமுதம் சினி விமர்சனம்
அவதார், டென் கமாண்ட்மென்ட்ஸ் போன்ற ஹாலிவுட் பிரமாண்டங்கள் வரிசையில் நான் ஈ இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலியையும் சேர்க்கலாம். ஒரு சரித்திரக் கதையை இவ்வளவு பிரம்மாண்டமாக இந்தியாவில் யாரும் தந்ததில்லை.
ஒரு நாட்டுக்காக பங்காளிகள் இருவர் மோதிக் கொள்வதுதான் கதை. பாகுபலியாக வரும் பிரபாஸும், பல்லால தேவனாக வரும் ராணா டகுபதியும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். மன்னர் பதவி கிடைக்காததால் வஞ்சமாக பாகுபலியைக். கொன்ற பல்லாலதேவன் மன்னனாகிறான். கூடவே பாகுபலியின் மனைவி தேவசேனாவையும் சிறைவைக்கிறான். தப்பித்த குழந்தை பாகுபலி தன் தாயையும் தாய் நாட்டையும் மீட்க மீண்டும் நாட்டிற்குள் வருகிறான். மீதியைத் தெரிந்து கொள்ள இரண்டாம் பாகம் வரை காத்திருக்க வேண்டுமாம்.
பிரபாஸும் ராணாவும் கதைக்கும் அந்த ராஜபுத்திர பாத்திரங்களுக்கும் கச்சிதம். தாய் தேவசேனாவாக வரும் அனுஷ்காவின் கோபமும் ரம்யாகிருஷ்ணனின் வீரமும் புல்லரிக்க வைக்கிறது. கட்டப்பாவாக வரும் சத்யராஜூம், ராஜதந்திரியாக வரும் நாசரும் அந்தந்த பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். காதலியாக வரும் தமன்னாவின் வீரமும் அழகும் ரசிக்க வைக்கிறது.
கோட்டைக் கொத்தளங்களும், போர்க்களமும், போர்ப்படையும் வரலாற்றுக் காலத்திற்க்கே அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். போர்க்காட்சிகளில் எம்.எம். கீரவாணியின் இசை பிரமிப்புக்கு உயிரோட்டம் தருகிறது.
பிரமாண்டமான நகரம், பழங்காலத்து ஆடைகள், போர்த்தளவாடங்கள், யானைகள், குதிரைகள், நீர்வீழ்ச்சி என்று எல்லாமே பிரமாண்டம். ஒரு மாபெரும் யுத்த களத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குநர். ஆனால் சென்டிமெண்டுகளுடனும் பழைய உறவுப் பகையையும் மட்டுமே பிரதானமாகச் சொல்வதால் முதல் பாகத்துப்படி கதையில் புதுமை இல்லை. கொஞ்சம் அடிமைப் பெண் வாடையும் அடிக்கிறது.
பாகுபலி - பிரமிப்பு!
குமுதம் ரேட்டிங் - நன்று
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!