ப்ரூஸ் லீ படத்தின் தோல்விக்கு பின்னர் அப்படத்தின் நாயகி ராகுல் ப்ரீத்தி சிங்குடன் மீண்டும் துருவா படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் ராம் சரண். ராம் சரண் தனது அடுத்த படத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் எனும் கட்டாயத்தால் தமிழில் ஹிட்டான தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் தமிழில் வெற்றி வாகை சூடிய தனிஒருவன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மாற்றாமல் துருவா என்ற பெயரில் தெலுங்கில் உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி. துருவா படத்திற்கு நிச்சய வெற்றி எதிர்பார்க்கும் சுரேந்தர் ரெட்டி, தனிஒருவன் படத்தில் வில்லனாக அசத்திய அரவிந்த் சாமி, இசையமைப்பாளர் ஹிப்பா தமிழா ஆதி என வெற்றிக்கூட்டணியை தெலுங்கிலும் தொடர்ந்துள்ளார்.
நாட்டில் நடக்கும் குற்றங்களை ஒழிக்க நினைக்கும் மிடுக்கான போலீஸ் அதிகாரி துருவா-ஆக ராம் சரண், அவரை விடாது காதலிக்க துரத்தும் நாயகி இஷிகா-வாக ராகுல் ப்ரீத்தி சிங், குறுக்கு வழியில் புகழின் உச்சியை அடைந்த சித்தார்த் அபிமன்யு-ஆக அரவிந்த் சாமி.
போலீஸ் வேலையில் சேரும் முன்னரே துருவா தனது நண்பர்களுடன் இணைந்து நகரத்தில் நடக்கும் குற்றங்களை களைகின்றார். ஐ.பி.எஸ் அதிகாரியாக பதவி ஏற்றதும் தனக்கான எதிரியாக சித்தார்த் அபிமன்யுவை தேர்வு செய்யும் துருவா, நேர்மையான இளம் விஞ்ஞானி எனும் சித்தார்த்தின் பொய்முகத்தை கிளித்தெறிய போராடுகின்றார். இப்போராட்டத்தில் தனது நண்பனையும் இழக்கும் துருவா சோகத்திலிருந்து மீண்டு சித்தார்த்தை வெற்றி கொண்டாரா? இஷிகா துருவாவை தனது காதல் வலையில் வீழ்த்தினாரா என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பான விடையாக அமைகின்றது துருவா படத்தின் மீதி பாதி.
போலீஸ் அதிகாரியாக ராம் சரண் இதற்கு முன்னர் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும் இப்படத்தில் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடுகின்றார் ராம் சரண். அதிலும் அரவிந்த் சாமிக்கு ஈடுகொடுத்து நடிக்க ராம் சரண் மெணக்கெடிருப்பது கண்கூடாக தெரிகிறது. தமிழில் அரவிந்த் சாமிக்கு தனிஒருவன் திரைப்படம் நல்ல திருப்புமுணையாக அமைந்தது. அதே போல் துருவா படத்திலும் தனித்து தெரிகின்றார் அரவிந்த் சாமி. அரவிந்த் சாமிக்கு பின்னணி பேசியுள்ள ஹேமசந்திராவின் குரல் சித்தார் அபிமன்யுவின் கம்பீரத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கின்றது
துருவா மற்றும் சித்தார்த்திற்கிடையே நடக்கும் போராட்டங்களும் அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் சுவாரஸ்யமானவை. இருப்பினும் மெதுவாய் நகரும் முதல் பாதியும், விறுவிறுப்பாக சென்றாலும், சற்று நீளமாக தோன்றும் இரண்டாம் பாதியும் பலவீனமாக அமைகின்றது. அழகாக வந்து செல்லும் ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. துருவாவின் நண்பராக வரும் நவ்தீப், சித்தார்த்தின் தந்தையாக வரும் பூஷ்னி போன்றோர் பாத்திரம் அறிந்து பளிச்சிடுகின்றனர்.
தனது பின்னணி இசையால், காட்சியமைப்புகளுக்கு உயிர் ஊட்டியுள்ள இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி அதே கவனத்தை பாடல்களுக்கும் செலுத்தியிருக்கலாம். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி, துருவா ரீமேக் என்பது தெரியாமல் இருக்க பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அம்முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார் சுரேந்தர் ரெட்டி. ராம் சரண் தனது உழைப்பிற்கேற்ப இழந்த வெற்றியை மீண்டும் பெற்றுள்ளார்.
துருவா - தெலுங்கிலும் தனி ஒருவனாக ஜொலிப்பான்