தினமலர் விமர்சனம் » மாவீரன்
தினமலர் விமர்சனம்
தெலுங்கில் சிரஞ்சீவியின் வாரிசு ராம்சரண் நடித்து சக்கைபோடு போட்ட "மஹதீரா" பிரமாண்ட படத்தின் தமிழாக்கம் தான் "மாவீரன்!"
கதைப்படி 400 வருடங்களுக்கு முன்பு ராஜபரம்பரையில் வளர்ந்து, காதலித்து கரம்பிடிக்க முடியாமல் போன ஒரு ஜோடி, பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு இந்த நவீன யுகத்தில் இனம் கண்டு, அன்று பிரிந்த இடத்திலேயே சேருவதுதான் "மாவீரன்" படத்தின் மொத்த கதையும்!
ராஜ பார்த்திபன் - ஹர்ஷா என இரட்டை வேடத்தில் முப்பிறவியிலும், இப்பிறவியிலும் ராம் சரண் ஹீரோவாக பிச்சி பெடலெடுத்திருக்கிறார் மனிதர், மெய்யாலுமே மாவீரன் தான் என சொல்லுமளவிற்கு போர்க்காட்சிகளில் பலே பலே... சொல்ல வைத்திருக்கிறார். நடிப்பிலும், துடிப்பிலும் ராம்சரண் நம்மூர் ஹீரோக்களையே மிஞ்சி விடுகிறார் என்றால் மிகையல்ல!
மித்ராவிந்தா - இந்து எனும் இரட்டை வேடங்களில் காஜல் அகர்வால் கதாநாயகியாக கலக்கி இருக்கிறார். இவர்களைப்போன்றே தேவ்கில், ஸ்ரீஹரி, சரத்பாபு, முமைத்கான், கிம்ஷர்மா, ஹேமா உள்ளிட்ட பலரும் நம்மை 400 ஆண்டுகளுக்கு முன் அழைத்து செல்வது பிரம்மையா? பிரமாண்டமா...? தெரியவில்லை!
மரகதமணியின் இசை, செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, கே.பாக்யராஜின் வசனம், எஸ்.ரவீந்தரின் கலை இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்டுகளுடன் எஸ்.எஸ்.ராஜ மெளலியின் இயக்கம் ஜொலிக்கிறது மாவீரன் படத்தில்.
மொத்தத்தில் "மாவீரன்" - மறக்க முடியாத "சூரன்!!"