2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விக்ரம் பிரபு, ஹன்சிகா மற்றும் பலர்
இயக்கம் - தினேஷ் செல்வராஜ்
இசை - எல்வி முத்துகணேஷ்
தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்
வெளியான தேதி - 14 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் நிறையவே வந்திருக்கிறது. ஆனால், என்கவுன்டர்ஐ மையமாக வைத்து நிறைய படங்கள் வரவில்லை. இந்தப்படம் காக்கிச் சட்டை அணியாத ஒரு போலீஸ் படம். நாயகன் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றாலும் படத்தில் அந்த என்கவுன்டர்கள் மான்டேஜ் ஆக மட்டுமே வந்து போகிறது. மற்றபடி இது ஒரு எமோஷனல் படம் மட்டுமே.

கடந்த ஆண்டு வெளிவந்த நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ், இயக்கியிருக்கும் இரண்டாவது படம் துப்பாக்கி முனை.

மும்பையில் ஆரம்பமாகும் கதை, அப்படியே ராமேஸ்வரம் நோக்கி பயணிக்கிறது. மீதிக் காட்சிகள் அனைத்தும் கிளைமாக்ஸ் வரை அங்கேயே நகர்கிறது. பரந்த கடல் பரப்பு என்பதால் அதிகமான ஹெலிகேம் ஷாட்டுகளை வைத்து ராமேஸ்வரம் அழகை கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி.

படத்தின் தலைப்பு துப்பாக்கி முனை என்பதால் படத்தில் பல ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. மாபெரும் தவறு செய்பவர்களைத் தண்டிக்கத்தான் என்கவுன்டர் நடத்தப்படுகிறது. அதே சமயம் தவறே செய்யாத ஒரு நிரபராதியை அதிலிருந்து காப்பாற்றுவதும் ஒரு போலீசின் வேலைதான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

மும்பையில் உதவி கமிஷனராக இருப்பவர் விக்ரம் பிரபு. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். நிறைய பேரை என்கவுன்டரில் தீர்த்துக் கட்டியிருக்கிறார். அதனால், மகனை விட்டும் பிரிகிறார் அம்மா. ஒரே பார்வையில் காதலித்த ஹன்சிகாவும், அதன் காரணமாக பிரிந்து விடுகிறார். அம்மா, காதலியைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவுக்கு, ராமேஸ்வரத்தில் ஒரு சிறுமியின் கற்பழிப்பு கொலை வழக்கு பற்றிய வழக்கு கொடுக்கப்படுகிறது. அதில் குற்றவாளியாக சிக்கிய ஷா, நிரபராதி என்பது விக்ரம் பிரபுவுக்குத் தெரிய வர, என்கவுன்டரிலிருந்து அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விக்ரம் பிரபுவின் உயரத்திற்கும், கடுப்பான பார்வைக்கும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாபாத்திரம் பொருத்தமாகவே அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் தன்னை எதிர்க்க வரும் சுமார் ஐம்பது பேரை தனியாளாக நின்று சண்டையிடும் போது, அது நம்பும்படி இருக்கிறது. அம்மா, காதலி பிரிந்து போன நிலையில் அந்த சோகத்தை மனதுக்குள் தேக்கி வைத்திருக்கிறார். தான் செய்வது எவ்வளவு சரியானது என்பதை சமயம் வரும் போது அம்மாவுக்கும், காதலிக்கும் புரிய வைக்கிறார். இந்த துப்பாக்கி முனை விக்ரம் பிரபுவுக்கு திருப்பு முனையாக அமைந்தால் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

படத்தில் நாயகி என்று சொல்லுமளவிற்கு ஹன்சிகா. அவருக்கும் விக்ரமுக்கும் இடையில் மூன்றே காட்சிகள்தான். முதல் காட்சியில் மோதுகிறார்கள், இரண்டாவது காட்சியில் காதலில் விழுகிறார்கள், மூன்றாவது காட்சியில் பிரிந்து விடுகிறார்கள். பின்னர் ஓரிரு காட்சியில் வருகிறார் ஹன்சிகா. இப்படிப்பட்ட முக்கியத்தும் இல்லாத கதாபாத்திரத்தில் ஹன்சிகா எதற்கு என்று தான் தெரியவில்லை. படத்தில் காதல் பாடல்களுக்கும் வேலையில்லை.

வில்லனாக வேலராமமூர்த்தி. வில்லனுக்கு ஏதாவது வித்தியாசமான பாத்திரப் படைப்பு கொடுக்க வேண்டும் என அவர் வசனம் பேசும்போதெல்லாம் நமசிவாயா என்று சொல்ல வைக்கிறார்கள். ஒரு காட்சியில் வீணை வேறு வாசிக்கிறார். ஒருவேளை ராவணன் போல காட்ட முயற்சித்திருக்கிறார்களோ ?.

படத்தில் நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்பவர் எம்.எஸ்.பாஸ்கர். பொதுவாக தமிழ்ப் படங்களில் கிளைமாக்சில் நாயகனை பேச விட்டுத்தான் படத்தை முடிப்பார்கள். இந்தப் படத்தில் அதை பாஸ்கர் செய்கிறார். அதனால், முடிவில் அவருக்கே முக்கியத்துவம் அதிகம் இருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது.

எல்வி முத்து கணேஷ் இருவரும் பின்னணி இசையில் படத்திற்கு பக்கபலமாய் இருந்திருக்கிறார்கள். படத்தில் தேவையற்ற காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் என்று எதுவுமில்லை.

நிரபராதியாக சிக்கிய ஷா-வை தப்பிக்க வைக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விக்ரம் பிரபு, அரதப் பழசான யுக்தியைக் கையாள்வது சரியில்லை. புத்திசாலித்தனமாக எதையாவது செய்திருந்தால் அது படத்திற்கு வித்தியாசமாக இருந்திருக்கும்.

துப்பாக்கி முனை - டார்கெட் மிஸ்டு!

 

துப்பாக்கி முனை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

துப்பாக்கி முனை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓