சர்கார்,Sarkar

சர்கார் - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர்
இயக்கம் - ஏ.ஆர். முருகதாஸ்
இசை - ஏ.ஆர். ரகுமான்
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்
வெளியான தேதி - 6 நவம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 43 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் அரசியலை மையமாகக் கொண்ட கதைகள் வருவது மிகவும் குறைவு தான். அப்படியே வந்தாலும் அவை நேரடியாக கருத்துக்களை வெளியிடும் படங்களாக இருக்குமா என்பதும் சந்தேகம் தான். இந்த சர்கார் படத்தில் நேரடியாக ஆளும் கட்சியை குறை சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்குக் காரணமான மக்களையும் குறை சொல்கிறார்கள்.

ஓட்டு போடாத ஒவ்வொருவரும் முதல் திருடன் என எதற்கு நாம் ஓட்டுப் போட வேண்டும் என வாக்களிக்கவே வராதவர்களை நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு கேள்வி கேட்கிறார் நாயகன்.

விஜய்க்கு அரசியல் ஆசை எட்டிப் பார்க்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. இதுவரை தன் படங்களில் ஒரு ரவுடியையோ, பிசினஸ்மேனையோ, அரசியல்வாதியையோ எதிர்த்து வந்த விஜய், இந்தப் படத்தில் நேரடியாக முதல்வரையே எதிர்க்கிறார். ஆளும் கட்சியின் அலுவலகத்திற்கே சென்று எதிரிகளை பந்தாடுகிறார், ஆளும் கட்சியின் கூட்டத்திற்கே சென்று அமர்ந்து கேள்வி கேட்கிறார். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்கும் காட்சிகள் இருந்தாலும் படத்தில் விஜய் செய்வதால் அதெல்லாம் நடக்கும் என்ற ரீதியில் சினிமாத்தனமான காட்சிகளால் படத்தை நிரப்பியிருக்கிறார்கள்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவருக்காக படங்களை எடுப்பார். இந்த முறை முதல் முறையாக ஹீரோவுக்காக ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார். இது முருகதாஸ் படம் என்பதை விட விஜய் படம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சர்கார் கதை சர்ச்சையில் பாக்யராஜ சொன்ன செங்கோல் கதை போலத்தான் இந்தப் படத்தின் கதை இருக்கிறது. ஹீரோவின் ஓட்டை ஒருவர் கள்ள ஓட்டு போட்டு சென்று விட , நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்தும் ஹீரோ, தொடர்ந்து வில்லனான அரசியல்வாதிக்கு எதிராக போராடி தேர்தலில் நின்று வெற்றி பெற்று தனக்கு பிடித்தவரை கொண்டு சர்க்கார் அமைப்பது தான் சர்க்கார் மற்றும் செங்கோல் ஆகியவற்றின் மூலக்கதை என்று பாக்யராஜ் தெரிவித்திருந்தார். அதுதான் இந்த சர்கார் படத்தின் கதையும் கூட.

ஜிஎல் என்ற உலகின் நம்பர் ஒன் கம்பெனியில் சிஇஓ-வாக இருப்பவர் தமிழர் விஜய். ஓட்டு போடுவதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகிறார். ஆனால், அவர் ஓட்டு போடுவதற்கு முன்பு அவருடைய ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிடுகிறார்கள். அதனால், ஆத்திரமடையும் அவர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து அவருக்கு மீண்டும் வாக்களிக்கும் உரிமை கோருகிறார். அது போலவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் வாக்களிக்கும் உரிமையைக் கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள். இதனால், நீதிமன்றம் அப்போது நடந்த தேர்தலை நிறுத்திவிட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிடுகிறது. மீண்டும் முதல்வராக பழ.கருப்பையா பதவி ஏற்கப் போகும் நேரத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

முதல்வர் பழ.கருப்பையாவை எதிர்த்து விஜய் தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார். ஆனால், பழ. கருப்பையா விடுக்கும் மிரட்டல் காரணமாக 234 தொகுதிகளிலும் அவரது கட்சியை எதிர்த்து ஆட்களை நிறுத்துகிறார். இதன் பின் நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் தான் சர்கார்.

சிஇஓ சுந்தர் ராமசாமி ஆக விஜய். தன்னுடைய இளமைத் தோற்றத்தைக் கொஞ்சம் தியாகம் செய்து லேசாக நரைத்த தாடியுடன் தோற்றமளிக்கிறார். ஆனால், நடனத்திலும், சண்டைக் காட்சியிலும் அதே இளமை விஜய் தான். இதற்கு முன் பார்த்த விஜய்யை விட இந்த சர்கார் விஜய் சற்றே உயர்ந்து காணப்படுகிறார். கதாபாத்திர வடிவமைப்பிலும் சரி, வசனங்களிலும் சரி வேறு ஒரு மெச்சூரிட்டி காணப்படுகிறது. படத்தில் அதனால்தான் சில்லியான காதல் காட்சிகளைக் கூட வைக்கவில்லை போலிருக்கிறது. தன் அரசியல் ஆசைக்கு இந்தப் படம் மூலம் விஜய் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

படத்தில் நாயகி எதற்கு என்று தெரியவில்லை. இரண்டு பாடல்களில் மட்டும் நடனமாடுவதால் கீர்த்தி சுரேஷ்தான் நாயகி என சொல்ல முடிகிறது. மற்றபடி கூட்டத்துடன்தான் நிற்கிறார், அங்கிருந்துதான் வசனம் பேசுகிறார். விஜய்யுடன் தனியாக இரண்டு காட்சிகளில்தான் நடித்திருப்பார். கீர்த்தியின் மேக்கப்பும், ஆடைகளும் மிகவும் சுமார் ரகம்தான். விஜய் படம் என்பதால் நடிக்க சம்மதித்திருப்பார் போலிருக்கிறது.

படத்தின் வில்லன் பழ.கருப்பையாதான். ஆனால், கடைசியில் அந்த வில்லனுக்கே வில்லியாக வருகிறார் வரலட்சுமி. அவன் கார்ப்பரேட் கிரிமினல்னா, நான் கருவிலேயே கிரிமினல் என வசனம் பேசி கைத்தட்டல் வாங்கிவிடுகிறார்.

தமிழ் சினிமாவுக்கு புதிய வில்லனாக பழ. கருப்பையா. தமிழ்நாட்டின் முதல்வராக நடித்திருக்கிறார். பழுத்த அரசியல்வாதியாக தோற்றத்திலும், நடிப்பிலும் தெரிகிறார். நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது, நிஜமாகவே அரசியல்வாதி என்பதால், அப்படியே வந்து போயிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ராதாரவி, வழக்கம் போல புதிய விக்குடன், புதிய மேனரிசத்துடன் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கள்ள ஓட்டு போட்ட யோகி பாபு, கார்ப்பரேட் சிஇஓ நண்பராக மாறுவது முரண்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. முதல் பாதியில் அடிக்கடி பாடல் வருவது போன்ற ஒரு உணர்வு. படத்தில் ஒரு மெலடி கூட இல்லை என்பது ஆச்சரியம். எல்லா பாடல்களிலுமே ஆங்கிலத்தின் தாக்கம் அதிகம். ஒரு விரல் புரட்சியே.. அர்த்தமான பாடலாக அமைந்துள்ளது.

இடைவேளை வரை விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தக் கூடிய கதை. இடைவேளைக்குப் பின் தேர்தல், அரசியல் என பரபரப்பாக நகர வேண்டிய காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை விஜய் இல்லாத காட்சிகளை ஒரு விரல் வைத்து எண்ணிவிடலாம். படம் முழுவதையும் விஜய்யே ஆக்கிரமித்திருக்கிறார். முருகதாஸ், ஜெயமோகன் அரசியல் வசனங்கள் ஆங்காங்கே யோசிக்க வைக்கின்றன.

20 சதவீத மக்கள்தான் மற்ற 80 சதவீத மக்களையும் சேர்த்து யார் ஆள்வது என்று முடிவெடுக்கிறார்கள். அதனால், ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும் என்ற கருத்தைக் கைதட்டி வரவேற்கலாம்.

சர்கார் - சறுக்க மாட்டார்

 

சர்கார் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சர்கார்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

விஜய்

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியரின் மகன் நடிகர் விஜய். 1974ம் ஆண்டு ஜூன் 22ம்தேதி பிறந்த இவரது இயற்பெயர் ஜோசப் விஜய். 1984ம் ஆண்டு டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், விஜயகாந்த் நாயகனாக நடித்த வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்னர் 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தைம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இயக்கினார். ஆரம்ப காலத்தில் தந்தையின் இயக்கத்தில் நடித்து வந்த விஜய் பின்னர் துறையில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். விஜய்யின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்றும் இளைய சூப்பர்ஸ்டார் என்றம் பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பூவே உனக்காக, லவ் டூடே, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ், கில்லி, மதுர, திருப்பாச்சி, போக்கிரி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் விஜய் தனது படங்களில் இடம் பெறும் ஏராளமான பாடல்களையும் பாடியிருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓