Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கத்தி

கத்தி,Katthi
‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யுடன், இயக்குநர் முருகதாஸ் கூட்டணி அமைத்துள்ள படம் ‘கத்தி’.
11 நவ, 2014 - 16:05 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கத்தி

தினமலர் விமர்சனம்


குறையொன்றுமில்லை, வெண்ணிலா வீடு என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கத்தி! விஜய்யின் முந்தைய படங்களான காவலன், துப்பாக்கி, தலைவா படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா?, வெளிவராதா.? என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது!!


வட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.


அதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான்! ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார்.? கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, கத்தி மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.


விஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் கத்தி கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தியின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே!


கதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்ஸை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களின் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். சமந்தாவின் நான் ஈ பிளாஷ்பேக் சூப்பர். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளந்து கட்டியிருக்கிறார்.


தமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லொக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்தியாவாகவே இருப்பதின் மர்மம் என்ன.? விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.


பத்திரிகை மற்றும் மீடியாக்களின் மீது நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் அப்படி என்ன கோபமோ.? ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும்! ஏன் இந்த கொலவெறி.?


குளிர்பாண கம்பெனிகளின் தண்ணீர் திருட்டு, விவசாய நில திருட்டு, புரட்டு என ஏகப்பட்ட திருட்டுகளையும், புரட்டுகளையும் சொல்லி நியாயம் பேசி இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இனியாவது கதைதிருட்டு குற்றச்சாட்டுகளில் அடிக்கடி சிக்காது இருக்க வேண்டுமென்று, ஆங்காங்கே ஒரே கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தும் கத்தி படக்காட்சிகள் போரடிக்கும்போது நம்மையும் அறியாமல் தோன்றுகிறது. படம் சில இடங்களில் அநியாயத்திற்கு ஸ்லோவாக தெரிவது கத்தியின் பலமா.? பலவீனமா தெரியவில்லை.!


ஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லொக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லொகேசன்களிலும் சரி பிய்த்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.


அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் அபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது போன்று தெரிந்தாலும் விஜய் படங்களின் இசையில் வழக்கமாக இருக்கும் கொண்டாட்டம் கத்தியில் சற்றே மிஸ்ஸிங்!


ரமணா, 7ம் அறிவு, துப்பாக்கி... என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித புரட்சி கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கத்தி படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், டபுள் ஆக்ட்டு விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.


ஆகமொத்தத்தில், கத்தி - காலத்திற்கேற்ற புத்தி! - கலெக்ஷ்ன் உத்தியும் கூட...!!---------------------------------------------------------------------குமுதம் சினி விமர்சனம்
ரொம்ப ரொம்ப பழைய ஆள் மாறாட்டக் கதைதான் என்றாலும் விவசாயிகளின் பிரச்னையை மையமாக வைத்து "போராடியிருப்பதற்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கும் நடிகர் விஜயக்கும் பாராட்டு நிச்சயம்.


கொல்கத்தா சிறையிலிருந்து போலீஸை ஏமாற்றி தப்பி சென்னை வந்து பாங்காக் செல்ல முயற்சிக்கும் கதிரேசன் -விஜய். விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய நீராதாரத்தை, கோலா தயாரிக்க உறிஞ்சி எடுக்கும் கார்ப்பரேட் கம்பெனியோடு போராடும் ஜீவானந்தம்-விஜய். ஜீவாவை எதிரிகள் சுட, தப்பிவந்த கதிரேசன் ஜீவாவாக ஆள்மாற்றம் செய்து தன்னூத்து கிராம மக்களையும் விவசாயத்தையும் முதியோர் இல்லம் உட்பட்ட மக்களையும் காப்பாற்ற "படும்பாடு தான் கதை.


இரட்டை வேடம் விஜய்க்கு. நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்டுகிறார். ஆனால் அவரது உடல்மொழி அவரது பழைய படங்களையே நினைவூட்டுகிறது. குறிப்பாக "துப்பாக்கி. என்றாலும் சண்டையில் ஆக்ரோஷம், நடனத்தில் வேகம், வசனத்தில் சூடு என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். 2ஜி போன்ற ஊழல் சமாச்சாரத்தைப் பேச துணிச்சல் வேண்டும்.


சமந்தாதான் பாவம், ஏற்கெனவே காட்டிவிட்ட கவர்ச்சிபோக, மிச்சம் மீதியை மட்டுமே இதில் இறக்குமதி பண்ணியிருக்கிறார்.


சதீஷ் அடிக்கும் காமெடி சில இடங்களில் ஓ.கே. நீல் நித்தின் முகேஷின் வில்லத்தனம் சில இடங்களில் மட்டுமே கவனம்கொள்ள வைக்கிறது. விஜய்க்காக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் முதியோர் இல்ல முதியவர்களும் கச்சித நடிப்பு.


தன்னூத்து கிராமம், டான்ஸ், சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவு அருமை.


இசை அனிருத், "செல்ஃபிபுள்ள மூலம் இளசுகளின் நாடி நரம்புகளையும் ஆட வைத்துவிட்டார்.


நீர்ப்பிரச்னை, அதை நகரமக்களுக்கு உணர்த்த முதியோரை வைத்துப் போராட்டம், 2 ஜி உள்ளிட்ட ஊழல் விஷயங்கள் என்று அதிரவைத்த இயக்குநர், வலுவான திரைக்கதை அமைக்காமல் தடுமாறுவது தெரிகிறது. தேவையற்ற காமெடி, எரிச்சலான காதல் காட்சிகளை தவிர்த்திருக்கலாமே!


கத்தி: கூர்மை கம்மி.


குமுதம் ரேட்டில் : ஓ.கே


----------------------------------------------------------------கல்கி சினி விமர்சனம்
திருநெல்வேலி "தானுர்த்தி கிராமத்தில் மல்டி லெவல் கம்பெனி ஒன்று ஏழைகள் நிலத்தைக் கையகப்படுத்தி குளிர்பான கம்பெனி ஒன்றை நிறுவ முயற்சிக்கிறது. எம்.எஸ்.சி. படித்த இளைஞனான ஜீவானந்தம் (விஜய்) அதைத் தடுத்து நிறுத்தி ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவதுதான் "கத்தி படத்தின் கதை, திரைக்கதை.


விஜய் ஜீவானந்தமாகவும், கத்தி கதிரேசனாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில் ஜீவானந்தம் கதாபாத்திரம் யார்? அவர் என்ன சொல்கிறார் என்று திரைக்கதை விரியும்போதுதான் படம் நிமிர்ந்து உட்காருகிறது. இன்னொரு விஜய்யும் "கத்தி கதிரேசன் கொல்கத்தா சிறையில் இருந்து தப்பித்து வந்து, ஜீவா போல் வேடம் போட்டு, அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் பணிபுரிவது, சமந்தாவைக் காதலிப்பது, வில்லனுடன் மோதுவது என காதில் பூச்சுற்றலாகவே கதை நகரும்போது சலிப்பையே ஏற்படுத்துகிறது.


விவசாயிகள் மீடியா கவனத்தைத் திருப்ப "நீங்கள் குடிப்பது குளிர்பானம் அல்ல, ஏழை விவசாயிகளின் ரத்தம் என்று கூறி 6 பேர் உயிரை விடும்போது மனம் நெகிழ வைக்கிறது. ஜீவானந்தம் ஆன விஜய் தங்கை தமிழ் "அண்ணா, கம்யூனிசம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு, "நம்ம பசி தீர்ந்ததும் அடுத்தவங்க இட்லிக்கு ஆசைப்படுவதைத் தடுப்பதுதான் கம்யூனிசம் என்று விஜய் அளிக்கும் வசனம் நச்!


மல்டிலெவல் கம்பெனி உரிமையாளரான வில்லனுடன் திருநெல்வேலி சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் விஜய்யிடம், "அந்த இடத்தை விற்க உதவி செய். உனக்கு 3 மடங்கு லாபம் தருகிறேன் என்று பேரம் பேச... விஜய் மறுக்க.. "உனக்கு இந்த இடத்தில் உரிமை இருக்கா? என்று விஜய்யிடம் கேட்க, விஜய் "இல்லை என்று தலையாட்ட, அப்படி என்றால் "4 ஜாதி 2 மதத்தில் உனக்கு என்ன உறவு? என்று இன்ஸ்பெக்டர் கேலியாய் கேட்பது, இன்றைய நாட்டு நடப்பை புட்டுப்புட்டு வைக்கிறது.


காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பிரச்னை நகரத்தில் வாழும் மக்களுக்குத் தெரிவதில்லை. ஒருநாள் சென்னையில் தண்ணீர் வரவில்லை என்றால் என்ன கூப்பாடு போடுகிறார்கள். எத்தனையோ விவசாயிகள் தண்ணீர் இன்றி தங்கள் இடத்தை, சொந்த மண்ணைவிட்டு வேறு ஊரில் கூலி வேலைக்குப் போகிறார்கள் என்று விஜய்யைப் பேச வைத்து நிலத்தடி நீரைப் பற்றிய விழிப்புணர்வைப் படமாக எடுத்துப் பாடமாகக் காட்டியதற்கு சபாஷ் சொல்லலாம்.


அனிருத்தின் இசை படத்துக்குப் லாபம். சமந்தா கவர்ச்சிக்கு மட்டுமல்ல, கதைக்கும் சரியாகப் பயன்படத்தப் பட்டிருக்கிறார்.


சென்னையில் மூன்று நாள் தண்ணீர் இல்லாமல் செய்தால் மீடியா நம்மைத் திரும்பிப் பார்க்கும் என்று விஜய் செய்யும் ஐடியா பூச்சுற்றல், அரசாங்கமும் போலீஸும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகக் காட்டியிருப்பது விவாதத்துக்குரியது.


கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் நாயகன் கதிரேசன் சண்டை போடும்போது இன்னொரு நாயகன் ஜீவா வேடிக்கை பார்ப்பது உறுத்தலாயிருக்கிறது. எது எப்படியோ...
கத்தி - பதம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

கத்தி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in