தமிழில் வெளியான ‛மெளன குரு' படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ், ஹிந்தியில் ‛அகிரா' எனும் பெயரில் ரீ-மேக் செய்து, அதில் அருள்நிதி ரோலை சோனாக்ஷி சின்ஹாவாக மாற்றி, ஆக்ஷ்ன் படமாக கொடுத்திருக்கிறார். இந்தப்படம் ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, ஜோத்புரில் அம்மாவுடன் வசித்து வருகிறார் அகிரா சர்மா எனும் சோனாக்ஷி சின்ஹா. ஒருநாள், மும்பையில் வசிக்கும் அவரது சகோதரர், அகிராவையும், அம்மாவையும் மும்பைக்கு அழைத்து வர இங்கேய ஒரு கல்லூரியில் சேருகிறார் அகிரா. கல்லூரி வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. கூட சிட்டி பெண்களின் டார்ச்சர் இருந்த போதும், அதை சமாளித்து பதிலடி தருகிறார் அகிரா. மற்றொருபுறம் உதவி கமிஷனரான கோவிந்த் ரானே எனும் அனுராக் காஷ்யாப், பணத்திற்காக தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சில கொலைகள் செய்கிறார். இதை அவரது காதலியான மாயா எனும் ராய் லட்சுமி வீடியோ எடுக்கிறார். அந்த வீடியோ அவரிடமிருந்து தொலைந்து அகிரா வசம் சிக்குகிறது. அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை. இதில் சோனாக்ஷிக்கும், அனுராக் காஷ்யாப்பிற்கும் இடையே நடக்கும் முட்டல் மோதல் சம்பவங்கள் பரபர ஆக்ஷ்ன் த்ரில்லராக சொல்லப்பட்டிருக்கிறது அகிரா படத்தின் கதை.
இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான ஆக்ஷ்ன் சோனாக்ஷி சின்ஹாவை இப்படத்தில் பார்க்கலாம். ஆக்ஷ்ன் காட்சிகளில் எல்லாம் சோனாக்ஷி சிறப்பாக செய்திருக்கிறார். அதில் குறையேதும் இல்லை, அதேசமயம் ஆக்ஷ்ன் காட்சிகளில் அவர் காட்டிய அதிரடியை கொஞ்சம் நடிப்பிலும் காட்டியிருந்தார் என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
சோனாக்ஷியை விட நம் மனதில் அதிகம் பதிபவர் வில்லன் அனுராக் காஷ்யாப் தான். இயக்குநரான அனுராக், இந்தபடத்தில் ஒரு நடிகராக அதுவும் வில்லனாக தன் வில்லத்தன நடிப்பால் அனைவரையும் கவருகிறார். அவரைப்போலவே அமித் ஷாவின் நடிப்பும் ஓ.கே.,
விஷால் சேகரின் பின்னணி இசையில் சத்தம் தான் அதிகம் உள்ளது. சுபம் அகர்வாலின் ஒளிப்பதிவு பக்கா. ஸ்ரீகர் பிரசாத், தன் எடிட்டிங் வேலையில் இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டியிருக்கலாம்.
முதன்முறையாக பெண்ணை மையமாக வைத்து கதையிருக்கும் இயக்குநர் முருகதாஸ் அருமையான கதைக்களத்தை கையிலெடுத்து, திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பி விட்டார். குறிப்பாக படத்தின் முன்பாதியில் இருக்கும் பரபரப்பு, விறுவிறுப்பு பின்பாதியில் இல்லாதது சற்றே ஏமாற்றம்.
ஆனாலும், ‛அகிரா' படத்தின் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காகவும், பெண்கள் தன்னந்தனியாக இந்த சமூகத்தில் எப்படி போராட வேண்டும், தங்களை தற்காத்து கொள்ள தற்காப்பு கலைகள் எல்லாம் பயின்று கொள்ள வேண்டும் போன்ற விஷயங்களை சொல்லியிருப்பதற்காகவே ‛அகிரா'வை பாராட்டலாம், பார்க்கலாம்.