2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அதர்வா, ஹன்சிகா, யோகி பாபு
தயாரிப்பு - ஆரா சினிமாஸ்
இயக்கம் - சாம் ஆண்டன்
இசை - சாம் சிஎஸ்
வெளியான தேதி - மே 11, 2019
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

பெண்கள் மீதான வன்முறை நாட்டில் அடிக்கடி நடந்து வருகிறது. பெண்கள் கடத்தல், சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மருமகள்கள் மீதான கொடுமை என நாளிதழ்களைத் திறந்தாலே இப்படிப்பட்ட செய்திகளை தினம் தினம் படிக்க வேண்டியிருக்கிறது.

ஹாட் டாபிக் ஆக இருக்கும் இந்த விஷயத்தை அப்படியே ஒரு படமாக எடுத்தால் என்ன இயக்குனர் சாம் ஆண்டன் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஒரு சிறுமி கடத்தல் என்பதை மையமாக வைத்து இந்த 100 படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இடைவேளை வரை படம் எதை நோக்கிப் போகிறது என்பது யாருக்குமே புரியாது. ஒரு சுவாரசியமான காட்சிகள் கூட அதுவரையில் படத்தில் இடம் பெறவில்லை. இடைவேளைக்குப் பின்னர் தான் இயக்குனர் கதையைப் பற்றி யோசித்திருப்பால் போலிருக்கிறது. பின்னர்தான் ஓரளவிற்கு பரபரப்பாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். யார் வில்லன் என யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் சிறப்பு.

போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் வேலைக்குச் சேர்கிறார் அதர்வா. 100க்கு வரும் அழைப்புகளுக்குப் பதில் சொல்வது அவருடைய வேலை. அவருக்கு வரும் 100வது தொலைபேசி அழைப்பில் ஒரு பெண், தன்னை கடத்தியுள்ளார்கள் என்றும், தன்னை வந்து காப்பாற்றும்படியும் கேட்கிறார். அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் அதர்வா. அந்தப் பெண்ணைப் போல் வேறு சில பெண்களும் அப்படி கடத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அப்படி கடத்தலில் ஈடுபடுவது யார் என்பதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

அதர்வாவை போலீஸ் உடையில் பார்ப்பது பொருத்தமாக இல்லை. அவரும் ஆரம்பத்தில் விறைப்பாக இருந்து அதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்குகிறார். ஒருவேளை இடைவேளை வரை படத்தை காமெடிப் படமாக எடுக்கலாம் என நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்புறம் வேண்டாம், சீரியசான படமாகவே கொடுப்போம் என முடிவெடுத்து மாற்றியிருப்பார்களோ ?. ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதர்வா பாஸ் மார்க் வாங்குகிறார். பாலா படத்தில் நடித்த பிறகும் சரியான கதையைத் தேர்வு செய்யாத நடிகராக அதர்வா இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தில் ஹன்சிகா இருக்கிறார் என்று மட்டும்தான் எழுத முடியும். அதிலும் அழகாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. உடல் இளைத்து, முகம் சுருங்கி, என்ன ஆச்சு ஹன்சிகாவிற்கு. மொத்தமாக 5 காட்சிகள் வந்திருந்தால் அதிகம். அதிலும் இடைவேளைக்குப் பிறகு எங்கே போனார் என்றே தெரியவில்லை.

யோகி பாபுவும் படத்தில் போலீசாம். அதுவும், அவருடைய அதே ஹேர்ஸ்டைலில் தொப்பி மாட்டிக் கொண்டு வந்து நிற்கிறார். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இது மாதிரியான கொடுமைகளை தமிழ் சினிமா பார்க்க வேண்டுமா. போலீஸ் என்பதன் மரியாதையையே இப்படி கெடுப்பதை என்னவென்று சொல்வது ?. ராதாரவி, போலீஸ் உடை போடாத அதிகாரி. கிளைமாக்சில் இவர்தான் வில்லனை சுடப் போகிறார் என்பது அவர் பேசும் வசனத்திலேயே புரிந்துவிடுகிறது.

படத்தில் வில்லன் யார் என்பது மட்டும் சஸ்பென்சாக இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் மகேஷ், அதர்வாவின் நண்பராக, இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். இவர்தான் வில்லனாக இருப்பாரோ என நினைத்து அதில் டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். வில்லன் யார் என்பதில் இருக்கும் அந்த ஒரு சஸ்பென்சையும் உடைத்துவிடுவது நன்றாக இருக்காது.

சாம் சிஎஸ் படத்திற்கு இசை. அவர் இசையமைப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளலாம். அவரே பாடல்களையும் எழுதி சில பாடலாசிரியர்களின் பிழைப்பைக் கெடுப்பது சரியா?.

திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள்தான் இதுவும் ஒரு ஆக்ஷன் படம் என்பதை உணர்த்துகின்றன.

தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத்த காவல் துறை கட்டுப்பாட்டு அறைதான் படத்தின் கதைக் களம். ஆனால், அதை அவ்வளவு சாதாரணமாகவா காட்டியிருக்க வேண்டும்.

கதையைத் தேர்வு செய்வது மட்டும் சினிமா அல்ல, சுவாரசியமான காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, அர்த்தமுள்ள வசனங்கள், அற்புதமான கதாபாத்திரங்கள் ஆகியவை கலந்ததுதான் ஒரு சினிமா என இன்னும் சில இயக்குனர்களுக்குப் புரியாமல் இருப்பது ஆச்சரியம்தான்.

100 - 40/100

 

100 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

100

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓