Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டார்லிங்

டார்லிங்,Darling
30 ஜன, 2015 - 12:49 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டார்லிங்

தினமலர் விமர்சனம்


இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இசையமைத்து, கதாநாயகராகவும் நடித்திருக்கும் படம் டார்லிங். புதியவர் ஷாம் ஆண்டன் இயக்கத்தில், காதல், திகில், சென்டிமெண்ட் கலந்த பேய்படமாக வந்திருக்கும் படம் தான் டார்லிங்.


சக கல்லூரி மாணவி சிருஷ்டி டாங்கே காதலித்து ஏமாற்றியதால் தற்கொலை முடிவிற்கு வருகிறார் கதிர் எனும் ஜி.வி.பிரகாஷ் குமார். இதுஒருபக்கம், மற்றொரு பக்கம்., ஜி.வி.பிரகாஷை விழுந்து விழுந்து காதலிக்கிறார் புதுமுகம் நிஷா எனும் நிக்கி கல்ராணி. ஆனால், சிருஷ்டி டாங்கே உடனான காதலில் ஏற்கனவே சூடுபட்டதால் ஜி.வி. விலகி விலகி போகிறார். ஜி.வி. - நிஷாவின் காதலை கோர்த்து வைக்கும் முகமாக இருவருக்குமான நெருங்கிய நண்பர் பாலசரவணன், கருணாஸ் அண்ட் கோவினரை சேர்த்துக்கொண்டு, நிக்கி நிஷா - கதிர் ஜிவி. இருவரையும் புறநகரில் இருக்கும் ஒரு பங்களாவிற்கு நாம எல்லோரும் ஒருவகையில் தோல்வி அடைந்திருக்கிறோம், அதனால் எல்லோரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என அவுட்டிங் அழைத்து போகின்றார். அங்கு போய் இறங்கியதும், நிக்கியின் உண்மையான காதல் ஜி.வி.க்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய தெரிய வருகிறது. அதனால், தற்கொலையை தள்ளிப்போட்டுவிட்டு ஜி.வி. பிரகாஷ், நிக்கியை அவரது கடைசி ஆசைக்காகவும், காதலுக்காகவும் தொடும்போதெல்லாம் நிக்கியின் உடம்பிற்குள் புகுந்து கொண்டிருக்கும் ஸ்ருதியின் ஆவி, ஜி.வி.யை அறைந்து அந்தரத்தில் தொங்கவிடுகிறது. நண்பர்கள் பாலசரவணன், கருணாஸ் உள்ளிட்ட உடன் வந்தவர்களையும் முகத்தை ஆக்ரோஷமாக மாற்றிக்கொண்டு அதட்டி, அறைந்து, ஆர்ப்பாட்டம் செய்கிறது.


நிஷாவிற்குள் புகுந்து கொண்டிருக்கும் ஸ்ருதி பேய் வேறு யாருமல்ல, அதே பங்களாவில் சில மாதங்களுக்கு முன் தன் காதல்கணவர் சிவாவின் கண்ணெதிரேலேயே ஐந்து அடாவடி இளைஞர்களால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணே தான். ஜி.வி.யிடம் அந்த ஆவி, உன் காதலியை நான் தொட விடாமல் செய்வதற்கு உனக்கு இவ்வளவு கோபம் வருகிறதே... என் காதல் கணவன் கண் எதிரிலேயே என்னை கற்பழித்து என்னையும், என் கணவன் சிவாவையும் கொடூரமாக கொலை செய்தார்களே... அவர்களை பழிவாங்கிவிட்டு வா, அதன்பின் உன் காதலியுடன் நீ சந்தோஷமாக இரு... என்று சொல்லாமல் சொல்கிறது ஸ்ருதி ஆவி.


ஜி.வி.பிரகாஷ், பாலசரவணன், கருணாஸ் ஆகியோர், அந்த ஐந்து பேரையும் தேடிப்பிடித்து ஸ்ருதி அலைஸ் நிஷாவின் முன் நிறுத்தி பழிவாங்கினரா...? ஸ்ருதி ஆவி நிஷாவை விட்டு விலகியதா..? நிக்கி நிஷா, கதிர் ஜி.விக்கு கிடைத்தாரா...? என்பது தான் டார்லிங் படத்தின் திக் திக் திக்... பக் பக் பக்... மீதிக்கதை!


ஜி.வி.பிரகாஷ் தன் உருவத்திற்கும், உயரத்திற்கும் தாண்டி நிஷாவின் காதலன் கதிராகவே பிரமாதமாக நடித்திருக்கிறார். அவர் ஸ்கிரீனில் பயந்து நடுங்கும் போதெல்லாம் தியேட்டரிலும் ரசிகர்களின் அலறல் சத்தம் கேட்கிறது. கதாநாயகியுடன் அந்த மாவு பிசையும் சீனில் பிரமாதமாக நெருக்கம் காட்டி பிசைந்து, இசைந்து இருக்கிறார் பிரகாஷ். பார்த்து சார்... பாடகி வூட்டுக்காரம்மா கோச்சுக்க போறாங்க...!


பாலசரவணனும் தன் உதடுகள் பிரிவது தெரியாமல் அடிக்கும் டைமிங் கமெண்ட்டுகளில், ஆவி, பேய் பயத்தை எல்லாம் தாண்டி தியேட்டரே சிரிப்பில் அதிருகிறது.


தீனி பண்டாரமாக வரும் கருணாஸூம், மந்திரித்த முந்திரியெல்லாம் தின்று மந்திரவாதி நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட நண்பர்களை எல்லாம் பேயிடம் மாட்டிவிடுவது விலாநோக சிரிக்க வைக்கிறது.


ஜெய் சடகோபன் ரமேஷ் என்றபடி, ஆவி ஓட்ட, ஒய்யாரமாக வந்து, ஆவியிடம் சிக்கி திணறும் ஆவி வர்மா - நான் கடவுள் ராஜேந்திரனும் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்து கொள்கிறார்.


சிவாவாக வந்து காதலியை தன் கண் எதிரேலேயே பறிகொடுத்து தன் உயிரையும் விடும் மெட்ராஸ் பட நண்பர் அன்பு, உருக வைக்கிறார்.


நிஷாவாக, நாயகியாக அழகாக படம் முழுக்க வந்து தன் உடம்பில் ஸ்ருதி ஆவி புகுந்ததும், ஆபத்தாக கர்ஜனை செய்யும் நிக்கி கல்ராணி, பிஷாசாக வரும் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். அம்மணிக்கு பிரைட் ப்யூட்சரும் இருக்கிறது.


கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் ரசிகர்களை மேலும் மிரட்டுகிறது.


ஷாம் ஆண்டனின் இயக்கத்தில், பேய் படத்திற்கு டார்லிங் எனும் பெயரே பெப்பாக இருக்கும்போது மொத்தபடம் மட்டும் சோடை போய்விடுமா என்ன.?!


டார்லிங் பீதியை கிளப்புகிறது, பிரமாண்டமாய் இருக்கிறது, பிரமாதமாய் பயமுறுத்துகிறது.


மொத்தத்தில், டார்லிங் - டச்சிங்


கல்கி விமர்சனம்


'ஆ', 'பிசாசு', வரிசையில் வெளியாகி இருக்கும் பேய்ப்படம் 'டார்லிங்'. பலமான போட்டிக்கு நடுவே துணிந்து பேய்ப் படம் ஒன்றை இறக்கி இருப்பதற்கு முதலில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம்.

பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழிவாங்கும் பேய்க் கதைதான் இதுவும். ஆனாலும் படம் முழுவதும் வருகின்ற நகைச்சுவை, படத்தைச் சலிப்பில்லாமல் பார்க்க வைக்கிறது. விரசமான நகைச்சுவையை தவிர்த்திருக்கலாம்.

ஒரு பண்ணை வீட்டில் பெரும்பாலான படம் நகர்கிறது. கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டும் கவனம் செலுத்தினால் இசைக்கு நல்லது. என்னதான் தாடி, மீசை வைத்திருந்தாலும் சண்டைக் காட்சிகளிலும் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கருணாஸும் பாலாவும் செம காமெடி காம்பினேஷன்! உதாரணமாகப் பேய்க்குப் படையல் போட்டுக் காத்திருந்து, அது வந்ததும் அலறி அடித்துக்கொண்டு ஓடும் வேளையிலும் மது பாட்டிலையும் சைட் டிஷ்ஷையும் கவர்ந்துகொண்டு ஓடுவதைச் சொல்லலாம்.

கதாநாயகியின் உடலில் பேய் புகுந்திருப்பது தெரியாமல் எல்லோரும் கதாநாயகியை 'பச்ச மண்ணு' என்று சிலாகிக்கும்போது தியேட்டரில் சிரிப்பலை பொங்குகிறது. 'கோஸ்ட்' கோபாலாக வரும் ராஜேந்திரனை வைத்து இன்னும் அதிகமான சிரிப்பை வரவழைக்க ஸ்கோப் இருந்தும் கோட்டை விட்டுவிட்டார்கள்.

இடைவேளைக்குப் பின் வரும் பாடல் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன. ஆனால் பின்னணி இசை பட்டையைக் கிளப்புகிறது. பேய் வசிக்கும் அந்தப் பேட்டையிலேதான் வில்லன்களும் வசிக்கின்றனர். ஆனாலும் பேய் அவர்களை நேரடியாக அட்டாக் செய்யாமல் தான் குடியிருக்கும் வீட்டுக்கு வருபவர்கள் மூலமாக வில்லன்களை வரவழைப்பது ஏன் என்பது அந்தப் 'பச்ச மண்'ணுக்கே புரியும்.


- லதானந்த்வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

டார்லிங் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in