மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
ஜெமினி கணேசன், சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், கே.ஏ.தங்கவேலு, ஜமுனா, எம்.என்.நம்பியார் மற்றும் பலர் நடித்து 1955ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி வெளியான மிஸ்ஸியம்மா திரைப்படம் நாளை(ஜன., 14ம் தேதி) தனது 60ம் ஆண்டு நாளைக் கொண்டாட உள்ளது. கருப்பு வெள்ளைப் படங்களிலேயே எத்தனை ஆண்டுகளானாலும் ரசிக்கத் தோன்றும் ஒரு படமாக விளங்கியது அந்தப் படம். எல்.வி.பிரசாத் இயக்கத்தில், எஸ்.ராஜேஸ்வரராவ் இசையமைப்பில் பல இனிமையான பாடல்களுடன் வெளிவந்த இந்தப் படம் அந்த நாளில் பெண்களின் அமோக வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
“பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...., வாராயோ வெண்ணிலாவே..., பழகத் தெரிய வேணும்..., எனையாளும் மேரி மாதா..., தெரிந்து கொள்ளணும் பெண்ணே..., மாயமே நானறியேன்..., அறியாப் பருவமடா...” போன்ற இனிமையான பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தன. இந்தப் படத்தின் மூலம்தான் பின்னணிப் பாடகி பி.சுசீலா மிகவும் புகழ் பெற ஆரம்பித்தார்.
ஜமீன்தாரான எஸ்.வி.ரங்காராவ் நடத்தும் பள்ளிக்கும், அவருடைய மகளான ஜமுனாவுக்கும் கல்வியும், இசையும் சொல்லிக் கொடுப்பதற்காக தங்களை கணவன், மனைவி என்று பொய் சொல்லி ஜெமினி கணேசனும், சாவித்திரியும் வேலைக்குச் சேர்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரான சாவித்திரிக்கு அங்கு நடக்கும் சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஜமுனா, ஜெமினியிடம் பாடம் கற்க ஆரம்பிக்கிறார். அது சாவித்திரிக்குப் பிடிக்கவில்லை. சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள ஒரு பக்கம் எம்.என்.நம்பியார் முயற்சிக்கிறார். ரங்காராவின் மகள் ஒருவர் சிறு வயதில் காணாமல் போனதைத் தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் கே.ஏ.தங்கவேலு இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த காணாமல் போன சிறுமிதான் சாவித்திரி என்ற உண்மை தெரிய வருகிறது. அதன் பின் அனைத்துப் பிரச்சனைகளும் எப்படி முடிவுக்கு வந்தது என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்டு அடுத்தடுத்து வெளிவந்தது. ஜெமினி கதாபாத்திரத்தில் என்டிஆரும், சாவித்திரி தெலுங்கிலும் அதே கதாபாத்திரத்திலும், தங்கவேலு கதாபாத்திரத்தில் நாகேஸ்வரராவும் நடித்திருந்தனர். இந்தப் படம் 1957ம் ஆண்டு ஹிந்தியிலும் ஜெமினி கணேசன் அறிமுகமாக மிஸ் மேரி என்ற பெயரில் வெளிவந்து மாபெரும்வெற்றி பெற்றது.
மிஸ்ஸியம்மா போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமான படங்களில் முக்கியமானவை.