2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
2020ம் ஆண்டில் உலக சினிமாவே உருக்குலைந்து போன நிலையில் தமிழ் சினிமா மட்டும் எம்மாத்திரம். கொரோனா தொற்று காரணமாக மற்ற துறைகள் கூட ஓரளவிற்கு மீண்டு முன்னேறிக் கொண்டிருக்கிற நிலையில் இந்த புதிய 2021ம் ஆண்டில் சினிமா மீண்டு விடும் என்ற நம்பிக்கையில் பலரும் தற்போது தீவிரமாக உழைத்து வருகிறார்கள்.
300ஐ தொடலாம்
கடந்த ஆண்டில் வெளிவர வேண்டிய பல முன்னணி நடிகர்களின் முக்கிய திரைப்படங்கள் இந்த ஆண்டில் நிச்சயம் வந்துவிடும். ஒரு சில பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வேண்டுமானால் அடுத்த ஆண்டிற்கும் தள்ளிப் போகலாம். இதற்கு முந்தைய சில ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தொட்டு வந்தன. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக 100க்குள் அடங்கிவிட்டது. வெளியாகாமல் முடங்கிப் போன மேலும் 100 படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி போட்டி போட வாய்ப்புள்ளது.
பொங்கல் படங்கள்
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் நவம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராத காரணத்தால் தியேட்டர்களுக்கு மக்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. மிக மிகக் குறைவான மக்களே தியேட்டர்களை நோக்கி வந்தனர். அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் தியேட்டர்களில் வெளியாகின்றன.
தியேட்டர்காரர்களின் நம்பிக்கை
விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய படம். கொரோனா பாதிப்பால் தள்ளிப் போனது. இருந்தாலும் படத்தை தியேட்டர்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று விஜய் உறுதியாக இருந்தார். அவருக்கு பெரும் ஆதரவைக் கொடுத்துள்ள தியேட்டர்காரர்கள் பொங்கல் தினத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
மாஸ்டர் படம் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு போட்டியாக சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது. மிக குறுகிய காலத்தில் இந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியீட்டிற்கும் தயாராகிவிட்டது படக்குழு.
எதிர்பார்ப்பில் உள்ள 2021 படங்கள்
அண்ணாத்த
இந்த இரண்டு படங்களைத் தவிர இந்த ஆண்டில் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தும் மேலும் சில படங்கள் இருக்கின்றன. இந்த 2021ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கடந்த ஆண்டு மே மாதமே அறிவிக்கப்பட்ட படம் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த. கொரோனா பாதிப்புகள் காரணமாக படப்பிடிப்பு எட்டு மாதங்கள் நடக்காமல் தள்ளிப் போய் கடந்த மாதம் ஆரம்பித்து நடந்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. எப்படியும் விரைவில் படப்பிடிப்பை நடத்தி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்குள் படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் இந்தியன் 2 படம் கிரேன் விபத்தில் மூவர் மரணமடைந்ததற்குப் பிறகு கடந்த 11 மாதங்களாக படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவேயில்லை. இப்படம் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனமும் இதுவரை அறிவிக்கவில்லை. படம் பற்றி அடிக்கடி வதந்திகள் மட்டும் உலா வந்து கொண்டிருக்கிறது.
வலிமை
அஜித் நடித்த படம் எதுவும் கடந்த ஆண்டில் வெளியாகவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு தான் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. மீண்டும் வினோத், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாகத்தான் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி படத்தை வெளியிடுவார்களா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோப்ரா
2020ல் விக்ரம் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. அவர் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இந்த ஆண்டில் எப்படியும் விக்ரம் நடித்துள்ள மூன்று படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சூர்யாவுக்கு சிக்கல்
சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் கடந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியது. அதையும் மீறி அவர் படத்தை ஓடிடியில் தான் வெளியிட்டார். கடந்த வாரமும் கூட சூர்யாவுக்கு எதிரான தியேட்டர்காரர்களின் மனநிலை என்ன என்பதை வெளிப்படுத்தினார்கள். சூர்யாவின் அடுத்த படம் தியேட்டர் வெளியீடாகத்தான் இருக்கும். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள வாடிவாசல் படம் வெளிவரும் சமயம் மீண்டும் சர்ச்சைகள் எழ வாய்ப்புள்ளது.
ஜகமே தந்திரம்
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய படம். கொரானோ பாதிப்பில் வெளியீடு தள்ளிப் போன முக்கியப் படங்களில் இந்தப் படமும் ஒன்று. முற்றிலும் லண்டனில் படமாக்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு பற்றி இன்னும் எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரிசை கட்டி நிற்கும் விஜய் சேதுபதி படங்கள்
தற்போது தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி மட்டுமே. விஜய்க்கு வில்லனாக அவர் நடித்துள்ள மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மாமனிதன் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ள கடைசி விவசாயி படமும் விரைவில் வெளியாகலாம். மேலும், “யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், கொரானோ குமார், பெயரிடப்படாத ஒரு படம்” என சில பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டில் ஒன்றன் பின் ஒன்றாக இப்படங்கள் வெளிவரும்.
சிவகார்த்திகேயனுக்கு இரண்டு
சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர், அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தெரிகிறது. அதற்கடுத்து அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் எனத் தகவல் உள்ளது.
அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு படம் கூட வெளியாகவில்லை. ஆர்யா நாயகனாக நடிக்க ரஞ்சித் இயக்கியுள்ள சர்பேட்டா பரம்பரை படம் அடுத்த சில மாதங்களில் வெளியாகலாம். இரண்டு ஆண்டு இடைவெளியை இந்தப் படம் மூலம் ரஞ்சித் சரி செய்வார் என எதிர்பார்க்கலாம்.
கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் தியேட்டர்களில் வெளியாகுமா அல்லது ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்பது குறித்து கோலிவுட்டில் ஒரு குழப்ப நிலை நீடிக்கிறது.
பொங்கல் ரேஸிலும் ஓடிடி ஆதிக்கம்
கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு தியேட்டர்களில் வெளியாக வேண்டிய சில படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. அதன் காரணமாக திரையுலகத்தில் தியேட்டர்காரர்கள் கடும் கோமடைந்தனர். இருப்பினும் அவர்களது எதிர்ப்பையும் மீறி 24 படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின.
இந்த ஆண்டு ஆரம்பமும் ஓடிடி தளங்களுக்கு ஒரு அமோகமாக ஆரம்பமாகவே அமைய உள்ளது. மாதவன் நடித்துள்ள மாறா, ஜெயம் ரவி நடித்துள்ள பூமி ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. விஷால் நடித்துள்ள சக்ரா படமும் ஓடிடி ரிலீஸ்தான் என்று சொல்லி வருகிறார்கள். இந்தப் பட்டியலில் மேலும் சில படங்கள் சேர வாய்ப்புள்ளது.
எதிர்பார்ப்பை தூண்டும் படங்கள்
நட்சத்திரங்களை முன்னிலைப்படுத்திய சில படங்கள் மக்களை ஓரளவிற்கு தானாகவே சென்று சேரும். அதே சமயம் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வேறு சில படங்களும் உள்ளன. அந்த வகையில் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ஜெயில், மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி, பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபட்டி, விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன், உள்ளிட்ட சில படங்கள் சரியான நேரத்தில் வெளிவந்தால் ரசிகர்களை ஈர்க்க வாய்ப்புள்ளது.
தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள சிம்புவின் மாநாடு, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள புதிய படம், செல்வராகன் - தனுஷ் இணைய உள்ள புதிய படம், மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு 2, உள்ளிட்ட சில படங்களின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது.
தலைவி
நாயகர்களைப் போலவே நாயகிகள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து முடித்துள்ள சில படங்களும் இந்த ஆண்டு பட்டியலில் வருகின்றன. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதான் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண், த்ரிஷா நடிக்கும் ராங்கி ஆகிய படங்களும் முன்னணி நடிகர்களின் படங்களுடன் போட்டியிடலாம்.
2021ல் கடும் போட்டி
கடந்த ஆண்டில் வர வேண்டிய படங்கள், இந்த ஆண்டுக்காக எடுக்கப்படும் படங்கள் என இந்த ஆண்டு ஒரு கடுமையான போட்டி ஏற்படும் நிலை உள்ளது. இருந்தாலும் அனைத்துமே தியேட்டர்களுக்கு மக்கள் வரத் துவங்கும் சூழலைப் பொறுத்தே அமையும். கொரோனா பயம் நீங்க வேண்டும், கொரோனா முற்றிலுமாக ஒழிய வேண்டும், அது நடந்தால் தான் மீண்டும் சினிமா புத்துணர்வு பெறும்.
ரூ.2000 கோடி புழங்கும் தமிழ் சினிமா
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 படங்கள் வரை ஆரம்பமாகின்றன. அவற்றில் 200 படங்கள் வரை தான் தியேட்டர்களை எட்டிப் பார்க்கின்றன. மீதி படங்களில் சில வந்த வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன, சில படங்கள் முடிந்தும் முடங்கிப் போகின்றன, சில படங்கள் முடியாமலே முடிந்துவிடுகின்றன. ஆண்டுக்கு தமிழ் சினிமா உலகில் மட்டும் குறைந்த பட்சம் 2000 கோடி ரூபாய் வரை புழக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இனி வரும் காலங்களில் அது அதிகரிக்கவும் செய்யலாம். இவ்வளவு கோடிகள் புழங்கும் சினிமா துறை ஒரு சிலருக்கு மட்டுமே வாழ்வையும், செழிப்பையும் தருகிறது. ஏனென்றால் வெளியாகும் 100 - 200 படங்களில் வெற்றி என்று சொன்னால் 15 முதல் 20ஆகத்தான் இருப்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்க்க முடிகிறது.
ஒரு சில நடிகர்களின் ஒரு பட சம்பளம் மட்டுமே 100 கோடியைத் தாண்டியுள்ளது. அதே சமயம் சில தொழிலாளிகளின் சம்பளம் ஒரு நாளைக்கு 1000 ரூபாயைக் கூடத் தொடாமல் இருக்கிறது. இந்த மாபெரும் ஏற்றத் தாழ்வையும் மீறி சினிமா உலகம் தட்டுத் தடுமாறித் தழைத்தோங்கிக் கொண்டிருக்கிறது. அதை சரியான பாதையில் தொடர்ந்து செலுத்த வேண்டிய பொறுப்பு சினிமா முன்னோடிகளுக்கு உண்டு.
ஒற்றுமையின்மை
2020ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரும் சோதனை காலமாக அமைந்தது. அதற்கு ஒரு வகையில் கொரோனா மட்டும் காரணமல்ல. திரையுலகத்தினரும் மற்றொரு காரணம். ஒரே சங்கமாக இருந்த தயாரிப்பாளர் சங்கம் உடைந்து மூன்று சங்கங்களாக மாறியது. நடிகர் சங்கமும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தினரால் நடக்க முடியாமல் உள்ளது. தியேட்டர்களில் அல்லாமல் ஓடிடி தளங்களிலும் படங்களை நேரடியாக வெளியிடும் முறை பிரபலமடைந்தது.
ஓடிடியிலும் பாகுபாடு
பொதுவாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்கு மாற்றாக ஓடிடி நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். ஆனால் அங்கும் அவர்களுக்கு வேலையில்லை. காரணம் ஓடிடியில் கூட முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குனர்கள் ஆகியோருக்குத் தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. அவர்களின் படங்களைத்தான் அந்த நிறுவனங்களும் வாங்குகின்றன. தியேட்டர்களுக்கு மாற்றாக ஓடிடி தளங்கள் இருக்கும் என எதிர்பார்த்த சிறிய படத் தயாரிப்பாளர்களுக்கு அவை மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
தீர்க்க முடியாத பைரசி
தீர்க்கவே முடியாதா என பைரசி பிரச்சினை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கு ஒரு முடிவு கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது திரையுலகம்.
அரசியல் ஆசை
சினிமாவிலேயே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிலர், அடுத்த கட்டமாக அரசியலை நோக்கி பதவி ஆசையில் போய்க் கொண்டிருக்கும் சிலர் கூட தங்களது செயலை சினிமாவிலிருந்தே ஆரம்பிக்கத் தயங்குகிறார்கள்.
ஆண்டு முழுக்க படங்கள் வெளியானாலும் கூட பல படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் எழும். இந்தாண்டு, 2020ல் வெளியாக வேண்டிய படங்களும் இந்தாண்டு உருவாகும் படங்களும் ரிலீஸ் போட்டியில் இருக்கும். இவற்றில் எந்த படங்களை முதலில் ரிலீஸ் செய்வார்கள். அதை தீர்மானிப்பது யார், என்ன மாதிரி இவற்றுக்கு முன்னுரிமை தருவார்கள். இவர்களுக்கு வழிகாட்டியாக யார் நடத்தி செல்வார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைப்பது கடினமே. காரணம் இங்கு திரையுலகில் ஒற்றுமையில்லை.
சில விஷயங்களை ஊர் கூட தேர் இழுத்தால் தான் நகரும். சினிமா என்பது ஒரு தேர். அதை எப்போது ஒரே கையாக ஊர் கூட இழுத்து நல்ல பாதையில் விட்டு ரசிகர்களுக்கு தரிசனம் தரப் போகிறார்களோ ?.