தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
2014ம் ஆண்டின் துவக்கத்தில்... இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடும் படங்கள் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். குறைந்த பட்சம் அந்தப் படங்களை யாராது நினைத்து பார்க்க மாட்டார்களா? அந்த படங்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தபடதா, அதன் பெருமைகள் பேசப்படாதா என்கிற ஆதங்கம்தான் அந்த கட்டுரையின் நோக்கம். கர்ணன் படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது என்பதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை. இயக்குனர் ஸ்ரீதரின் வெள்ளிவிழா படமான காதலிக்க நேரமில்லை படத்தின் சிறப்புகளை ஏற்கெனவே பதிவு செய்தோம். 1964ம் ஆண்டு வெளியாகி இந்த ஆண்டு பொன்விழ விழா கண்ட சில முக்கிய படங்களை நினைவூட்டவிருக்கிறோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்க இருப்பது நாகேஷின், சர்வர் சுந்தரம் படம்.
காலத்தை வென்ற சர்வர் சுந்தரம்
100 படங்களை தாண்டி இயக்கிய தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன் என்ற இரு பெரும் நட்சத்திரங்களை உருவாக்கியவர் கே.பாலச்சந்தர். உடல்சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் இருக்கிறார். அந்த சினிமா மேதைக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படம் சர்வர் சுந்தர்.
கே.பாலச்சந்தர் மேடை நாடகமாக நடத்தி வந்த சர்வர் சுந்தரத்தின் ஸ்கிரிப்டை, திரைப்படமாக்கும் உரிமையை வாங்கிய ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அதில் நாகேஷை ஹீரோவாக்கினார். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் துணிச்சலுடன் நாகேஷை ஹீரோவாக்கியது அத்தனை எளிதான காரியம் அல்ல. அதிலும் நாகேஷ் எம்.ஜி.ஆர் சிவாஜி மாதிரி அழகானவரும் அல்ல. பாலச்சந்தரின் நாடகத்தை திரைவடிவமாக்கி இயக்கினார் கிருஷ்ணன்-பஞ்சு.
கதை
கிராமத்திலிருந்து நகரத்துக்கு சினிமா ஆசையில் வரும் இளைஞன் நாகேஷ். சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும் என்பது அவரது கனவு. சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டே வயிற்றுக்காக ஒரு ஓட்டலில் சர்வர் வேலை பார்க்கிறார். நாகேஷின் குறும்புகளால் ஓட்டல் வியாபாரம் பெருகுகிறது. ஓட்டல் உரிமையாளர் மேஜர் சுந்தர்ராஜனின் மகள் கே.ஆர்.விஜயா அடிக்கடி ஓட்டலுக்கு வந்து நகேஷின் குறும்புகளை ரசிப்பார். கே.ஆர்.விஜயா மீது நாகேஷூக்கு ஒருதலையாக காதல் வளர்கிறது. ஆனால் கே.ஆர்.விஜயாவோ தன்னுடன் படிக்கும் முத்துராமனை காதலிக்கிறார். முத்துராமன் நாகேஷின் நெருங்கிய நண்பர். நாகேஷூக்கு சினிமா வாய்ப்பு பெற்று தருகிறார்.
சர்வர் சுந்தரமாக இருந்த நாகேஷ், ஆக்டர் சுந்தரமாக மாறுகிறார். பணம், புகழ் எல்லாம் வருகிறது. கே.ஆர்.விஜயாவிடம் தன் காதலை சொல்ல செல்லும்போது அவர் தன் நண்பனின் காதலி என்று தெரிய வருகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் சம்பாதித்த நாகேஷ் காதலை மட்டும் சம்பாதிக்க முடியாமல் போகிறது. அதன் பிறகு நாகேஷின் நிலை என்ன என்பது கதை. சர்வர் சுந்தரமாக இருந்தபோது இருந்த சந்தோஷம், நிம்மதி நாடுபோற்றும் நடிகரான பிறகு இல்லை என்பதுதான் படம் சொல்லும் செய்தி.
சிறப்புகள்
* திரைப்படம் பற்றி வந்த முதல் சினிமா சர்வர் சுந்தரம். சினிமாக்கள் ஸ்டூடியோவுக்குள்ளேயே நடந்தால் ஒரு சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு காட்டிய முதல் படம்.
*எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் நிற்க நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ். அந்த படங்களை ஒதுக்கி வைத்து விட்டு ஒரே ஷெட்யூலில் நடித்துக் கொடுத்த படம்.
*ஹீரோக்களுக்கு அழகுதான் ஆதாரம் என்று இருந்த சினிமா இலக்கணத்தை உடைத்து அழகில்லாத நாகேஷ் ஹீரோவான படம்.
* காமெடி படம், காதல் படம், சென்டிமெண்ட் படம் என தனித்தனியாக வந்து கொண்டிருந்த காலத்தில் மூன்றையும் ஒரே படத்தில் கொண்டு வந்த படம்.
* அப்போது தனி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த முத்துராமன் நாகேஷூக்கு வழிவிட்டு நடித்த படம்.
*எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் அமுத மழையாக பொழிந்த படம்.
*ஏவிஎம் நிறுவனத்தின் மற்றுமொரு வெற்றி கிரீடம் சூட்டிய படம்.
*தெலுங்கு, இந்தி உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியை குவித்த படம்.
ஒரு விறுவிறுப்பான படத்தின் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்றைய இளம் இயக்குனர்கள் இந்தப் படத்தை பார்த்து பாடம் படிக்கலாம்.