வேட்டையன் - 'மனசிலாயோ' பாடல் வெளியானது | 10 ஆண்டுகளுக்குப் பிறகான பிரிவுகள்… - அதிர்ச்சியடையும் ரசிகர்கள் | 'மெய்யழகன்' குழுவினரின் தமிழ்ப் பற்று | தமிழகத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' ? | ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நாயகனாகும் சந்தீப் கிஷன் | சினேகாவை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையும் சிம்ரன் | பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கானுக்கு காயம் : விலா எலும்பு முறிந்தது | தமிழில் வெளியாகும் 3வது 'ஏஐ' பாடல் 'மனசிலாயோ' | பிளாஷ்பேக் : தாமதமாக்கிய நாகேஷ், தவிர்த்த கே பாலசந்தர் தந்த “வெள்ளி விழா” | இரண்டு காதல் 'பிரேக் அப்' ஆனது : தமன்னா தகவல் |
2024ம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று(ஜன., 1) ஆரம்பமாகியுள்ளது. தமிழ் சினிமா உலகிலும் இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் ஏறக்குறைய அனைத்து ஹீரோக்களின் படங்களும் வெளியாக உள்ள ஒரு ஆண்டாக அமையப் போகிறது என்பதே அதற்குக் காரணம்.
கடந்த 2023ம் ஆண்டில் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டவர்களின் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. அது போல இந்த ஆண்டில் நடக்க வாய்ப்பில்லை. இன்னும் இரண்டு வாரங்களிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ளன. அடுத்தடுத்து சீரான இடைவெளியில் பலரது படங்கள் அணிவகுக்க உள்ளன. அதில் முன்னணி ஹீரோக்களின் சில முக்கிய படங்கள் எவையென்று பார்ப்போம்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டில் இரண்டு படங்கள் வெளிவருவது நிச்சயம். அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பொங்கல் அன்று இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு தசெ ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படம் வெளியாகப் போகிறது. அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்கப் போகிறார். இதனால், அடுத்தடுத்து அப்டேட்டுகளாக இந்த ஆண்டில் வந்து கொண்டிருக்கும்.
கமல்ஹாசன்
ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் 'இந்தியன் 2' படம் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வெறும், 'இந்தியன் 2' மட்டுமல்ல 'இந்தியன் 3' கூட இந்த ஆண்டிலேயே வெளியாகலாம். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைப்' படம் இந்த ஆண்டில் ஆரம்பமானாலும் அடுத்த ஆண்டில்தான் வெளியாகும் எனத் தெரிகிறது. இடையில் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள அவரது 233வது படமாவது வருமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அது மட்டுமல்ல கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் 'கல்கி 2898 எடி' படமும் இந்த ஆண்டில் வெளியாகலாம்.
விஜய்
2023ம் ஆண்டில் விஜய் நடித்து 'வாரிசு, லியோ' ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டில் 'த கோட்'(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) படம் மட்டுமே வெளியாகும். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதல் முறையாக கூட்டணி சேரும் படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று வெளியான இப்படத்தின் முதல் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
அஜித்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. பல வித சர்ச்சைகளுக்கு நடுவே அஜித்தின் 62வது படமாக இந்தப் படம் அமைய உள்ளது. இயக்குனர் மாற்றம், தாமதமாக ஆரம்பமான படப்பிடிப்பு என இப்படம் குறித்து சில சிக்கல்கள் எழுந்து மறைந்து, தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரமே இப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் ஆனந்த அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
சூர்யா
சூர்யா நடித்து கடந்த வருடம் எந்தப் படமும் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கங்குவா' படம் இந்த ஆண்டு வெளிவந்து கடந்த வருட வருத்தத்தைப் போக்கிவிடும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சிவா இயக்கத்தில் சரித்திரப் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தை அடுத்து சுதா கோங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.
விக்ரம்
இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தங்கலான்'. பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இப்படம் ஒரு 'பீரியட்' படமாக உருவாகி உள்ளது. மாறுபட்ட தோற்றங்களில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடித்துள்ளனர். ஜனவரி 26 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளியீட்டில் மாற்றம் வரலாம் என்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் விக்ரம். இதற்கான அறிவிப்பு வீடியோ ஏற்கெனவே வெளியாகியுள்ளது. கடந்த வருடம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'துருவ நட்சத்திரம்' இந்த ஆண்டில் வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.
தனுஷ்
இந்த ஆண்டில் நடிகராகவும், இயக்குனராகவும் தனுஷைப் பார்க்கலாம். தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மட்டுமல்லாது கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷன் மற்றும் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு தனுஷின் நடிப்பில் வர உள்ள 50வது படம் வெளியாகும். இப்படத்தைத் தனுஷே இயக்கியிருக்கிறார். இதற்கடுத்து தனுஷ் இயக்குனராக மட்டும் பணியாற்றும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் இந்த ஆண்டில் வெளியாகலாம்.
சிவகார்த்திகேயன்
கடந்த சில வருடங்களாக தயாரிப்பில் இருந்த 'அயலான்' படம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 21வது படம் வெளியாகிவிடும்.
கார்த்தி
2023ம் ஆண்டில் கார்த்தி தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'ஜப்பான்' படம் தோல்விப் படமாக அமைந்தது. இந்த ஆண்டில் ஓரிரு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் நடித்து வரும் பெயரிடப்படாத படம் முதலில் வெளியாகலாம் எனத் தகவல். அதற்கடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் வெளியாகலாம். இப்படத்திற்கு 'வா வாத்தியாரே' என தலைப்பு வைத்துள்ளார்கள். சில முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. கடந்த வருட தோல்வியை இந்த வருடம் சரி செய்யும் முனைப்பில் இருக்கிறார் கார்த்தி என்கிறார்கள்.
விஜய்சேதுபதி
விஜய் சேதுபதி தனி கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் வந்தது தெரியாமல் போனது. அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'விடுதலை' படம் அவரது கதாபாத்திரம் பற்றியும், நடிப்பு பற்றியும் பேச வைத்தது. தமிழைத் தவிர ஹிந்தியில் 'ஜவான்' படத்தில் ஷாரூக்கின் வில்லனாக நடித்து பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார். கடந்த வருடம் ஹிந்தி வெப் சீரிஸான 'பார்சி'யில் நடித்தார். இந்த வருடத்தில் தமிழில் 'விடுதலை 2' படம், மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ள படங்கள் வெளியாகும். ஹிந்தியில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படமும் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது. மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நடைபெற்றுள்ள இப்படம் விஜய் சேதுபதியின் 51வது படம்.
விஷால்
கடந்த ஆண்டில் விஷால் நடித்து வெளிவந்த 'மார்க் ஆண்டனி' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் வெளியான படங்களின் தொடர் தோல்வியால் பாதிக்கப்பட்டிருந்த விஷாலுக்கு 'மார்க் ஆண்டனி' மாற்றத்தைத் தந்தது. இந்த ஆண்டில் ஹரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'ரத்னம்' படம் வெளியாக உள்ளது.
ஜெயம் ரவி
2023ம் வருடம் ஜெயம் ரவி தனி கதாநாயகனாக நடித்த 'அகிலன், இறைவன்' இரண்டுமே படுதோல்விப் படங்கள். 'பொன்னியின் செல்வன் 2' படம்தான் அவருக்கான பெயரைத் தக்க வைத்தது. கதைத் தேர்வில் ஜெயம் ரவி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை கடந்த ஆண்டு அவருக்கு உணர்த்தியிருக்கும். இந்த ஆண்டில் அவர் நடிப்பில் 'சைரன், பிரதர்,' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகலாம். மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைப்' படத்திலும் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.
மேலே குறிப்பிட்ட முன்னணி நடிகர்கள் தவிர மற்ற சில நடிகர்களின் படங்களும் வெளியாக உள்ளன. சிலம்பரசன் நடிக்கும் எந்த ஒரு படமும் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியாசமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள சரித்திரப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆரம்பமாகலாம். படம் அடுத்த ஆண்டுதான் வெளியாகும்.
முன்னணி நடிகர்களின் படங்கள் 500 கோடி, 600 கோடி என வசூலைக் கடந்தாலும் சில சிறிய நடிகர்களின் படங்கள் அத்தனை கோடி வசூலைப் பெறவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வசூலுடன் தரமான படங்களாக அமைந்து வரவேற்பைப் பெற்றதை கடந்த 2023ம் ஆண்டில் பார்த்தோம். அது போல இந்த ஆண்டிலும் நடக்கலாம். இந்த 2024ம் ஆண்டிலாவது டாப் ஹீரோக்கள் 1000 கோடி வசூலைத் தொடுவார்களா என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது ஆசை நிறைவேறட்டும் என்ற வாழ்த்துகளுடன் இந்த 2024ம் ஆண்டை வரவேற்போம்.