இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
சினிமா என்பதை கலையாகப் பார்ப்பவர்கள் சிலர், அதை வியாபாரமாகப் பார்ப்பவர்கள் பலர். ஒரு படத்திற்கு ரசிகர்களிடம் இருந்தும், விமர்சகர்களிடம் இருந்தும் எப்படியான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளிக்கும் முக்கியம். அதன் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களுக்கும் வசூல் தான் முக்கியம்.
இந்தக் காலத்தில் ஒரு படத்திற்கு 5க்கு 4 மதிப்பெண்கள் கொடுத்தால் கூட அதை சிலர் கடந்து போய்விடுவார்கள். ரசிகர்கள் கூட அதைப் பற்றிப் பெரிதாகப் பார்க்க மாட்டார்கள். ஆனால், ஒரு படம் 100 கோடி வசூல், 500 கோடி வசூல் என்றால் மட்டுமே அதை பரபரப்பாகப் பேசுகிறார்கள். இந்தக் காலத்தில் தரத்தை விடவும், அந்தப் படம் எவ்வளவு தருகிறது என்பதைப் பற்றித்தான் பலரும் பேசுகிறார்கள், பார்க்கிறார்கள்.
அந்த விதத்தில் இந்த ஆண்டில் வசூல் ரீதியாக, இதர உரிமை ரீதியாக அதிக வருவாயைப் பெற்ற சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
லியோ
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்த படம். கமல்ஹசான் நடித்த 'விக்ரம்' படத்தின் மாபெரும் வசூல் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் என்பதாலும் இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இடைவேளைக்குப் பின்பு படத்தின் திரைக்கதை சரியில்லை என்ற விமர்சனம் எழுந்தாலும் வசூல் ரீதியாக படம் 'ஜெயிலர்' படத்தை முந்தும் என்று பேசினார்கள். அவர்கள் பேசியபடி நடந்தது. 'ஜெயிலர்' படத்தின் வசூலை 'லியோ' படம் முந்தியதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு வசூல் - 210 கோடி
இதர மாநிலங்கள் - 187 கோடி
வெளிநாடு - 200 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 597 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 215 கோடி
ஜெயிலர்
கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ரஜினிகாந்த் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 'பீஸ்ட்' என்ற சுமாரான படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே பலரும் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த அதிர்ச்சியை ஆச்சரியமாக மாற்றியது ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணி. ரசிகர்கள் எதிர்பார்த்த ரஜினியின் ஹீரோயிசத்தை அதிக வன்முறையுடன் நெல்சன் காட்டியிருந்தாலும் படம் பலருக்கும் பிடித்துப் போனது. இந்த ஆண்டில் 600 கோடி வசூலை முதலில் கடந்த படமாக அமைந்தது. இப்படத்திற்குப் பின்பு வந்த 'லியோ' படம் இந்த வசூலை முறியடித்தது.
தமிழ்நாடு வசூல் - 194 கோடி
இதர மாநிலங்கள் - 223 கோடி
வெளிநாடு - 185 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 602 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 160 கோடி
பொன்னியின் செல்வன் 2
2023ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்து சாதனை படைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட படம். கடந்த வருடம் வெளிவந்த இதன் முதல் பாகம் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்த வசூலையும் கடந்து ரஜினிகாந்த் நடித்து 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த '2.o' படத்தின் வசூலையும் 'பொன்னியின் செல்வன் 2' முறியடிக்க வாய்ப்புள்ளது என பட வெளியீட்டிற்கு முன்பாக எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படியான சாதனை நிகழாமல் போனது. அதன் முதல் பாகத்தின் வசூலையும் கூட முறியடிக்காமல் 300 கோடிக்கும் கூடுதலாக மட்டுமே நின்று போனது. இரண்டு பாகங்களையும் சேர்த்துப் பார்த்தால் தியேட்டர் வசூல், சாட்டிலைட், ஓடிடி உரிமை ஆகியவற்றுடன் பெரும் லாபம் கொடுத்தது என்கிறார்கள்.
தமிழ்நாடு வசூல் - 130 கோடி
இதர மாநிலங்கள் - 79 கோடி
வெளிநாடு - 150 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 359கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 86 கோடி
வாரிசு
தெலுங்கு இயக்குனர் ஒருவர் தமிழுக்கு வந்து முன்னணி ஹீரோவான விஜய் படத்தை இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பே பலருக்கும் ஆச்சரியம்தான். இந்த வருடத் துவக்கத்தில் படம் வந்த போது எதிர்மறை விமர்சனங்களும் அதிகம் வந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக குறிப்பிடத்தக்க வசூலை இந்தப் படம் பெற்று ஆச்சரியப்படுத்தியது. இந்தப் படத்தின் வசூல், பின்னர் வெளிவந்த 'லியோ' படத்தின் வசூல் ஆகிய இரண்டு படங்களின் வசூலை சேர்த்தால் இந்த ஆண்டில் அதிக வசூலைக் கொடுத்த நடிகர்களில் விஜய் முதலிடத்தைப் பிடிப்பார்.
தமிழ்நாடு வசூல் - 150 கோடி
இதர மாநிலங்கள் - 68 கோடி
வெளிநாடு -90 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 308 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 120 கோடி
துணிவு
'நேர்கொண்ட பார்வை, வலிமை' ஆகிய படங்களுக்குப் பிறகு அஜித், வினோத் கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்த படம். முந்தைய படங்களை விட இந்தப் படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இருப்பினும் அஜித்தின் படங்கள் இன்னும் அதிகமாக ஐநூறு வரை வசூலைப் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். வரும் ஆண்டுகளில் வர உள்ள படங்கள் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுமளவிற்கான கதைகளை அஜித் தேர்வு செய்தால் அது நடக்கும்.
தமிழ்நாடு வசூல் - 120 கோடி
இதர மாநிலங்கள் - 25 கோடி
வெளிநாடு - 50 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 195 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 101 கோடி
மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடித்த இந்தப் படத்தின் டிரைலர் வந்த பிறகுதான் இந்தப் படம் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு வந்தது. டைம் மிஷின் படத்தை ஒரு சுவாரசியமான படமாகக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள். படத்தில் விஷாலை விட எஸ்ஜே சூர்யா அதிகமாக ஸ்கோர் செய்தார் என்ற விமர்சனம் எழுந்தது. இந்தப் படத்தின் ஓட்டம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அதற்குக் காரணம் இப்படத்தின் இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த 'பாகீரா' படுதோல்விப் படமாகவும், மோசமான விமர்சனங்களைப் பெற்ற படமாகவும் இருந்தது. அப்படி ஒரு படத்தைக் கொடுத்தவர் இப்படி ஒரு படத்தைக் கொடுத்தாரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
தமிழ்நாடு வசூல் - 60 கோடி
இதர மாநிலங்கள் - 18 கோடி
வெளிநாடு - 15 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 93 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 27 கோடி
மாவீரன்
விமர்சகர்களால் மட்டுமல்லாது ரசிகர்களாலும் வரவேற்கப்பட்ட படம் 'மண்டேலா'. ஓடிடியில் நேரடியாக வெளியான அந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம். இப்படத்தின் முதல் டீசர், பிறகு வந்த போஸ்டர்கள் படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் 'பிரின்ஸ்' என்ற தோல்விப் படத்தைக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தின் வெற்றி மிகவும் முக்கியமானது.
தமிழ்நாடு வசூல் - 45 கோடி
இதர மாநிலங்கள் - 6 கோடி
வெளிநாடு - 10 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 61 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 60 கோடி
வாத்தி
தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் வெளியான படம். படத்தில் தெலுங்கு படத்திற்குரிய அம்சங்கள்தான் அதிகம் இருந்தது. இருந்தாலும் தனுஷ் ரசிகர்கள் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் இந்தப் படத்திற்கு வரவேற்பு கொடுத்தார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சேர்த்து 100 கோடி வரை இப்படம் வசூலித்தது என்றார்கள். தெலுங்கில் தனுஷுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வியாபார வட்டத்தை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வசூல் - 35 கோடி
இதர மாநிலங்கள் - 50 கோடி
வெளிநாடு - 12 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 97 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 43 கோடி
மாமன்னன்
உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் இறங்குவதற்காக இந்தப் படத்துடன் நடிப்பிலிருந்து விடை பெறுகிறார் என்ற பேச்சுடன் வெளியான படம். 'பரியேறும் பெருமாள், கர்ணன்,' ஆகிய படங்களுக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு சாதிய ரீதியிலான படம். ஏஆர் ரகுமான் இசை, வடிவேலுவின் குணச்சித்திர கதாபாத்திரம், படத்தைப் பற்றிய புரமோஷன்கள் இந்தப் படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற காரணமாக அமைந்தது.
தமிழ்நாடு வசூல் - 54 கோடி
இதர மாநிலங்கள் - 6 கோடி
வெளிநாடு - 12 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 72 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 45 கோடி
விடுதலை - பாகம் 1
நகைச்சுவை நடிகராக பெயர் வாங்கிய சூரி கதையின் நாயகனாக, கதாநாயகனாக உயர்ந்த படம். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம். இளையராஜா தான் இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என வெற்றிமாறன் ரசனையுடன் படமாக்கிய இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வியாபார ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்தை விடவும் அடுத்த ஆண்டில் வர உள்ள, இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பும் வசூலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாடு வசூல் - 42 கோடி
இதர மாநிலங்கள் - 5 கோடி
வெளிநாடு - 8 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 55 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 47 கோடி
ஜிகர்ண்டா டபுள் எக்ஸ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்த இரண்டு கதாநாயகர்களின் படம் என்றே இப்படத்தை சொல்லலாம். இந்த ஆண்டில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்த 'ருத்ரன், சந்திரமுகி 2' ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. சினிமா வியாபாரத்தில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருந்த ராகவா லாரன்ஸுக்கு அந்த இரண்டு படங்களின் தோல்வி சரிவைத் தந்த நிலையில் அதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மீட்டுத் தந்தார். அதற்கு எஸ்ஜே சூர்யாவும் உறுதுணையாக இருந்தார்.
தமிழ்நாடு வசூல் - 37 கோடி
இதர மாநிலங்கள் - 8 கோடி
வெளிநாடு - 8 கோடி
மொத்த தியேட்டர் வசூல் - 53 கோடி
ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ வருவாய் - 52 கோடி
மேலே குறிப்பிட்ட இந்தப் படங்களைத் தவிர, இந்த 2023ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க தியேட்டர் வசூலையும், இதர உரிமைகள் மூலம் வருவாய்களையும் தந்த படங்கள் போர் தொழில், குட்நைட், டாடா, பிச்சைக்காரன் 2, அயோத்தி, பார்க்கிங், இறுகப்பற்று, ஜோ, சித்தா, கான்ஜுரிங் கண்ணப்பன்.
குறிப்பு - தியேட்டர் வசூல் விவரங்கள், இதர வருவாய் விவரங்கள் ஆகியவை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள், திரையுலக வட்டாரங்கள், தியேட்டர் வட்டாரங்கள், டிவி வட்டாரங்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்.