'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் | பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில் | 4கே-வில் ரீ-ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு பதிப்பு |
ஆண்டுகள் அறுபத்து நான்கு ஆனாலும், இன்னும் இருபத்து நான்காய் இயங்கி வரும் இந்திய சினிமாவின் பெருமை மிகு அடையாளம் கமல் எனும் கமல்ஹாசன்.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் கண்ட தித்திக்கும் திரைமேதை நீ. “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே” என்று கார்த்திகேயனின் வடிவில் கலையுலகைக் கண்டவன் நீ. காலங்கள் கடந்தும் கலையுலகில் நிலைத்து நிற்கும் உன் காவிய படைப்புகள். குழந்தையாய் வந்தாய், குள்ளனாய் வந்தாய், சப்பாணியாய் வந்தாய், சகல கலா வல்லவனாய் வந்தாய், சரித்திரம் கண்ட நாயகனாய் வந்தாய். அரிதாரம் பூசிவிட்டால் தெரியாது உன் அடையாளம். கதாபாத்திரமாய் மாறிவிடும் கலைவித்தை உன் கைவந்த கலை.
1960ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த “களத்தூர் கண்ணம்மா” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது 4ஆவது வயதில் கலையுலகில் கால் பதித்தார் கமல்ஹாசன். “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பதை மெய்பிக்கும் வகையில், தான் நடித்த முதல் படத்திற்கே ஜனாதிபதி கையால் தங்கப் பதக்கம் வென்றவர் கமல். அவருக்கு அப்போது வயது 5. தொடர்ந்து “பார்த்தால் பசி தீரும்”, “பாதகாணிக்கை”, “வானம்பாடி”, “ஆனந்த ஜோதி” போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தவர், “மாணவன்” என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலாக ஒரு வாலிபனாக தோன்றி நடித்தார்.
“அன்னை வேளாங்கண்ணி”, “குறத்தி மகன்”, “அரங்கேற்றம்”, “சொல்லத்தான் நினைக்கிறேன்”, “குமஸ்தாவின் மகள்”, “நான் அவனில்லை” என பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் எதிர்மறை கதாபாத்திரம் ஏற்றும் நடித்தார்.
நாகேஷ், சௌகார் ஜானகி போன்ற தேர்ந்த கலைஞர்களை வைத்து வலுவான கதாபாத்திரங்களும், கதையம்சமும் கொண்ட திரைப்படங்களை இயக்கி வந்த கே பாலசந்தரின் பார்வை கமல்ஹாசன் மீது விழ, அதன் விளைவு, “அபூர்வ ராகங்கள்”, “மூன்று முடிச்சு”, “மன்மத லீலை”, “அவர்கள்”, போன்ற கே பாலசந்தரின் படங்களில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் நடிகர் கமல்ஹாசன்.
ஏறக்குறைய 35 திரைப்படங்கள் வரை இயக்குநர் கே பாலசந்தரோடு இணைந்து பணிபுரிந்திருக்கின்றார் கமல்ஹாசன். இவரது “உத்தம வில்லன்” என்ற திரைப்படம் தான் இயக்குநர் கே பாலசந்தர் இவரோடு இணைந்து பணிபுரிந்த கடைசி திரைப்படம்.
1977ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகப் படமான “16 வயதினிலே” திரைப்படம் கமல்ஹாசனுக்கு வேறொரு பரிமாணத்தை தந்த திரைப்படமாக அமைந்தது. நடை, உடை, பாவணை, தோற்றம் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி ஒரு சப்பாணியாகவே வாழ்ந்து காட்டியிருந்தார் கமல்.
பாரதிராஜாவின் அடுத்த திரைப்படமான “சிகப்பு ரோஜாக்கள்” படத்தில், தனது முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமான நவநாகரீக இளைஞனாக ஒரு “சைக்கோபாத்” கதாபாத்திரம் ஏற்று மீண்டும் தன் நடிப்பாற்றலை ரசிகர்கள் முன் நிரூபித்திருந்தார் கமல்.
இவரது “ராஜ்கமல் இண்டர்நேஷனல்” தயாரிப்பு நிறுவனம் மூலம் இவர் முதன் முதலாக தயாரித்த திரைப்படம் “ராஜபார்வை”. படத்தை இயக்கியது இவரது ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ். படத்தில் பார்வையற்ற இளைஞனாக நடித்து ஏகோபித்த பாராட்டை தட்டிச் சென்றார்.
தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தில், கால்களை கட்டி குள்ளனாக நடித்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமின்றி மாபெரும் வெற்றிப்படமாக்கினார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்ற அந்த மாபெரும் கலைஞனின் மொத்த நடிப்பையும் தனது திரைக்கதையின் மூலம் உருவான “தேவர்மகன்” திரைப்படத்தில் பெற்றுக் கொண்டவர். “குணா”, “மகாநதி”, “இந்தியன்”, “அவ்வை சண்முகி”, “ஹேராம்”, “ஆளவந்தான்”, “தசாவதாரம்”, “விஸ்வரூபம்” என இவருடைய திரைப்படங்கள் தமிழ் திரையுலகை உலக அளவில் பேச வைத்த திரைப்படங்களாக அமைந்தவை.
ஓரிரு மொழிகளில் எடுக்கப்படும் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழிப் படங்களில் நடித்த ஒரே நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். இந்தியாவில் அதிக முறை ஆஸ்கருக்கு தேர்வான படங்கள் இவருடைய திரைப்படங்கள். அதனால்தான் எல்லோராலும் இவர் “ஆஸ்கர் நாயகன்” என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படுகின்றார்.
இரண்டாம் எலிசபெத் ராணியால் துவக்கி வைக்கப்பட்ட கமல்ஹாசனின் கனவுப் படமான “மருதநாயகம்” இன்று வரை எடுக்கப்படாமலேயே இருப்பது அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த கலையுலகிற்கே ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கக் கூடிய ஒன்று. அந்தகாலக்கட்டத்தில் இந்திய அளவில் நடிகர் ராஜேஷ்கண்ணா, அமிதாப்பச்சன் ஆகியோருக்கு அடுத்த படியாக ரூபாய் 1 கோடி ஊதியம் பெற்ற முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவராகவும் பார்க்கப்படுபவர் கமல்.
கமல்ஹாசன் ஒரு அற்புதமான நடனக் கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. பிரபலமான ஒரு நடிகராக அவர் வருவதற்கு முன்பு எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா போன்ற ஜாம்பவான் திரைக் கலைஞர்களுக்கு நடனம் பயிற்றுவிப்பவராகவும் இருந்திருக்கின்றார் என்பது பலர் அறியாத ஒன்று. தனது ரசிகர் மன்றங்களை முதன் முதலாக நற்பணி மன்றங்களாக மாற்றிய பெருமையும் கமல்ஹாசனையே சாரும். இவரது ரசிகர்கள் நற்பணி மன்றங்கள் சார்பாக பல சமுதாய சீர்திருத்தங்களையும், சேவைகளையும் செய்து வருகின்றனர்.
டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம், ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட சினிமாவில் பல புதுமையாக தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தவரும் கமல் தான். ஒரு கலைஞனுக்கு மேக்கப் ரொம்ப முக்கியம். ஆனால் மேக்கப்பிற்கே அதிக மெனக்கெடும் கலைஞன் கமல்ஹாசன் என்றால் மிகையல்ல. அது அழகுக்காக அல்ல அந்த கதாபாத்திர தோற்றத்திற்காக. இவர் ஏற்று நடித்த குணா, இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம்(10 வேடங்கள்), ஹேராம், உத்தம வில்லன் போன்ற பல படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
சிறந்த நடிகருக்கான 3 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், செவாலியே, கலைமாமணி, பிலிம்பேர் விருதுகள், நந்தி விருது, எஸ்எஸ் வாசன் விருது, கவுரவ டாக்டர் பட்டம் என பட்டங்களும், விருதுகளும் வியக்கும் வண்ணம் விந்தைகள் பல புரிந்த “விளங்க முடியா கலைஞன் இவன்”.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், நடனக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட இந்த பைந்தமிழ் திரைமேதை, 2010ல் “மக்கள் நீதி மய்யம்” என்ற அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதன் நிறுவனராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்து, தான் ஒரு “சகல கலா வல்லவன்” என்பதை நிரூபித்துக் காட்டியிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன்.