''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்தியத் திரையுலகம் என்றால் கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை ஹிந்திப் படங்களைத்தான் சொல்வார்கள். 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' போன்ற படங்கள் வந்த பிறகு மற்ற மொழித் திரைப்படங்களையும் இந்தியத் திரைப்படங்கள் என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
தென்னிந்தியாவில் தங்களது மொழிகளில் என்னதான் வெற்றி பெற்றாலும் ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் இங்குள்ள இயக்குனர்களுக்கும் உண்டு. ஹிந்தி சினிமா என்பது பல இயக்குனர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இங்கிருந்து சென்று சாதித்த இயக்குனர்கள், நடிகர்கள் குறைவு. ஆனால், சாதித்த நடிகைகள் அதிகம்.
ஹிந்தி சினிமாவில் அந்தக் காலத்திலிருந்தே தென்னிந்திய இயக்குனர்கள் பலரும் படங்களை இயக்கியுள்ளார்கள். ஆரம்ப கால ஹிந்தி சினிமாவில் அதிகமான தமிழ் இயக்குனர்கள் அங்கு படங்களை இயக்கவில்லை. 50களுக்குப் பிறகுதான் அது கொஞ்சமாக அதிகரித்தது.
ஸ்ரீதர்
தமிழில் 'கல்யாணப் பரிசு' படத்தை இயக்கிய ஸ்ரீதர், அப்படத்தை 'நஸ்ரனா' என்ற பெயரில் 1961ல் ஹிந்தியில் ரீமேக் செய்து தன்னுடைய வெற்றியைப் பதித்தார். அதன் பின்பு “தில் ஏக் மந்திர், பியார் கியே ஜா, நை ரோஷ்னி, சாத்தி, தார்தி, துனியா கியா ஜானே, கெஹ்ரி சால், ஜக்ருதி, தில் ஈ நாடன்,” ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கியுள்ளார். ஹிந்தியில் படங்களை இயக்குவதற்கு முன்பே 1956ல் அவர் கதை எழுதிய 'பாய் பாய்' ஹிந்திப் படம் வெளிவந்தது. ஸ்ரீதர் தமிழில் இயக்குனராக அறிமுகமான 'ரத்த பாசம்' படத்தின் ரீமேக்தான் அந்தப் படம்.
கிருஷ்ணன் பஞ்சு
தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு, 1957ம் ஆண்டு வெளிவந்த 'பாபி' படம் மூலம் ஹிந்தியில் இயக்குனர்களாக அறிமுகமானார்கள். தொடர்ந்து “பர்கா, பிந்தியா, சுஹாக் சிந்தூர், ஷாதி, மான் மௌஜி, மேரா கசூர் கியா ஹை, லாடியா, தோ கலியான், மெயின் சுந்தர் ஹுன், ஷாந்தார்,' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்கள்.
பீம்சிங்
தமிழில் பல குடும்பப் பாங்கான படங்களை இயக்கிய ஏ.பீம்சிங், 1960ல் 'ஏய் பிர்சே பஹார்' என்ற படம் மூலம் ஹிந்தியில் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தமிழ் நடிகர்களான சிவாஜிகணேசன், பத்மினி ஆகியோர் நடித்தனர். தமிழில் வெளிவந்த 'ராஜா ராணி' படத்தின் ரீமேக்தான் அந்தப் படம். அப்படத்திற்குப் பிறகு 'ராக்கி, மெய்ன் சுப் ராஹுன்கி, பூஜா கே பூல், கான்தன், மெஹ்ர்பன், கௌரி, ஆத்மி, சாது ஆர் சைத்தான், பாய் பெஹன், கோபி, சுப் கா சாத்தி, மாலிக், ஜோரூ கா குலாம், லோபர், நயா தின் நை ராத், யாரோன் கா யார், அமானத்,” உள்ளிட்ட படங்களை இயக்கினார் பீம்சிங்.
பாலுமகேந்திரா
தமிழ் சினிமா உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாலுமகேந்திரா, அவர் இயக்கத்தில் வெளிவந்த 'மூன்றாம் பிறை' படத்தை 'சாத்மா' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார். 1983ல் வெளிவந்த அந்தப் படம் ஹிந்தியின் கிளாசிக் படங்களில் ஒன்றாக இன்றும் பேசப்பட்டு வருகிறது.
கே பாக்யராஜ்
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்றழைக்கப்படும் இயக்குனர் பாக்யராஜ் 1986ல் அமிதாப் நடித்து வெளிவந்த 'ஆக்ரி ராஸ்தா' படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதன் பிறகு 'மிஸ்டர் பேச்சாரா, பாபா த கிரேட்,' ஆகிய படங்களை இயக்கினார்.
மணிரத்னம்
தற்போதுள்ள முன்னணி இயக்குனர்களில் ஹிந்தியில் முதலில் தடம் பதித்தவர் மணிரத்னம். 1998ல் வெளிவந்த 'தில் சே' படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதன்பின் “யுவா, குரு, ராவண்,' ஆகிய படங்களை இயக்கினாலும் வசூல் ரீதியாக அவரால் பெரிய அளவில் வெற்றியைத் தொடர முடியவில்லை.
கமல்ஹாசன்
தமிழில் முன்னணி கதாநாயகனாக கமல்ஹாசன் இங்கு மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் இயக்குனராக அறிமுகமானது ஹிந்திப் படத்தில் தான். தமிழில் வெளிவந்த 'அவ்வை சண்முகி' படத்தில் ஹிந்தியில் 'சாச்சி 420' என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார். அதன் பிறகுதான் 'ஹே ராம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படம் ஹிந்தியிலும் உருவானது.
ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்த ஷங்கர் அவர் இயக்கிய 'முதல்வன்' படத்தை ஹிந்தியில் 'நாயக்' என்ற பெயரில் இயக்கினார். ஆனால், தமிழில் பெற்ற வெற்றியை அந்தப் படம் ஹிந்தியில் பெறவில்லை. அத் தோல்விக்குப் பிறகு இதுவரை அவர் ஹிந்திப் பக்கம் போகவேயில்லை.
பிரபுதேவா
நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா 'வான்டட்' படம் மூலம் ஹிந்தியில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு 'ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, ஆர் ராஜ்குமார், ஆக்ஷன் ஜாக்சன், சிங் இஸ் பிலிங், டபாங் 3, ராதே' ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கினார். சமீபத்திய இயக்குனர்களில் ஹிந்தியில் அதிகப் படங்களை இயக்கியவர் பிரவுதேவாதான்.
ஏஆர் முருகதாஸ்
தமிழில் தான் இயக்கிய 'கஜினி' படத்தை ஹிந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் ஏஆர் முருகதாஸ். முந்தைய ஹிந்திப் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பெரிய வசூலைக் குவித்தது அந்தப் படம். அதன்பின் 'ஹாலிடே, அகிரா' என இரண்டு ஹிந்திப் படங்களை முருகதாஸ் இயக்கினாலும் 'கஜினி' படம் தந்த வெற்றியை அந்தப் படங்கள் தரவில்லை.
கவுதம் மேனன்
தமிழில் 'மின்னலே' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கவுதம் மேனன் அதே படத்தை அடுத்து ஹிந்தியில் 'ரெஹ்னா ஹை தேர்ரே தில் மெய்ன்' என்ற பெயரில் இயக்கி ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றார். அடுத்து அவர் இயக்கிய 'ஏக் தீவானா தா' தோல்வியடைந்ததால் அதன்பின் அவர் அந்தப் பக்கம் செல்லவில்லை.
புஷ்கர் காயத்ரி - விஷ்ணுவர்தன்
'விக்ரம் வேதா' படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி அதே பெயரில் அப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கினார்கள். ஆனால், தமிழில் கிடைத்த வரவேற்பும், வசூலும் ஹிந்தியில் கிடைக்கவில்லை. தமிழ் இயக்குனரான விஷ்ணுவர்தன் , 'ஷெர்ஷா' என்ற ஹிந்திப் படத்தை இயக்கினார். ஓடிடியில் வெளியானாலும் அப்படம் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது.
அட்லீ
இப்படி சில பல இயக்குனர்கள் இதற்கு முன்பு ஹிந்தியில் அறிமுகமாகி வெற்றிகளையும், தோல்விகளையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களது வரிசையில் 'ஜவான்' படம் மூலம் அங்கு அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். முதல் நாள் வசூலாக 129 கோடியைப் பெற்றுள்ள இப்படம், இரண்டாவது நாளிலும் 100 கோடி வரை வசூலித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீயின் வெற்றி அங்கு இன்னும் பல தமிழ் இயக்குனர்கள் செல்வதற்குரிய புதிய பாதையை போட்டுத் தந்துள்ளது.