''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'.
இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு 'கெட்ட' வார்த்தையை விஜய் பேசியது சரியா என்று டிவிக்களில் விவாதம் நடத்தும் அளவிற்கு சர்ச்சை சென்றுவிட்டது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அந்த வசனம் தேவைப்பட்டது, நீண்ட யோசனைக்குப் பிறகே அந்த வசனத்தை விஜய் பேசினார் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் படத்தில் அந்த வார்த்தை இடம் பெறுமா, நீக்கப்படுமா என்பது படம் வந்தால்தான் தெரியும்.
தொடர் சர்ச்சை
'லியோ' படம் குறித்த அப்டேட்டுகள் வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடிதான்' பாடலுக்கான அறிவிப்பு போஸ்டர் வெளியானது. அதில் விஜய் புகைபிடிப்பது போன்ற போஸ்டர் இருந்தது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து பாடல் யு டியூப் தளத்தில் வெளியானது. அதில் இடம் பெற்றிருந்த வார்த்தைகள் மேலும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
புகை, குடி சர்ச்சை
“பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,” என்ற வரிகளும் “மில்லி உள்ள போனா போதும், கில்லி வெளில வருவான்டா,” என்ற வரிகளும், “பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,” ஆகிய வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுப் பழக்கம், புகைப் பிடிக்கும் பழக்கம் ஆகியவற்றிற்கு ஆதரவாக வரிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும், வீடியோவில் எந்த ஒரு எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெறவில்லை. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சில நாட்களுக்குப் பிறகு அந்த எச்சரிக்கை வாசகங்களை சேர்த்தனர். செப்டம்பர் மாதம் அப்பாடலை டிவிக்களில் ஒளிபரப்புவதற்காக சென்சாருக்கு விண்ணப்பித்தனர். அதன்பின் அந்த வரிகளை நீக்கியது சென்சார் குழு.
இப்படத்தில் நடிக்கும் ஹிந்தி நடிகரான சஞ்சய் தத் பிறந்தநாள் ஜூலை மாதம் வந்த போது அவருக்காக ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். அதில் சஞ்சய் தத் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. பாடலுக்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அதில் எச்சரிக்கை வாசகங்களை சேர்த்திருந்தனர். இருந்தாலும் ஒரு பிறந்தநாளுக்காகத் தெரிவிக்கும் வாழ்த்து வீடியோவில் கூட புகை பிடிக்கும் காட்சியைச் சேர்க்க வேண்டுமா என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இப்படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகரான அர்ஜூனின் பிறந்தநாள் ஆகஸ்ட் மாதம் வந்த போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். அதில் அர்ஜூன் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து தன் படங்களில் போதை, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை வைப்பதில் இயக்குனர் லோகேஷ் அதிக ஆர்வம் காட்டுகிறார் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பினார்கள்.
இசை வெளியீட்டு சர்ச்சை
செப்டம்பர் மாதம் 30ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்த நிலையில் விழாவை ரத்து செய்வதாக படத் தயாரிப்பு நிறுவனம் திடீரென அறிவித்தது. விழா நடத்த ஆளும் திமுக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்ற சர்ச்சை வந்தது. படத்தின் சில ஏரியாக்களை வெளியிட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கேட்டதாகவும், அதைத் தரவில்லை என்பதால் விழாவுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், இசை விழாவுக்கு 70 ஆயிரம் பேர் வரையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் விழாவை ரத்து செய்ய வேண்டி வந்தது என சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ரசிகர்கள் ஆராஜகம்
கடந்த வாரம் இப்படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரை தியேட்டர் வளாகத்தில் திரையிட அனுமதி கேட்டதற்கு காவல் துறை தரப்பில் தரப்படவில்லை. அதனால், தியேட்டர் உள்ளேயே திரையில் திரையிட்டார்கள். சென்னை ரோகிணி தியேட்டரில் திரையிட்ட போது பல விஜய் ரசிகர்கள் தியேட்டருக்குள் புகுந்து அங்கிருந்த இருக்கைகளை மொத்தமாக நாசம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
கெட்ட வார்த்தை சர்ச்சை
அதே சமயம் அந்த டிரைலரில் விஜய் பேசிய 'கெட்ட' வார்த்தை கடும் சர்ச்சையை உருவாக்கியது. குழந்தைகள், பெண்கள் என பலரை ரசிகர்கள், ரசிகைகளாக வைத்திருக்கும் விஜய் சமூகப் பொறுப்பு இல்லாமல் அப்படி ஒரு வார்த்தையை எப்படிப் பேசலாம் என எதிர்ப்பு கிளம்பியது. மேலும், டிரைலரில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கிறது என்றும் குரல் எழுந்தது. அந்த வார்த்தை பேசியதற்கு விஜய் காரணமல்ல, தான் அதற்கு பொறுப்பு ஏற்பதாக இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
சிறப்பு காட்சிகள்
படம் வெளியாக இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் அடுத்த சர்ச்சையாக படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கும், காலை சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி தர வேண்டும் என திரையுலகினர் தரப்பிலும், ரசிகர்கள் தரப்பிலும் வேண்டுகோள் எழுப்பிவிட்டார்கள். ஆனால், அரசு அதற்கு அனுமதிக்காது என்றே தெரிகிறது. அதனால், இதுவும் ஒரு சர்ச்சையை உருவாக்கலாம்.
'லியோ' படம் தொடர்பாக அவ்வப்போது எழும் எந்த ஒரு சர்ச்சைக்கும் விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படுவதில்லை. அவர் தொடர்ந்து அவரது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார். 'லியோ, லியோ' என பேசிக் கொண்டு ரசிகர்கள் அவர்களது நேரத்தையும், வேலையையும் வீணடித்துக் கொண்டிருக்க, விஜய்யோ அவரது அடுத்த படமான 'விஜய் 68' படத்தில் நடிக்கப் போய் அவரது வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
விஜய் அரசியலில் நுழையும் ஆசையில் உள்ளார் என்பதால் அவருக்கான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகலாம். அவரை வைத்துப் பேசினால் தங்களுக்கும் விளம்பரம் கிடைக்கலாம் என சில லெட்டர் பேடு அமைப்புகளுக்கும் ஆசை இருக்கும். ஆனால், நியாயமான எதிர்ப்புகளுக்கு விஜய் தன் கருத்தை சமூகத்தின் முன் வைக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.