''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நாளை (ஜூலை 14) வெளியாக உள்ள படம் மாவீரன். இந்த படத்தின் ஹைலைட்டான அம்சமே இதில் 37 வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தி இருப்பது தான். இங்கு இருக்கும் ஹீரோக்கள் அனைவருக்குமே ரஜினி பட டைட்டில்களை தங்களது படங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற ஆசை இருப்பதை மறுக்க முடியாது. அப்படி ரஜினி படத்தின் டைட்டிலை தங்கள் படத்திற்கு வைத்து சாதித்தவர்களையும், சறுக்கியவர்களையும் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு இது.
பில்லா
முதலில் ரஜினி படத்தின் டைட்டிலை பயன்படுத்தும் மறுசுழற்சி ஆரம்பித்தது அஜித் நடித்த பில்லா படத்தில் இருந்து தான். ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான பில்லா படத்தின் டைட்டிலை மட்டுமல்ல அதன் கதையையும் சேர்த்தே ரீமேக் செய்தார்கள். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பொல்லாதவன்
அந்த வருடத்திலேயே தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன் படமும் ரஜினி பட டைட்டிலுடன் தான் வெளியானது. வெற்றியையும் ருசித்தது. இப்படி ரஜினி பட டைட்டிலை வைத்து வெளியான இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அதன்பிறகு ரஜினிகாந்த் பட டைட்டிலை தங்கள் படங்களுக்கு வைப்பதில் இளம் ஹீரோக்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி துவங்கியது.
தனுஷ் அதிகம்
ரஜினியின் மருமகனான தனுஷ் அவரது படங்களின் டைட்டிலுக்கு முன்னுரிமை கொண்டாடும் விதமாக பொல்லாதவனை தொடர்ந்து படிக்காதவன், மாப்பிள்ளை, தங்கமகன் என மொத்தம் ரஜினியின் 4 படங்களை தனது படங்களில் டைட்டிலாக பயன்படுத்தினார். இதில் பொல்லாதவன், படிக்காதவன் ஆகிய படங்கள் வெற்றியைப் பெற்றன. மாப்பிள்ளை படம் டைட்டிலை மட்டும் அல்லாமல் ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் கதையை தழுவியே கொஞ்சம் மாடர்னாக ரீமேக் செய்து உருவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தோல்வியை தழுவியது. தங்கமகனுக்கும் அதே தான் நடந்தது.
விஜய்க்கு எட்டாக்கனி
பில்லா என்கிற ஒரு படத்துடன் அஜித்தின் ரஜினி பட டைட்டில் ஆசை அப்படியே நின்றுவிட, ரஜினியின் இடத்தை, அவரது சூப்பர்ஸ்டார் பட்டத்தை பிடிக்க ஆசைப்படும் நடிகர் விஜய்க்கும் அவரது பட டைட்டிலை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது. ஆனால் சாதாரண ஹீரோக்களுக்கு கூட எளிதாக கிடைத்த ரஜினி பட டைட்டில், விஜய்க்கு எட்டாக்கனியாகவே இருந்து விட்டது. அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த மெர்சல் திரைப்படத்திற்கு கூட ரஜினி நடித்த மூன்று முகம் என்கிற பெயரை பெறுவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் சில காரணங்களால் அவருக்கு அந்த டைட்டில் கிடைக்கவில்லை.
ரங்கா
நடிகர் சிபிராஜ் கூட தன் பங்கிற்கு ரஜினி நடித்த ரங்கா படத்தின் டைட்டிலை பெற்று தனது படத்திற்கு வைத்து அழகு பார்த்தார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும் ரஜினி பட டைட்டில் கிடைத்த சந்தோஷத்துடன் அவர் திருப்திப்பட்டு கொண்டார்.
தில்லு முல்லு
பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கிளாசிக் சூப்பர் ஹிட் படமான தில்லு முல்லு படத்தை அதே டைட்டிலுடன் மிர்ச்சி சிவா நடிப்பில் ரீமேக் செய்தனர். ஆனால் ஒரிஜினல் தில்லு முல்லுவின் பெயரை கெடுத்தது தான் மிச்சம்.
ராஜாதி ராஜா
ரஜினிகாந்தின் தீவிர பக்தன் என தன்னை சொல்லிக் கொள்ளும் நடிகர் ராகவா லாரன்ஸ் கூட ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா பட டைட்டிலில் நடித்தார். அந்த படமும் வெற்றி படமாக அமையவில்லை. தற்போது சந்திரமுகி 2 என்கிற ரஜினிகாந்த்தின் இன்னொரு பட டைட்டிலில் நடித்து வருகிறார். வெற்றி கிட்டுகிறதா என பார்ப்போம்.
போக்கிரி ராஜா
ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி பெற்ற போக்கிரி ராஜா என்கிற படத்தின் டைட்டிலை பயன்படுத்திய நடிகர் ஜீவா தனக்கு ஒரு பிரம்மாண்ட வெற்றியை எதிர்பார்த்தார். ஆனாலும் ஜீவாவுக்கு போக்கிரி ராஜா தோல்வியையே பரிசாக கொடுத்தது.
தர்மதுரை
தனது இயக்கத்தில் விஜய் சேதுபதியை தர்மதுரையாக மாற்றினார் இயக்குனர் சீனு ராமசாமி. விஜய்சேதுபதிக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்த இந்த படம் ரஜினி படத்திற்கான டைட்டில் மரியாதையையும் காப்பாற்றியது.
சுந்தர் சிக்கு மூன்று தோல்வி
இயக்குனர் சுந்தர்.சி நடிகராக மாறிய பிறகு, ரஜினிகாந்த்தின் தீ, முரட்டுக்காளை, குரு சிஷ்யன் என மூன்று படங்களின் டைட்டில்களை தனது படங்களுக்கு பயன்படுத்தினார். இதில் ஒன்றில் கூட அவரால் வெற்றியை ருசிக்க முடியவில்லை.
மனிதன்
நடிகர் உதயநிதியும் தன் பங்கிற்கு ரஜினிகாந்தின் மனிதன் பட டைட்டிலை பயன்படுத்தினார். மிகப்பெரிய வெற்றி இல்லை என்றாலும் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.
வெற்றி தந்த விடுதலை
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி - விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே டைட்டில் 37 வருடங்களுக்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவிய திரைப்படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.
பாயும் புலி, நான் சிவப்பு மனிதன்
நடிகர் விஷால் ரஜினிகாந்த் நடித்த பாயும் புலி, நான் சிவப்பு மனிதன் என இரண்டு படங்களின் டைட்டில்களை பயன்படுத்தினார். இரண்டில் ஒன்று கூட அவருக்கு வெற்றியை பரிசாக தரவில்லை. அதேசமயம் இதில் சுசீந்திரன் இயக்கிய பாயும் புலி தோல்விப் படமாக அமைந்தாலும் அதற்கு முன்பாகவே நடிகர் கார்த்தியை வைத்து ரஜினி பட டைட்டிலில் நான் மகான் அல்ல என்கிற படத்தை இயக்கி தனக்கும் கார்த்திக்குமான வெற்றிப்படமாக மாற்றிக்கொண்டார் சுசீந்திரன்.
கழுகு
இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணா கூட ரஜினியின் திரில்லர் படமான கழுகு டைட்டிலை பெற்று நடித்தார். ஒரிஜினல் கழுகு படம் வெளியான சமயத்தில் ரஜினிகாந்த்துக்கு வெற்றிப் படமாக அமையவில்லை. ஆனால் இங்கே கிருஷ்ணாவிற்கு மிகப்பெரிய வெற்றி படம் இல்லை என்று சொன்னாலும் கூட அவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கொடுத்த படமாகவும் அந்த வரவேற்பால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் அளவிற்கும் அமைந்தது.
ஜானி
மகேந்திரன் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களால் இன்றும் விரும்பி ரசிக்கப்படும் ஜானி என்கிற படத்தின் டைட்டிலை தனது படம் ஒன்றுக்கு வைத்து நடிகர் பிரசாந்தும் மகிழ்ச்சி அடைந்தார். படத்தின் ரிசல்ட் அவருக்கு மகிழ்ச்சியாக அமையவில்லை.
காளி
கிருத்திகா உதயநிதி டைரக்ஷனில் நடிகர் விஜய் ஆண்டனி தனக்கும் ஒரு முறை ரஜினியின் படமான காளி என்கிற டைட்டிலை பயன்படுத்தி ஒரு வெற்றியை பெற நினைத்தார். அவருக்கும் கூட ரஜினி பல டைட்டில் அதிர்ஷ்டத்தை தரவில்லை.
நினைத்தாலே இனிக்கும், சதுரங்கம் என ரஜினி பட டைட்டில்களும் கதைக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதால் மீண்டும் பயன்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவுக்கு கிடைத்த நெற்றிக்கண்
ஹீரோக்கள் மட்டுமல்ல, பிரபல கதாநாயகியான நயன்தாராவுக்கும் ரஜினியின் நெற்றிக்கண் பட டைட்டில் கிடைத்தது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. அதேபோல நடிகை திரிஷா நடித்துள்ள படத்திற்கு கர்ஜனை என ரஜினி படத்தின் டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.
சிவகார்த்திகேயனுக்கு எப்படி அமைய போகிறது
இப்போது முக்கிய விஷயத்துக்கு வருவோம்.. இந்தப்பட்டியலில் ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயனுக்கும் இடம் உண்டு. 2017ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான படத்திற்கு வேலைக்காரன் என்கிற ரஜினி பட டைட்டிலை வைத்தனர். இந்த படம் தோல்வியை தழுவியது..
இந்தநிலையில் மாவீரன் என்கிற மீண்டும் ஒரு ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்தப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்குமா ? அதுமட்டுமல்ல கடந்த சில வருடங்களாக ரஜினி படங்களின் டைட்டிலை பயன்படுத்திய பல படங்கள் தோல்வியடைந்த நிலையில் ரஜினி பட டைட்டிலுக்கான மவுஸை மீண்டும் பெற்றுத் தருமா...? ரிசல்ட் நாளை தெரிந்துவிடும்.