''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2017ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக சினிமா தியேட்டர் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. நடைமுறை செலவுகள் அதிகரித்துள்ளதால் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கண்டனம்
அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இது குறித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சினிமா தயாரிப்பாளர்கள் பலரே சங்கத்தின் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சங்கத்தினர் கேட்டுக் கொண்டபடி டிக்கெட் கட்டணங்களை நிர்ணயித்தால் சிறிய படங்களை அது பெரிதும் பாதிக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்கள்.
எவ்வளவு உயருது...
தற்போது சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் ஏசி தியேட்டர்களில் அதிகபட்சமாக உள்ள ரூ.195 கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்த வேண்டுமென்றும், சிங்கிள் தியேட்டர்களில் அதிகபட்சமாக உள்ள ரூ.130 கட்டணத்தை ரூ.200 ஆக உயர்த்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஏறக்குறைய இதே 195 என்ற அளவில்தான் கட்டணங்கள் உள்ளன. சிங்கிள் தியேட்டர்களில் 100, 110, 120, 130 என தியேட்டர்களுக்கு ஏற்றபடி உள்ளன. புதிதாக உயர்த்தினால் 60 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.
உயர்த்த சொல்வது ஏன்?
தியேட்டர்கள் தரப்பில் நடைமுறை செலவுகள் எனக் குறிப்பிடுவது மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது, சொத்து வரி உயர்த்தப்பட்டது ஆகியவற்றையும் அடக்கிய ஒன்றாக உள்ளது. கடந்த சில வருடங்களில் இவை மிக அதிகமாக உயர்ந்துவிட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
முன்பெல்லாம் திருட்டு விசிடி, பைரசி என்ற காரணங்களால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் அதிகம் வராமல் இருந்தார்கள். ஆறு வருடங்களுக்கு முன்பு கட்டணம் உயர்த்தப்பட்ட போது மக்கள் வரத்து குறைந்து போனது. அதற்குப் பிறகு 2020ல் கொரானோ வந்த பின் தியேட்டர்கள் மூடப்பட்டவே மக்கள் ஓடிடி பக்கம் போனார்கள். புதிய படங்கள் தியேட்டர்களுக்கு வந்தாலும் நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளிவந்து விடுவதால் ஒரு தரப்பினர் தியேட்டர்கள் பக்கம் போவதையே தவிர்க்க ஆரம்பித்தனர்.
இப்போதெல்லாம் ஒரு படம் வெளியானால் படம் வெளியாகும் வெள்ளிக்கிழமை, அடுத்து நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்தான் மக்கள் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். திங்கள் முதல் வியாழன் வரை பல தியேட்டர்கள் முழுமையாக நடப்பதில்லை. 15 பேருக்குக் குறைவான பேர் தியேட்டர்களுக்கு வந்தால் காட்சிகளை நடத்துவதில்லை. அப்படி பல படங்கள் 'ஷோ பிரேக்' ஆகி நடத்தப்படாமல் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், இரவு நேரக் காட்சிகளை பல தியேட்டர்கள் நடத்துவதில்லை என்றே தெரிவிக்கிறார்கள்.
திண்பண்டங்கள் பற்றி பேசாதது ஏன்
நடைமுறை செலவுகள் உயருகிறது என்று காரணம் சொல்லும் தியேட்டர்காரர்கள் அவர்களது தியேட்டர்களில் அநியாய விலைக்கு விற்கப்படும் திண்பண்டங்கள் பற்றி எதுவும் சொல்வதேயில்லை. பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பாப்கார்ன் பாக்கெட் ஒன்றின் விலை 250 முதல் 500 ரூ வரை விற்கப்படுகிறது. காபி, டீ ஆகியவை 90 ரூபாய்க்கும், பப்ஸ், சமோசா போன்றவரை ரூ. 150க்கும் விற்கப்படுகின்றன. வணிக வளாகங்களுடன் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு 30 அல்லது 40 ரூ வாங்கப்படுகிறது. ஒரு படம் பார்த்து முடிக்க மூன்று மணி நேரமாவதால் பார்க்கிங் கட்டணமாகவே ரூ.150 வரை கொடுக்க வேண்டியிருக்கிறது.
ரூ.5 கோடிக்கும், ரூ.500 கோடிக்கும் ஒரே டிக்கெட் தான்
500 கோடி ரூபாயில் எடுக்கப்படும் படங்களையும், 5 கோடி ரூபாயில் எடுக்கப்படும் படங்களையும் ஒரே டிக்கெட் கட்டணத்தில்தான் ரசிகர்கள் பார்க்க வேண்டும். 200 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவின் படத்தையும், 2 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவின் படத்தையும் அதே கட்டணத்தில்தான் பார்க்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்
ஒரு பக்கம் பல தியேட்டர்கள் இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த இடங்களில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் வணிக வளாகங்களில் பத்து தியேட்டர்கள் வரையில் புதிதாகத் திறக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் தியேட்டர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அவர்கள் இங்குள்ள எந்த சங்கங்களின் பேச்சையும் கேட்பதில்லை. அவர்களது வியாபாரப் பாணியே தனி. அவர்கள் சொல்லும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் படங்களைக் கொடுக்கிறார்கள்.
திடீரென சலுகை தரும் தியேட்டர்கள்
சமீபத்தில் வெளிவந்த பான் இந்தியா படமான 'ஆதிபுருஷ்' படத்திற்கு ஆரம்பத்தில் வழக்கமான டிக்கெட் கட்டணங்களே இருந்தன. ஆனால், சர்ச்சைகளால் அடுத்த சில நாட்களில் மக்கள் வருவது குறைந்து போகவே, டிக்கெட் கட்டணங்களை இரண்டு முறை அதிரடியாகக் குறைத்தார்கள். முதலில் 150 ரூ எனவும், அடுத்த நான்கு நாட்களில் 112 ரூ எனவும் குறைப்பதாக அறிவித்தார்கள். இத்தனைக்கும் அந்தப் படம் 3டி யில் 500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஒரு படம். சில தியேட்டர்களில் வாரம் ஒரு நாள் கட்டணங்களை அதிரடியாகக் குறைப்படுவதும் ஒரு சில ஊர்களில் நடந்து வருகிறது. அதிகபட்ச கட்டணமாக ரூ.100 மட்டுமே வாரம் ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கிறார்கள்.
டாப் நடிகர்களுக்கு டாப் விலை கட்டணம்
பெரிய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் கூட நியாயமான விலையில் கட்டணங்கள் இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். படம் வெளியாகும் அன்று முதல் நாள் காட்சியாக ரூ.2000 வரையிலும் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே மாதிரியாக கட்டணங்களை வசூலிக்கும் தியேட்டர்களும் உண்டு.
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க சொல்லலாமே...
தங்களது ஒரு படம் நல்ல வசூலைப் பெற்றுவிட்டால் அடுத்த படத்திற்கே 20, 30 கோடி சம்பளத்தை உயர்த்தும் முன்னணி ஹீரோக்கள் இங்குதான் இருக்கிறார்கள். இந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற டிவியிலிருந்து வந்த சிறிய நடிகர் அடுத்த படத்திற்கு மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டாராம்.
உயர்த்தாமல் என்ன செய்யலாம்
இப்போதிருக்கும் கட்டணங்களையே குறைத்தால்தான் மக்கள் மீண்டும் பழையபடி தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என்ற கருத்தும் ஒரு பக்கம் இருக்கிறது. கட்டணங்களை குறைத்தால் அதன் மூலம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதை வைத்து கேண்டீன் வியாரம் மூலமும் ஓரளவிற்கு லாபம் பார்க்கலாம் என்றும் சொல்கிறார்கள். அல்லது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒரு கட்டணம், மற்ற சிறிய பட்ஜெட் படங்களுக்குக் குறைவான கட்டணம் என வைக்கலாம் என்றும் சிலரது கருத்தாக உள்ளது. அதுவும் இல்லை என்றால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் நியாயமான ஒரு கட்டணம், மற்ற நாட்களில் அதைவிட குறைவான கட்டணம் வைத்தாலும் கூட பரவாயில்லை என்பதும் மற்றொரு கருத்தாக உள்ளது.
அரசு என்ன முடிவெடுக்க போகிறது
இப்படி பல பிரச்னைகள், பஞ்சாயத்துகளுடன் தான் தற்போது தியேட்டர்கள் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அவர்களுக்குப் பிடித்தால் மட்டுமே தியேட்டர்கள் பக்கம் வருகிறார்கள். குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள், அல்லது நல்ல படம் என்று வெளியில் தகவல் வரும் போது மட்டுமே தியேட்டர்கள் பக்கம் செல்கிறார்கள். முன்பைப் போல சினிமா பார்ப்பதை மட்டுமே தனக்கான பொழுதுபோக்கு என்று நினைத்த ரசிகர்கள் இந்தக் காலத்தில் இல்லை.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் வைத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை திரையுலகத்தினர் மட்டுமல்ல, சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.