2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி
தயாரிப்பு - மசாலா பிக்ஸ்
இயக்கம் - கண்ணன்
இசை - ரதன்
வெளியான தேதி - 8 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

சினிமாவுக்குக் கதை எழுதுவதும் ஒரு கலை. சிலர் அவர்களது வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களைக் கோர்த்து கதை எழுதுவார்கள். சிலர் அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து கதை எழுதுவார்கள். சிலர் பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து கதை எழுதுவார்கள். சிலர் வேற்று மொழிப் படங்களைப் பார்த்து அதில் கிடைக்கும் இன்ஸ்பிரேஷனை வைத்து கதை எழுதுவார்கள். சிலர் இதற்கு முன் தமிழிலேயே வந்த படங்களைப் பார்த்து அதைக் கொஞ்சம் இப்படி, அப்படி மாற்றி கதை எழுதுவார்கள்.

இந்த 'பூமராங்' படத்தின் கதை கடைசியாகச் சொல்லப்பட்ட விதத்தில் எழுதப்பட்டது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் இரு வேடங்களில் நடித்து வெளிவந்த ஆள் மாறாட்டக் கதையான 'கத்தி' படத்தின் கதையை அப்படியே முக மாற்றுக் கதையாக மாற்றி எழுதி இந்த 'பூமராங்' படத்தை இயக்கியிருக்கிறார் கண்ணன்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் விரல் விட்டு எண்ணக் கூடிய முகமாற்றுக் கதைகள் வந்துள்ளன. 'புதிய முகம், முகம்' என சில படங்கள் தமிழிலும், தெலுங்கில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 'எவடு' படமும் வெளிவந்துள்ளன.

இந்தப் படத்தை நதிநீர் இணைப்பு, விவசாயம் ஆகியவற்றைப் பற்றிய படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால், அதில் முகமாற்று, காஸ் எடுக்கும் கம்பெனி வேறு விஷயங்களும் சேர்ந்து கொண்டதால் இதை எந்த மாதிரியான படமாக ரசிப்பது என்பதில் ரசிகர்களுக்குக் குழப்பம் வரும். படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை முகமாற்று பிரச்சினைகள் வருகிறது, இடைவேளைக்குப் பின்னர் கதை விவசாயம், நதிநீர், கார்ப்பரேட், ஐ.டி என பல பிரச்சினைகளைப் பேசுகிறது.

மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஒரு இளைஞருக்கு முகத்தில் 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு அவர் முகம் சிதைந்து போகிறது. அவருடைய முகத்தை நார்மலாகக் கொண்டு வர முகமாமற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என்கிறார் டாக்டர். மூளைச் சாவு அடைந்த ஒருவரின் முகத்தைப் பெற்று தீக்காயம் பட்ட இளைஞருக்குப் பொருத்துகிறார்கள். அவர்தான் அதர்வா. சிகிச்சை முடிந்து அவர் வெளியே சென்றதும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அந்த முகத்தால்தான் தன்னை யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள் என நினைத்து தன் முகத்தின் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

காதலுக்கும், ஆக்ஷனுக்கும் இடைப்பட்ட முகமாக அதர்வா முகம் இருப்பதால் அவரை எந்தக் கதாபாத்திரத்தில் பொருத்திப் பார்ப்பது என்பதில் நமக்கும் ஒரு குழப்பம் வருகிறது. காதல், ஆக்ஷனை விட கோபத்தில் அவருடைய முகம் நன்றாக நடிக்கிறது. அதற்கு அவருடைய குரலும் பொருத்தமாக அமைகிறது. அம்மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அதர்வாவை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும். இந்தப் படத்தில் கூட பிளாஷ்பேக்கில்தான் அவருடைய நடிப்புக்கு ஏற்ற காட்சிகள் உள்ளன. மற்ற காட்சிகளில் அழுத்தமான நடிப்பில்லை.

படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ். தமிழ் சினிமாவில் நாயகனை சில காட்சிகளில் காதலிக்க மட்டுமே வந்து போகும் கதாபாத்திரம் மேகாவுக்கு. அதர்வாவைப் பார்த்ததும் அவருடைய ஷார்ட் பிலிமில் நடிக்கக் கூப்பிடுகிறார், அடுத்த காட்சியிலேயே அவரைக் காதலிக்கிறேன் என்கிறார். அவர் எடுத்த ஷார்ட் பிலிமை வேறு படத்தில் காட்சிகளாக வைத்து அதையும் சிறந்த படம் எனத் தேர்வு செய்து இயக்குனர் மகேந்திரனை வைத்து பாராட்ட வைக்கிறார்கள். இந்தக் காட்சிகள் எல்லாம் படத்தின் மையப் பிரச்சினைக்குத் தேவையில்லாத காட்சிகள். பிற்பாதியில் வரும் அழுத்தமான கதைக்கு இந்தக் காட்சிகள் நம்மை எந்தவிதத்திலும் தயார்படுத்தவில்லை. அழகுடனும், கிளாமருடனும் இருக்கும் மேகா ஆகாஷ், இனியாவது படங்களைத் தேர்வு செய்து நடிப்பது அவருக்கு நல்லது.

படத்தில் இடைவேளைக்குப் பிறகு நாயகன் அதர்வா, வாங்க வேண்டிய கைத்தட்டல்களை சமீபத்தில் நாயகனாக பிரமோட் ஆன ஆர்ஜே பாலாஜி வாங்கி விடுகிறார். நடப்பு அரசியலைக் கிண்டலடித்து அவர் பேசும் வசனங்கள் கைத்தட்டல் வாங்கிவிடுகின்றன. இரண்டாவது பாதியில் விவசாயம், நதிநீர் இணைப்பு என போராட்டக் களத்தில் குதித்து அதர்வா பெயர் வாங்குவதைவிட நான்கைந்து வசனம் பேசி பாலாஜி பெயர் வாங்கிவிடுகிறார்.

இரண்டாவது நாயகியாக இந்துஜா. வில்லனாக உபேன் பட்டேல். இவருக்கும் அவ்வளவு முக்கியத்துவம் படத்தில் இல்லை. சதீஷ் தான் பேசுவது அனைத்தும் நகைச்சுவை என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் சுஹாசினி ஓரிரு காட்சிகளில் வருகிறார். ஒரு என்ஜிஓ-வாக இருப்பவர் யாரென்றே தெரியாத ஒரு இளைஞரின் அம்மா எனப் பொய் சொல்லி 'ஆர்கன் டொனேஷன்' எப்படிச் செய்வார் ?. ஒரு என்ஜிஓ அப்படிச் செய்வாரா, மருத்துவமனை நிர்வாகமும் எந்த சான்றிதழையும் சரி பார்க்காமல் அப்படிச் செய்துவிடுவார்களா ?.

குடிக்கும் பாரில் வந்து தன் ஷார்ட் பிலிமுக்கு நடிக்க ஆட்களைத் தேடுகிறார் மேகா ஆகாஷ். அங்கே கரெக்டாக அதர்வா வந்துவிடுகிறார். அடுத்து அதர்வா தன் முகத்திற்கு சொந்தக்காரரைப் பற்றித் தெரிந்து கொள்ள திருச்சிக்கு ரயிலில் செல்ல, அதே ரயிலில், அதே கோச்சில் வந்து சரியாகப் பயணிக்கிறார் மேகா ஆகாஷ். இப்படி சினிமாவுக்காகவே இருக்கும் டெம்ப்ளேட் காட்சிகள் படத்தில் அடிக்கடி வந்து போகிறது.

ரதன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் கூட இல்லை, பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார் கிராமத்துக் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்.

நதிநீர் இணைப்பு, விவசாயத்தின் பெருமை ஆகியவற்றைப் பற்றி சில காட்சிகள் நெகிழ்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளுக்காக மட்டும் இயக்குனர் கண்ணனைப் பாராட்டலாம்.

பூமராங் - நல்ல விஷயத்தை 'ராங்' ஆகச் சொல்லியிருக்கிறார்கள்.

 

பூமராங் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பூமராங்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓