கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, கமல்ஹாசன், சரத்குமார், ராதிகா சரத்குமார், கருணாஸ், குஷ்பு என பல திரை நட்சத்திரங்களும் அரசியலில் தீவிரம் காட்டினர். ஆனால் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடக்காததால் இவர்கள் அனைவருமே தற்போது சினிமாவிற்கு திரும்பி விட்டனர்.
அந்த வகையில், கமல், கருணாஸ் புதிய படங்களில் நடித்து வரும் நிலையில், சரத்குமாரோ மனைவி ராதிகா தயாரிக்கும் வெப்சீரிஸில் நடிக்கிறார். இந்த நிலையில் பாஜ சார்பில் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த குஷ்புவும் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளார்.
தனது அவ்னி சினிமாஸ் சார்பில் ஏற்கனவே பல சீரியல்களை தயாரித்து வெளியிட்ட குஷ்பு, மீண்டும் ஒரு மெகா தொடரில் நடிக்க தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.