ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் பலரும் முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள். அப்படியான ஆசையில் இருந்த விஜயகாந்த், சரத்குமார் ஆகிய இருவருக்கும் இந்தத் தேர்தல் அவர்களது 'அட்ரசை' தொலைக்க காரணமாக இருந்திருக்கிறது.
நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை 2005ம் ஆண்டு ஆரம்பித்து 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அவர் முதன் முதலில் வெற்றி பெற்ற அந்தத் தொகுதியிலேயே இன்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட்டைக் கூடப் பெற முடியாமல் தோற்றுவிட்டார்.
2006 தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகளை கணக்கில் வைத்து 2011ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த்தை தனது கூட்டணிக்கு இழுத்தார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது, தேமுதிக 29 தொகுதிகளை வென்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆக சட்டசபையில் அமர்ந்தார். அதன்பிறகு கடந்த 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என அமைத்தும், இந்தத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி வைத்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
முன்னணி நாயகனாக இருந்த சரத்குமார் திமுகவில் இணைந்து 1998ம் ஆண்டு நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2001ம் ஆண்டில் அவரை திமுக ராஜ்யசபா எம்.பி.யாக நியமித்தது. ஆனால், 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து விலகி மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார். ஆனால், சில மாதங்களிலேயே ராதிகா கட்சியை விட்டு நீக்கப்பட்டார். சரத்குமாரும் கட்சியை விட்டு விலகினார்.
2007ம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்த சரத்குமார், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு தொகுதியில் அவரது கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. சரத்குமார் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்தத் தேர்தலில் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்து அவரது கட்சியை 40 தொகுதிகளில் போட்டியிட வைத்தார். அவரோ, அவரது மனைவியோ தேர்தலில் போட்டியிடவில்லை. பெயருக்கு ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் சென்று பிரச்சாரம் செய்தார்கள். ராதிகா தீவிர அரசியலில் இறங்கப் போவதாகச் சொல்லி, நடித்து வந்த டிவி தொடரிலிருந்து கூட விலகி வந்தார். ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடவேயில்லை. இத்தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.
ஒரு காலத்தில் நடிகர் சங்கத்தில் விஜயகாந்த், சரத்குமார் இருவரும் தலைவராகவும், செயலாளராகவும் இருந்து அந்த சங்கத்தின் கடனை அடைக்கக் காரணமாக இருந்தார்கள். அங்கிருந்துதான் அப்படியே அரசியல் பக்கமும் நுழைந்தார்கள். இருவரது அரசியல் வாழ்க்கையும் இந்தத் தேர்தலுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
விஜயகாந்த் நன்றாக ஓய்வெடுத்து அவரது உடல்நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சரத்குமார் தொடர்ந்து படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பதே அவர்களுக்கப் பொருத்தமாக இருக்கும் என்பதே பலரது பார்வையாக உள்ளது.