ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் | எனது சாதனைகள் தமிழ் மண்ணுக்கு சொந்தம் : அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: தெலுங்கில் 3 விருதுகளை வென்றாலும் தமிழில் அடிவாங்கிய கண்ணகி | பிளாஷ்பேக்: வெள்ளி விழா கொண்டாடிய புராண புனைவு கதை |
மறைந்த நடிகர் விவேக்கின் உடல் அரசு மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் மரக்கன்றுகளை ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் உயிர் காக்கும், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(ஏப்., 17) காலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைந்த செய்தி அறிந்து, காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அதிலும் கொரோனா காலம் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தாலும் மக்கள் மனதில் எவ்வளவு பெரிய ஹீரோவாக அவர் திகழ்ந்துள்ளார் என்பதை இன்றைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்து வந்த மக்கள் கூட்டத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் தலைவர்கள் இரங்கல், அஞ்சலி
பிரதமர், துணை ஜனாதிபதி, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். திமுக., சார்பில் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். வைகோ, பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ், சீமான், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மாலை 4 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுக அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பலர் அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோது மரக்கன்றுகளை ஏந்தி சென்றனர்.
பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட விவேக்கின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். பின் அவரின் உடல் மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
விவேக் இந்த உலகத்தை விட்டு சென்றாலும் அவரின் நகைச்சுவையும், அவர் மக்கள் மனதில் விதைத்த சமூக கருத்துக்களும் என்றும் நினைவில் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் நட்டு வைத்து சென்ற லட்சக்கணக்கான மரக்கன்றுகள் இந்த மண், இயற்கை உள்ள வரை என்றும் அவரது புகழை பேசும். திரையுலகினர், பொதுமக்கள் பலர் சொன்னது போன்று அவரின் ஒரு கோடி மரக்கன்று நடும் பணியை நாம் நிறைவேற்றினால் அதுவே அவருக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்.
இந்த பூமி உள்ள வரை விவேக்கின் புகழ் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். போய் வாருங்கள் விவேக்!