‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
தன்னால் முடிந்த நல்லவைகளை, நற்சிந்தனைகளை, நற்பண்புகளை, தான் நடிக்கும் படத்தின் தலைப்பைக் கொண்டே சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஆற்றல் மிகு திரைக்கலைஞராக பார்க்கப்பட்டவர்தான் 'புரட்சி நடிகர்' எம்ஜிஆர்.
“ஓர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான், உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான், கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான், கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்” என்ற புரட்சிகர கருத்தைக் கூட, தனது பாடல் மூலம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒரு பாடமாக சொல்லிச் சென்றவர்தான் 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர்.
படங்களின் தலைப்பு கூட, அவரது கதாபாத்திரத்தை உணர்த்தும் விதமாகவும், கதையின் உட்கருவைச் சொல்லும் விதமாகவும் அமைந்து, ரசிகர்களிடம் ஒரு பெரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துவிடும். அப்படி ஒரு எதிர்பார்ப்பினைத் தந்து, சமூக அக்கறையோடு எம்ஜிஆரால் தந்த திரைப்படம்தான் “திருடாதே”.
1961ம் ஆண்டு “ஏ.எல்.எஸ் புரொடக்ஷன்ஸ்” தயாரித்து, இயக்குநர் ப நீலகண்டன் இயக்கிய திரைப்படம் தான் “திருடாதே”. 1956ம் ஆண்டு நடிகர் தேவ் ஆனந்த் மற்றும் கீதா பாலி நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த “பாக்கெட் மார்” என்ற திரைப்படத்தின் தமிழாக்கமாக வெளிவந்த இத்திரைப்படத்திற்கு படத்தின் வசனகர்த்தாவான மா லட்சுமணன் இரண்டு தலைப்புகளைத் தந்தார். ஒன்று “திருடாதே” மற்றொன்று “நல்லதுக்கு காலமில்லை”.
படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு தவறு செய்யக் கூடாது என்ற எண்ணத்தை பதியச் செய்து, அதை உணர்த்தும் வண்ணமாக எடுத்துச் சொல்ல “திருடாதே” என்ற தலைப்பே சரியான தலைப்பு என எம்ஜிஆரால் முடிவு செய்யப்பட்டு, படத்திற்கு “திருடாதே” என்று பெயரிட்டனர். திரைக்கதையை கவிஞர் கண்ணதாசனும், மா லட்சுமணனும் எழுத, படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ப நீலகண்டன்.
எஸ்எம் சுப்பையா நாயுடு இசையமைத்திருந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக “என்னருகே நீயிருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்” என்ற பாடல், “ஏஎல்எஸ் புரொடக்ஷன்ஸ்” தயாரித்திருந்த முந்தைய திரைப்படம் ஒன்றிற்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தியால் இசையமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. படத்தின் நீளம் கருதி, அந்தப் படத்தில் இந்தப் பாடலை சேர்க்க முடியாமல் போக, இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடுவின் சம்மதம் பெற்று, இந்தப் படத்தில் அந்தப் பாடலை இடம் பெறச் செய்திருந்தனர் தயாரிப்பு தரப்பினர். 1961ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் வரை ஓடி, வணிக ரீதியாக மிகப் பெரிய வெறறியைப் பெற்றது.