தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கொண்டிருக்கிறார் மதுரை மண்ணின் மைந்தரான நடிகர் சூரி. விடுதலை பாகம் 1, 2, கருடன், கொட்டுக்காளியை தொடர்ந்து சமீபத்தில் சூரி நாயகனாக நடித்து வெளியான மாமன் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த வெற்றி தந்த உற்சாகத்திலிருந்த சூரியுடன் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம். இனி அவரே தொடர்கிறார்...
'மாமன்' வெற்றி சந்தோஷமாக இருக்கிறது. உறவு சார்ந்த, குடும்ப கதைகளை படமாக எடுக்கும்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கத்தான் செய்யும். தங்கள் வாழ்க்கையில் நடந்ததை சினிமாவாக பார்க்கிறப்ப மக்கள் அந்த காலத்துக்கே சென்று விடுவர். அண்ணனாக, தம்பியாக, மாமனாக, மச்சானாக படத்தை பார்த்து பழைய நினைப்பை வரவழைப்பதும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
மாமன் படத்தை நானே கதை எழுதி படமாக்கினேன். அதற்கும் காரணம் இருக்கிறது. நாங்கள் இன்றும் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். கூட்டுக் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் சகஜம். ஐந்து பேர் உள்ள குடும்பத்தில் ஒருவர் சரியாக இருக்க மாட்டார். அதை மறந்து உறவுகளை அரவணைத்து செல்வதில் தான் சந்தோஷம் இருக்கிறது. இதை மனதில் வைத்து இந்த கதையை எழுதினேன்.
படம் வெளியான சில தியேட்டர்களுக்கு சென்றபோது ரசிகர்கள் காட்டிய பாசம் இருக்கிறதே அதை சொல்ல வார்த்தைகளே இல்லை. உறவுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என அண்ணன், தம்பி, அக்கா, அம்மாமார்கள் படத்தை பார்த்து வெளியே வந்த போது என்னை கட்டி அணைத்து கொண்டனர். சிலர் அழுதே விட்டனர்.
சென்னை தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க வந்த தங்கை ஒருவர் அவரது குழந்தையை என்னிடம் கொடுத்து 10 நிமிடங்கள் என்னை அண்ணனாக நினைத்து பாசத்துடன் பார்த்தது நெகிழ்ச்சியை தந்தது. சண்டையிட்டு சென்ற தன் அண்ணனை இந்த படம் பார்த்தவுடன் அலைபேசியில் அழைத்து ராசியானதாக தெரிவித்தார் சகோதரி ஒருவர். இருவரும் அலைபேசியில் என்னிடம் பேசினர். சினிமாவை தாண்டி நம் மக்களுக்கு நம்மால் முடிந்ததை செய்திருப்பதை போன்ற உணர்வையும் தந்தது.
நிறைய வித்தியாசம்
நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கும், நாயகனாக நடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நகைச்சுவை நடிகனாக பஞ்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கிற அளவுக்கு கொடுக்கப்பட்டதை செய்தால் போதும். நாயகனாக நடிக்கிற போது படத்தை முழுவதுமாக சுமக்கிற பொறுப்பு வந்து விடுகிறது. படம் பூஜை போடுவதிலிருந்து படத்தை வெற்றிகரமாக ஓட வைக்கிற வரை ஒரு குடும்பத்தை எப்படி ஒரு குடும்ப தலைவர் கொண்டு செல்கிறாரோ அதை போன்று படத்தின் நாயகனுக்கு பொறுப்பு இருக்கிறது.
தொடர்ந்து கதை நாயகனாக நடிக்கவே வாய்ப்பு வருகிறது. விடுதலை படம் மூலம் மக்கள் குமரேசனாக என்னை கொண்டாடினர். மாமனை கொண்டாடுகின்றனர். எனக்கு பொறுப்பு கூடியிருப்பதாக உணர்கிறேன்.
நடிகர் சிவகார்த்திகேயன் போன்றோருடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என கேட்கிறீர்கள். நான் கதை நாயகனாக நடித்தாலும் அடிக்கடி சிவகார்த்திகேயனுடன் பேசி கொண்டு உள்ளேன். சிவகார்த்திகேயனே, ''அவருக்கும் எனக்கும் சமமான கதாபாத்திரம் அமைத்தால் சேர்ந்து நடிப்போம்,'' என கூறியிருக்கிறார். அப்படி வாய்ப்பு வந்தால் நாங்கள் இணைந்து நடிப்போம்.
தற்போது இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடிக்க தயாராகிறேன். விடுதலை படத்துக்கு அதிக உடல் உழைப்பை செலவிட வேண்டியிருந்து. அதைவிட மண்டாடி படத்தில் அதிக உழைப்பை கொடுத்து நடிக்க இருக்கிறேன் என்றவர், ''அண்ணே அடுத்த அழைப்பு வந்து விட்டது,'' என்றவாறு நம்மிடமிருந்து விடை பெற்றார்.