இட்லி கடை படத்தை பார்த்த ஜி.வி.பிரகாஷ் | டாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன் | ‛தக் லைப்' பட அப்டேட் தந்த த்ரிஷா | ‛பென்ஸ்' படத்திற்கு இசையமைக்கும் இளம் பாடகர் | 4 நாட்களில் ரூ.50 கோடி கிளப்பில் லக்கி பாஸ்கர் | மிக அழகாக நடித்த மீனாட்சி சவுத்ரி! துல்கர் சல்மான் வெளியிட்ட தகவல் | பாலிவுட் என்ட்ரி குறித்து சூர்யா சொன்ன பதில்! | கங்குவா, விடுதலை 2 - எஞ்சிய இரண்டு மாதங்களுக்கு இரண்டே பெரிய படங்கள்தான்? | பிளாஷ்பேக்: மகேந்திரன் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி | கன்னட இயக்குனர் குரு பிரசாத் தற்கொலை |
எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் என்ற மும்மூர்த்திகள் கோலோச்சியிருந்த தமிழ் திரையுலகின் 1960களில், தனது வித்தியாசமான நடிப்பால் பார்வையாளர்கள் அனைவரது கவனங்களையும் ஈர்க்கும் வண்ணம் “இரவும் பகலும்” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி, பின்னாளில் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு உயர்ந்ததோடு, தனி வாழ்விலும் ஒரு எளிய மனிதராக வாழ்ந்து மறைந்தவர்தான் நடிகர் ஜெய்சங்கர். குறைந்த முதலீட்டில் தயாரித்து, அதிக லாபம் ஈட்டித் தரும் வகையில் இவரது படங்கள் இருந்ததால், இவரை தயாரிப்பாளர்களின் நடிகராகவும், அவர்களது நலம் விரும்பியாகவும் பார்த்தனர் கலையுலகினர். தயாரிப்பாளர் முதல் லைட் மேன் வரை அனைவரையும் “ஹாய்” என ஒரு நட்புணர்வோடு பழகும் தன்மை கொண்ட ஒரு சமத்துவமிக்க நடிகராகவும் பார்க்கப்பட்டார் நடிகர் ஜெய்சங்கர்.
இத்தனை நற்பண்புகள் கொண்ட நடிகர் ஜெய்சங்கரை வைத்து யார்தான் படம் எடுக்க தயங்குவர்? அந்த வகையில் ஏ வி எம் தயாரிப்பில் 1966ம் ஆண்டு வெளிவந்து வெற்றி வாகை சூடிய திரைப்படம்தான் “ராமு”. இந்த திரைப்படத்தின் நாயகனாக முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஜெய்சங்கர். ஏ வி மெய்யப்ப செட்டியாரின் புதல்வர்களான முருகன், குமரன், சரவணன் ஆகியோரது நாயகன் தெரிவாக இருந்ததும் நடிகர் ஜெய்சங்கர் மட்டுமே. திடீரென ஏ வி மெய்யப்ப செட்டியாரை சந்தித்த நடிகர் ஜெமினிகணேசன், 1960ல் ஏ வி எம் தயாரிப்பில் வெளிவந்த “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்திற்குப் பின் தன்னை வைத்து படம் எடுக்காதது ஏன்? என அவருக்கே உரிய நட்புணர்வோடு உரிமையுடன் கேட்டுக் கொண்டதோடு, இந்த “ராமு” திரைப்படத்தில் தான் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ஏ வி மெய்யப்ப செட்டியாரிடம் கூற, அதற்கு பதிலளித்துப் பேசிய ஏ வி மெய்யப்ப செட்டியார், அடுத்தகட்ட நாயகர்களான மற்ற நடிகர்களோடு ஒப்பிடும்போது நீங்கள் பெறுகின்ற ஊதியம் தற்போது மிகவும் பெரிது.
இதன் காரணமாகத்தான் தங்களுக்கு வாய்ப்பளிக்க முடியாமல் போனதாக கூற, இந்தப் படத்தில் தான் நடிப்பதற்காக எவ்வளவு ஊதியம் தந்தாலும் தனக்கு முழு சம்மதம் என ஜெமினிகணேசன் ஏ வி மெய்யப்ப செட்டியாரிடம் சொன்ன பின்பு, “ராமு” திரைப்படத்தில் நாயகனாக நடிகர் ஜெமினிகணேசன் ஒப்பந்தமானார். மேலும் மனைவியை இழந்த கணவன், வாய் பேச இயலாத மகனின் தந்தை என்ற அந்த கனமான கதாபாத்திரத்தை நடிகர் ஜெமினிகணேசனால் வெகு சிறப்பாக செய்ய முடியும் என்ற ஏ வி மெய்யப்ப செட்டியாரின் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் தனது பண்பட்ட நடிப்பால் படத்தின் வெற்றிக்கு வித்திட்டார் நடிகர் ஜெமினிகணேசன். படம் வெளிவந்து பல திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது ஏ வி எம் நிறுவனத்திற்கு.