இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அது “ஏவிஎம் ஸ்டூடியோஸ்” என்ற அந்த மூன்றெழுத்து கலையுலக கனவுக்கூடம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன் நிறுவனரான ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மிகுந்த கவனத்துடனும், திட்டமிடலோடும் செயல்பட்டு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில், அதிக பொருட்செலவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்திருந்ததோடு, எண்ணற்ற கலையுலக ஜாம்பவான் திரைக்கலைஞர்களை கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்கும் உரியவராவார்.
அவரது மறைவிற்குப் பின் அவரது புதல்வர்கள் தந்தையின் வழியிலேயே, பாரம்பரியமிக்க அந்த தயாரிப்பு நிறுவனத்தை, மிகுந்த பொறுப்போடும், அற்பணிப்போடும் கட்டிக்காத்து வந்ததோடு, வேறு வேறு கதைக்களங்களுடன் கூடிய அற்புதமான திரைப்படங்களை தென்னிந்திய திரையுலகிற்கு தந்த வண்ணம் இருந்தனர். இப்படிப்பட்ட மாபெரும் தயாரிப்பு நிறுவனத்தின் மறக்க முடியாத பல காவியப் படைப்புகளில் ஒன்றுதான் “குழந்தையும் தெய்வமும்” என்ற திரைப்படம்.
1965ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், மற்ற ஏவிஎம் திரைப்படங்ளிலிருந்து மாறுபட்ட ஒரு தனிச்சிறப்புக்குரிய திரைப்படம் எனலாம். ஏவிஎம் சகோதரர்களில் ஒருவரான ஏவிஎம் குமரனின் தனிப்பட்ட விருப்பத்தாலும், அவருடைய தீவிர முயற்சியாலும் உருவான படம் இந்த “குழந்தையும் தெய்வமும்”.
பெங்களுரில் ஓடிக்கொண்டிருந்த “தி பேரண்ட் ட்ராப்” என்ற ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்த ஏவிஎம் குமரன், தமிழுக்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களோடு இந்தப் படத்தின் கதையை சினிமாவாக எடுத்தால் வெற்றிப்படமாக வருமே என்று எண்ணினார். தனது தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் விபரத்தைக் கூறி, அவரது யோசனையின் பேரில் இயக்குநர் ஏசி திருலோகசந்தரிடம் சென்று அப்போது தயாராகிக் கொண்டிருந்த “காக்கும் கரங்கள்” திரைப்படத்தில், இவர் பார்த்த “தி பேரண்ட் ட்ராப்” என்ற ஆங்கில திரைப்படத்தின் ஒரு பகுதியை மட்டும் சில மாற்றங்கள் செய்து இணைத்தால் படம் நன்றாக வரும் என்ற தனது அபிப்ராயத்தை கூற, அந்த ஆங்கில திரைப்படத்தைப் பார்த்த ஏசி திருலோகசந்தர், அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, இந்தப்படத்தை எந்த இந்திய மொழிகளில் எடுத்தாலும் படம் தோல்வி அடைவது உறுதி என்பதையும் தெளிவாக சொல்லிவிட்டார்.
படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்த ஏவிஎம் குமரன், தங்களது நிறுவனத்தின் வெற்றித் படங்களான “அந்தநாள்”, “களத்தூர் கண்ணம்மா” ஆகிய படங்களின் திரைக்கதை வசனகர்த்தாவான நடிகர் ஜாவர் சீதாராமனை அணுகி விபரத்தைக் கூற, அவரும் அந்த ஆங்கில திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஓரிரு நாட்களிலேயே தமிழுக்கான திரைக்கதையை அமைத்து தந்துவிட்டார்.
ஆங்கில படத்தில் நாயகனும், நாயகியும் பிரிவதற்கான காரணம் அழுத்தமாக சொல்லப் படாமலும், நாயகன் மற்றும் நாயகி இருவரையும் மீண்டும் இணைக்க பாடுபடும் அவர்களின் இரு குழந்தைகளில் ஒன்று ஆண் குழந்தையாகவும் மற்றொன்று பெண் குழந்தையாகவும் காட்சிப்படுத்தியிருந்ததை, தமிழுக்காக நாயகன் நாயகியின் பிரிவுக்கு காரணமாக, நாயகியின் தாய் கதாபாத்திரத்தையும், ஆண் பெண் என்றிருந்த குழந்தை கதாபாத்திரங்களை, ஒரே உருவத்திலுள்ள இரட்டை பெண் குழந்தைகளாக மாற்றியமைத்து, தமிழுக்கான திரைக்கதையும் அமைத்துத் தந்துவிட்டார் ஜாவர் சீதாராமன்.
1965ல் தமிழில் வெளியான “குழந்தையும் தெய்வமும்” திரைப்படத்தில், ஜெய்சங்கர் நாயகனாகவும், நாயகியாக ஜமுனாவும், இரட்டை குழந்தை நட்சத்திரங்களாக குட்டி பத்மினியும் நடிக்க, இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஏவிஎம் தயாரித்த இத்திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி, மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.
இதே திரைப்படத்தை தெலுங்கில் நடிகர் ஹரனாத் மற்றும் ஜமுனா நடிப்பில் “லேத மனசுலு” என்ற பெயரில் எடுத்து அங்கும் வெற்றியை தேடித் தர, ஹிந்தியிலும் இத்திரைப்படத்தை எடுக்க முற்பட்டனர். அதன்படி நடிகர் பிஸ்வஜித், நடிகை மாலா சின்ஹா மற்றும் மறைந்த ஹிந்தி நடிகர் ரிஷி கபூரின் மனைவியான நீட்டு சிங் அப்போது பேபி சோனியா என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, “தோ கலியான்” என்ற பெயரில் வெளிவந்தது இத்திரைப்படம்.
இந்தப் படத்தை மும்பையில் வெளியிட தியோட்டர்கள் ஏதும் கிடைக்காமல், “சூப்பர் தியேட்டர்” என்ற ஒரு பழைய தியேட்டரை ஒப்பந்தம் செய்து, இத்திரைப்படத்திற்காக அந்த தியேட்டரை ஏவிஎம் நிறுவனமே புதுப்பித்துத் தந்து, “நியூ சூப்பர் தியேட்டர்” என்ற பெயர் மாற்றத்துடன், படத்தை வெளியிட்டனர். இந்தப் படம் வட இந்தியாவில் வெளியான பத்து பதினைந்து நாட்களிலேயே, தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற, பதிலுக்கு வட இந்தியாவில் தமிழ்நாட்டில் தயாரான ஹிந்தி திரைப்படங்களை ஓட விடமாட்டோம் என அங்கும் போராட்டம் வெடிக்க, படம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சந்தித்த எண்ணற்ற பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் பெரும் முயற்சி எடுத்து, படம் அங்கு ஓட அனுமதி பெற்று, அதற்குப் பின் மீண்டும் படத்தை திரையிடச் செய்தனர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ வி எம். இத்தனை இன்னல்களுக்குப் பின் வெளிவந்த இத்திரைப்படம், வடஇந்தியாவில் ஓடிய அத்தனை ஊர்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, ஏவிஎம் குமரனின் முயற்சிக்கும், நம்பிக்கைக்கும் முழுமையான வெற்றியை பரிசாகத் தந்த திரைப்படம்தான் இந்த “குழந்தையும் தெய்வமும்”.