பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி |
விஷால், தன்னுடைய படத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் படத் தயாரிப்புக்காக பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் தொகையை 'லைகா' நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, படங்களின் உரிமையை தருவதாக விஷால் நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, தங்களுக்கு தர வேண்டிய 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட, விஷால் நிறுவனத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், 'லைகா' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையில், படம் வெளியாகி விட்டதால், கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 'விஷால் நிறுவனம் தரப்பில், 15 கோடி ரூபாய் மட்டுமே, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. 'உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில், 15 கோடி ரூபாய்க்கு நிரந்தர வைப்புத் தொகையாக, விஷால் நிறுவனம் செலுத்த வேண்டும்' என்று இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை, முதல் பெஞ்ச் உறுதி செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற தவறினால், விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை, எந்த வழியிலும் வெளியிடக் கூடாது என்றும் தடை விதித்தது.
இவ்வழக்கு கடந்த செப்., 8 அன்று நீதிபதி பி.டி.ஆஷா முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, 15 கோடி ரூபாயை இதுவரை செலுத்தவில்லை என்றும், விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம், வரும், 15ம் தேதி வெளியாகிறது என்றும், லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், வரும் 12ல் நேரில் விஷால் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டார். அவர் நடித்த மார்க் ஆண்டனி படத்தை வெளியிடவும் தடை விதித்தார். இதனால் மார்க் ஆண்டனி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விஷால் நேரில் ஆஜரானார். அப்போது மினி ஸ்டூடியோ தரப்பில், 60 கோடி செலவு செய்து மார்க் ஆண்டனி படத்தை தயாரித்து, 1400 ஸ்கிரீனில் வெளியாக உள்ளது. படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி ஆஷா, ‛மார்க் ஆண்டனி' படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். அதேசமயம் விஷாலுக்கு சொந்தமான சொத்து விபரங்களை ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்., 19க்கு தள்ளிவைத்தார்.
இதன்மூலம் விஷாலின் ‛மார்க் ஆண்டனி' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்படி செப்., 15ல் மார்க் ஆண்டனி படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாக உள்ளது.