'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா |
தமிழ் சினிமா எப்போது 1000 கோடி வசூலைத் தாண்டப் போகிறது என்ற ஒரு ஏக்கம் இங்குள்ள ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த கன்னட சினிமா கூட 1000 கோடி வசூலைத் தாண்டிவிட்டது. ஆனால், தென்னிந்திய சினிமாவுக்கெல்லாம் தலைமையமாக ஒரு காலத்தில் இருந்த சென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் தமிழ் சினிமா 500 கோடி வசூலைத் தாண்டி போகாமல் நிற்கிறது.
இந்த 2023ம் வருடம் அந்த 1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திவிடலாம் என சில ரசிகர்கள் பேராசையுடன் இருக்கிறார்கள். எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு இந்த வருடத்தில் அனைத்து முக்கிய தமிழ் சினிமா கதாநாயகர்களின் பிரம்மாண்டப் படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன.
“ஜெயிலர், இந்தியன் 2, லியோ, அஜித் 62, தங்கலான், சூர்யா 42, பொன்னியின் செல்வன் 2” என ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது. ஆனால், இதெல்லாம் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் வெளிவர உள்ளன. அதே சமயம் இந்த 2023ம் ஆண்டின் ஆரம்பம் சொல்லிக் கொள்ளும்படி இல்லையே என்ற வருத்தமும் திரையுலகத்தில் இருந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 25 படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் 2, 3 படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இந்த நிலை கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. பத்து படங்கள் வெளியானால் அதில் ஒரு படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்து வசூலைப் பெறுகிறது. மற்ற படங்கள் சுமாரான வெற்றி கூடப் பெற முடியாமல் பெரும் தோல்வியைச் சந்தித்து, பல கோடி நஷ்டத்தை சந்திக்கிறது.
இந்த 2023ம் ஆண்டின் முதல் வாரத்தில் இரண்டு படங்கள் வெளிவந்தாலும் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் மீதே இருந்தது. இரண்டு படங்களுமே வியாபார ரீதியாக வெற்றிப் படங்கள்தான் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடித்த 'வாரிசு' படம் 300 கோடியைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அஜித் நடித்த 'துணிவு' படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அப்படத்தின் வசூல் 200 கோடி வரை போயிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 'வாரிசு' படம் அதிக பட்ஜெட்டில் தயாரானதால் அதன் லாப சதவீதம் குறைவாகவும், 'துணிவு' படம் அதை விட குறைவான பட்ஜெட்டில் தயாராகி நல்ல வசூலைப் பெற்றதால் லாப சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. விஜய், அஜித் இருவருக்கும் இடையே இந்த இரண்டு படங்களால் கடும் போட்டி ஏற்பட்டாலும் இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது திரையுலகத்தினருக்கு பெரும் ஆறுதலைக் கொடுத்தது.
அந்த இரண்டு படங்கள் வெளியான பத்து நாட்களுக்குப் பிறகே அடுத்த புதிய படங்கள் வெளிவந்தன. இந்த மாதத் துவக்கத்தில் பிப்ரவரி 3ம் தேதி “பொம்மை நாயகி, நான் கடவுள் இல்லை, நான் யார் தெரியுமா, ரன் பேபி ரன், தலைக்கூத்தல், த கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'பொம்மை நாயகி' விமர்சன ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது. 'ரன் பேபி ரன்' படம் வெற்றிப் படமென தயாரிப்பு நிறுவனம் சொல்லி அதற்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. 'தலைக்கூத்தல்' படம் சிறப்பான விமர்சனத்தைப் பெற்றும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. மலையாளத்தில் வந்து விமர்சகளால் பெரிதும் பாராட்டைப் பெற்ற 'த கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தைத் தமிழில் ரீமேக் செய்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர்.
பிப்ரவரி 10ம் தேதி ''டாடா, கொடை, கூட்டம், நினைவே நீ, வர்ணாசிரமம், வசந்த முல்லை” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'டாடா' படம் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி இரண்டு வாரங்களாக ஓடி வருவதால் குறிப்பிட்ட லாபத்தைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
பிப்ரவரி 17ம் தேதி “பகாசூரன், மூன்றாம் பௌர்ணமி, வாத்தி” ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் தனுஷ் நடித்து வெளிவந்த 'வாத்தி' படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியானது. தமிழை விடவும் தெலுங்கில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எட்டு நாட்களில் 75 கோடி வசூலித்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தப் படம் மூலம் தனுஷுக்கு தெலுங்கில் ஒரு புதிய மார்க்கெட் உருவாகி உள்ளது.
பிப்ரவரி 24ம் தேதி “குற்றம் புரிந்தால், ஓம் வெள்ளிமலை, சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், தக்ஸ்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்கள் வெளிவந்த தகவல் கூட பல சினிமா ரசிகர்களை எட்டவில்லை என்பதே உண்மை.
கடந்த வருடம் 2022ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 25 படங்கள் வெளிவந்தன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 26 படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த வருடத்தில் முதல் இரண்டு மாதங்களில் ஓடிடியில் 5 படங்கள் நேரடியாக வெளிவந்தன. ஆனால், இந்த வருடத்தில் இதுவரை ஒரு படம் கூட ஓடிடியில் வெளியாகாதது ஆச்சரியமாக உள்ளது.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சூப்பர் ஹிட் என்று சொன்னால், 'வாத்தி, துணிவு' ஆகிய படங்களையும், ஹிட் என்று சொன்னால் 'வாத்தி' படத்தையும், சுமாரான ஹிட் என்று சொன்னால் 'டாடா' படத்தையும் சொல்லலாம்.
வரும் மார்ச் மாதம் அதிகமான படங்களை எதிர்பார்க்க முடியாது. இறுதித் தேர்வு ஆரம்பமாகும் மாதம். அதே சமயம், ஏப்ரல் மாதம் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. மார்ச் மாதத்தில் 10ம் தேதி 'அகிலன்', 30ம் தேதி 'பத்து தல' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. ஏப்ரல் 28ம் தேதி 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி 'பிச்சைக்காரன் 2' படம் வெளியாவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இன்னும் சில படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு மாதங்களில் 2, 3 வெற்றிகள் மட்டுமே குறிப்பிடும்படி இருந்தாலும் எஞ்சியுள்ள பத்து மாதங்களில் பல வெற்றிகள் வரும் என்ற நம்பிக்கையுடன் திரையுலகத்தினரும், ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
2023 இதுவரையிலான வெளியீடுகள்…
ஜனவரி
ஜனவரி 6
வி 3
டியர் டெத்
ஜனவரி 11
துணிவு
வாரிசு
ஜனவரி 20
வல்லவனுக்கும் வல்லவன்
ஜனவரி 26
பிகினிங்
ஜனவரி 27
மெய்ப்பட செய்
பிப்ரவரி
பிப்ரவரி 3
பொம்மை நாயகி
நான் கடவுள் இல்லை
நான் யார் தெரியுமா
ரன் பேபி ரன்
தலைக்கூத்தல்
த கிரேட் இந்தியன் கிச்சன்
பிப்ரவரி 10
டாடா
கொடை
கூட்டம்
நினைவே நீ
வர்ணாசிரமம்
வசந்த முல்லை
பிப்ரவரி 17
பகாசூரன்
மூன்றாம் பௌர்ணமி
வாத்தி
பிப்ரவரி 24
குற்றம் புரிந்தால்
ஓம் வெள்ளிமலை
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்
தக்ஸ்