''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக படமாக வெளியாகிறது. மணிரத்னம் இயக்க விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் செப்., 30ம் தேதி தமிழ் மட்டுமல்லாது 5மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை காண உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் ஆர்வமாய் உள்ளனர். தற்போது படக்குழுவினர் பம்பரமாய் சுழன்று படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குந்தவையாக நடித்த திரிஷா இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறுகையில், ‛‛பொன்னியின் செல்வன் வரலாற்று மற்றும் கமர்ஷியல் இரண்டும் இணைந்த படம். எனவே, எனது நடை, உடை, பாவனை, தோற்றம், குரல், பார்வை என அனைத்தையும் மொத்தமாக மாற்ற வேண்டியிருந்தது.
குந்தவையின் தோற்றத்திற்காக 6 மாதங்களாக ஹோம் ஒர்க் செய்து பல பார்வைகளை பரிசோதித்து பார்த்தோம். கிட்டத்தட்ட 100க்கும் மேக்கப் உடைகள், நகைகள் அணிந்து, இறுதியாக தற்போது நான் நடித்துள்ள வேடத்தை தேர்வு செய்தோம். குந்தவை என்ற அடையாளத்தைக் கொண்டு வந்ததற்காக என்னுடைய ஒப்பனையாளர் ஏகா லகானிக்கு மிக்க நன்றி. இதெல்லாம் குந்தவை கதாபாத்திரத்திற்காக நான் எதிர்கொண்ட சவால்கள். மேலும், இப்படத்தில் உடைகள் முழுவதும் அணிவது போல இருக்கும், நகைகள் நிறைய இருக்கும், நடிக்கும் போது பெரிதாக தெரியாது. ஆனால், ஓய்வு எடுக்கும் போது பெரும் சவாலாக இருந்தது. தலையில் பன் கொண்டை, நகைகளின் அதிக எடையால் காது வலிக்கும். தண்ணீர் குடிக்க முடியாது.
மணி சார் வசனங்கள் முழுக்க முழுக்க செந்தமிழில் கொடுக்கவில்லை. சில இடங்களில் செந்தமிழ் இருந்தது. சில இடங்களில் வசனங்கள் பேசுவதற்கு சிரமமாக இருந்தது. வசனங்களை பேசிக்கொண்டே உணர்வுகளையும் கொண்டு வர முடியவில்லை. ஆகையால், உணர்வுகளுக்கு ஏற்ப வசனங்களை மாற்றிக் கொண்டோம். ஆனால், முதலில் வசனங்களை படித்ததும் வாயில் நுழையவில்லை. நிறைய ஒத்திகை செய்தேன். வசனங்களை சரியாக உச்சரிப்பதற்கு மணி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். அதனால் வசனங்கள் பேசுவது எளிமையானதாக இருந்தது.
நாங்கள் அனைவரும் நடிகர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்து விட்டால் நாங்கள் அனைவரும் கதாபாத்திரமாக மாறி விடுவோம்.ஆதலால் இரண்டு படங்களில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து விட்டு, இப்படத்தின் சகோதரியாகவும் நடிக்க முடிந்தது. அதுமட்டுமல்ல, இப்படத்தில் ஆண்களும் பெண்களுக்கு இணையாக ஒப்பனை செய்ய அதிக நேரம் ஆனது. காலை 7 மணி படபிடிப்பிற்காக அனைவரும் அதிகாலை 2.30 மணிக்கே ஒப்பனை செய்ய ஆரம்பித்து விடுவோம் என்றார்.
ஐஸ்வர்யா ராயின் நட்பு இப்படம் மூலம் கிடைத்தது. குந்தவைக்கும், நந்தினிக்குமான மோதல் காட்சிகள் நிறைய இருக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பிலேயே நானும் ஐசும் சேர்ந்த காட்சிகளை எடுத்தார்கள். அப்போதே நாங்கள் நன்றாக பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால், மணி சார் நீங்கள் இருவரும் இந்த அளவிற்கு நட்பாக இருக்க கூடாது. காட்சிகள் சரியாக வராது என்று கூறினார். அதன்படி, நாங்கள் அடுத்த மூன்று நாட்கள் நடந்து கொண்டோம். ஆனால், நாங்கள் நடித்த காட்சி சிறப்பாக வந்திருந்தது என்று அனைவரும் ஆச்சரியத்தில் பாராட்டினார்கள். மணி சார் கூறியதை நாங்கள் செய்தோம் அவ்வளவுதான்.
ஜானு கதாபாத்திரம் போல குந்தவை கதாபாத்திரமும் உங்களின் அடையாளமாகுமான்னு கேட்கிறார்கள். இப்படத்திலும் எனக்கு ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஆனால், ஒரு கதாபாத்திரம் அடையாளச் சின்னம் ஆகுமா என்பதை படம் வெளியாகி அனைவரும் கூறும் போது தான் தெரியும்.
ஊரடங்கு சமயத்தில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தாமல் அனைவரும் அவரவர் வீட்டிலேயே தான் இருந்தோம். ஆனால், மணி சார் எல்லோரும் எடை அதிகரித்து விடுவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தார். அவ்வபோது, தொடர்புகொண்டு திரிஷா, நீங்கள் குண்டாகவில்லை என்று நம்புகிறேன். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறி கொண்டிருப்பார்.
என் வாழ்க்கையில் பொக்கிஷமாக கிடைத்த இந்த குந்தவையிடம் நான் கற்றுக் கொண்டது. குந்தவை எப்போதும் தைரியமாக கெத்தாக இருப்பார். நானும் இனி அதையே பின்பற்றுவேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.