கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? | அர்ஜூன் தாஸிற்கு விருது கிடைத்ததை மகிழ்ச்சியாக பகிர்ந்த சாந்தகுமார்! | ‛‛அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். ஆனால்...'': நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் வருத்தம் | தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் |
'டிரான்ஸ்' எனும் பெயரில் வெளியாகி கேரளாவை கலக்கியதோடு, சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் தற்போது தமிழில் 'நிலைமறந்தவன்' எனும் பெயரில் வெளியாகிறது. மதத்தை வைத்து வியாபாரம் நடத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி பிழைக்கும் போலி பாதிரியார்களையும், அவர்கள் பின்னால் இருந்து இயக்கும் சூழ்ச்சிக்கார கூட்டங்களையும் உரித்துக் காட்டுகிறது இப்படம். படத்தின் திரைக்கதையை மிக அருமையாக செதுக்கியுள்ளார் 'வின்சென்ட் வடக்கன்'. கன்னியாகுமரியில் துவங்கும் முதல் காட்சி அப்படியே மும்பை, கொச்சி என விரைவதுடன் விறுவிறுப்பாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் வறுமையை பயன்படுத்தி எப்படி எல்லாம் செயல்படுகிறார்கள், எப்படியெல்லாம் கட்டமைக்கப்பட்ட காட்சிகளை அரங்கேற்றி மக்களை ஏமாற்றுகிறார்கள் என விறுவிறுப்போடும், நகைச்சுவையோடும் நம் முன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 'புஷ்பா', 'விக்ரம்' போன்ற வெற்றிப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து, தமிழக மக்களை பெரிதும் கவர்ந்துள்ள 'பஹத் பாசில்' தான் இப்படத்தின் கதாநாயகன்.
துணிச்சலான கதை
மக்களின் தன்னம்பிக்கையை தூண்டும் ஒரு 'மோட்டிவேஷனல் டிரைனராக' கன்னியாகுமரியில் சேவையாற்றி வரும் விஜய் பிரசாத் (பஹத் பாசில்) குடும்ப பின்னணியாலும், அடுக்கடுக்கான சோக நிகழ்வுகளினாலும் மனம் தளர்ந்து போகிறார். வாழ்வில் எப்படியாவது மேலே வர வேண்டும் எனும் அவரின் உத்வேகத்தையும், அவரின் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையை பயன்படுத்தியும், மதமாற்று கும்பல் அவரை தங்கள் வலையில் விழ வைக்கிறது.
அரசாங்கம் முதல் பல்வேறு துறைகளிலும் தங்களுக்கு இருக்கும் ஆளுமையால், காது கேளாதோரை கேட்க வைப்பதாகவும், பார்வையற்றவரை பேச வைப்பதாகவும், முடவர்களை நடக்க வைப்பதாகவும், புற்று நோய் போன்ற தீராத நோய்களை குணப்படுத்துவதாகவும் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறது. இந்த கும்பலின் வலையில் சிக்கும் விஜய் பிரசாத் அதில் இருந்து மீள்கிறாரா இல்லையா என்பதுதான் கதை.
படத்தின் தொடக்கத்தில் ஏழ்மையான பின்னணியில் தோன்றும் 'விஜய் பிரசாத்' எப்படி 'ஜோஷுவா கார்ல்டன்' எனும் புகழ்பெற்ற ஒரு 'பாஸ்டராக' உருவெடுக்கிறார், கோடிகளில் பணம் எப்படி சம்பாதிக்கிறார்கள் என விறுவிறுப்பான காட்சிகளாக வெளிப்படுத்தி உள்ளார் இயக்குனர் அன்வர் ரஷீத். யாருமே எடுக்க துணியாத இப்படிப்பட்ட ஒரு கதையை திரைப்படமாக எடுத்துள்ள அவரது துணிச்சலை பாராட்டியே தீர வேண்டும்.
சான்றிதழ்
அதிலும், இத்திரைப்படத்திற்கு கேரள தணிக்கைத் துறை சான்றிதழ் தர சம்மதிக்காமல், படத்தின் காட்சிகள் பலவற்றை நீக்குமாறு குறிப்பிட்டிருந்தது. காட்சிகளை நீக்க மறுப்பு தெரிவித்த இயக்குனர் அன்வர் ரஷீத், மும்பை வரை சென்று அங்குள்ள தணிக்கைத் துறை சார்பில் சான்றிதழ் பெற்று படத்தை வெளியிட்டுள்ளார்.
நாயகன் பஹத் பாசில் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். உணர்வுகளை இப்படி கூட வெளிப்படுத்த இயலுமா என நமக்குள் எண்ண வைக்கிறார். கதாநாயகியாக வரும் நஸ்ரியா இந்த படத்தில், பலரும் நடிக்க தயங்கக் கூடிய ஒரு முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கவுதம் வாசுதேவன் மேனன், விக்ரம் திரைப்படத்தில் காவல் உயரதிகாரியாக வரும் செம்பன் வினோத், விநாயகன் என படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் நடிப்பில் போட்டிப் போட்டு நடித்துள்ளனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் அமல் நீரத்தின் கேமரா மற்றும் ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் ஒலி அமைப்பு, ஜாக்சன் விஜயனின் இசை ஆகியன படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்றே சொல்லலாம். ரசிகர்கள் இதுவரை பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் மலையாளத்தில் 'டிரான்ஸ்' என்ற பெயரில் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது வரும் ஜூலை 15ல் தமிழிலும் வெளியாக உள்ளது. 'தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்' தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிட உள்ளது.