கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகை சேர்ந்த ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி என்கிற இரண்டு இளம் நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் பொதுவான ஒன்று இவர்கள் இருவரும் படப்பிடிப்பு சமயத்தில் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பதும் அதனால் படப்பிடிப்பில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன என்பதும் தான்.
இதனை தொடர்ந்து மலையாள குணச்சித்திர நடிகரான டினி டாம் என்பவர் ஒரு பேட்டியில் கூறும்போது, மலையாள சினிமா படப்பிடிப்புகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றும் அதனாலேயே தனது மகனை சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதற்கு தனது மனைவி பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்றும் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல பிரபல சினிமா பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் ஒரு பேட்டியில் கூறும்போது, படப்பிடிப்புகளில் போதைப்பொருள் பயன்பாடு புழக்கத்தில் இருக்கிறது என்றும் இதை பயன்படுத்தும் நபர்கள் இரவில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருப்பதால் மறுநாள் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதாகவும் படப்பிடிப்புக்காக கொடுத்த தேதிகளை மாற்றி மாற்றி குளறுபடி செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இப்படி திரையுலகில் இருந்து தொடர்ந்து போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் நடக்கும் பல படப்பிடிப்புகளில் போலீசாரும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளும் திடீர் திடீரென அதிரடி சோதனை நடத்த துவங்கியுள்ளனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மலையாள தயாரிப்பாளர்கள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பாளர்கள் மத்தியில் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.