தினமலர் விமர்சனம் » ஸ்ரீராம ராஜ்ஜியம்
தினமலர் விமர்சனம்
என்.டி.ஆரின் வாரிசு பாலகிருஷ்ணா - ராமனாகவும், நயன்தாரா - சீதையாகவும் நடித்து, ஆந்திராவில் வெளிவருவதற்கு முன்பாகவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி, பின் தெலுங்கில் வெளிவந்த ராமர் - சீதை பற்றிய புராணத்தின் தமிழ் டப்பிங் தான் "ஸ்ரீராம ராஜ்ஜியம்".
வனவாசம் முடிந்து, ராவணவதம் எல்லாம் முடிந்து சீதையுடன் நாடு திரும்பும் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மகிழ்ச்சியாக மன்னராட்சி நடத்தும் ராமனிடம் ஒற்றன் ஓடிவந்து சீதை மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் சந்தேகத்தைக் கூற மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ராமன், சீதையை கர்ப்பிணி என்றும் பாராமல், காட்டில் சீதையை விட்டு வரும்படி லட்சுமணனுக்கு கட்டளையிடுகிறார். வால்மீகி முனிவரின் பாதுகாப்பில் காட்டில் லவ, குச என இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்கும் சீதை, ராமரே வியக்கும் வண்ணம் அவர்கள் வளர்ந்து ஆளானதும் அவர்களை ராமனிடம் சேர்பித்துவிட்டு என்ன முடிவெடுக்கிறாள், தான் பதிபத்தினி... என்பதை எவ்வாறு மக்களுக்கும் மன்னருக்கும் உணர்த்துகிறார் என்பதுதான் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தின் மொத்த கதையும்!
எல்லோருக்கும் நன்கு பரிச்சயமான இந்த புராண கதையை எத்தனைக்கு எத்தனை பிரம்மாண்டமாகவும், பிரமாதமாகவும் எடுக்க முடியுமோ அத்தனை பிரமாதமாக, பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள் பலே! பலே!!
பாலகிருஷ்ணா, ராமராக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். சும்மா இல்லை... அப்பா கிருஷ்ணராக, ராமராக எட்டடி பாய்ந்திருந்தார் என்றால், இவர் பதினாறடி பாய்ந்திருக்கிறார். ராமர் - பாலகிருஷ்ணா மாதிரியே இனி, சீதை என்றால் நயன்தாராதான் ஞாபகத்திற்கு வருவார். அத்தனை அம்சமாக சீதா தேவியாகவே வாழ்ந்திருக்கிறார் நயன் பேஷ்! பேஷ்!!
வால்மீகி முனிவராக நாகேஸ்வரராவ், ராமனின் தாயார் கோசலையாக கே.ஆர்.விஜயா, பூமா தேவியாக ரோஜா, லவ-குசாக்களாக மாஸ்டர் நடிகர்கள் தனுஷ்-கவுரவ் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!
ஒருசில இழுவையான காட்சிகளை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், ரவீந்தர்.எம்.கிரண்குமாரின் கலை இயக்கம், இளையராஜாவின் இசை, பி.ஆர்.கே.ராஜூவின் ஒளிப்பதிவு, பிறைசூடனின் பாடல்கள் மற்றும் வசனம், பாபுவின் இயக்கம் உள்ளிட்டவைகள் கச்சிதம்! ஆக மொத்தத்தில் இந்த தலைமுறையினரும் வாவ் சொல்லி வாய்பிளக்க வைக்கும் பிரம்மாண்ட திரைக்காவியம் - - "ஸ்ரீராம ராஜ்ஜியம்"!.