தினமலர் விமர்சனம் » ஒரு மழை நான்கு சாரல்
தினமலர் விமர்சனம்
ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் நான்கு நண்பர்கள், வயிற்றை கழுவ கண்டதையும் செய்யும் அவர்களில் ஒருவனுக்கு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணின் மீது காதல். தங்கைக்கு எதிரே அவனது காதலை அங்கீகரிக்கும் காதலியின் அண்ணன், தங்களது வசிக்கும் வாழ்க்கைக்கும் ஒத்துவராது எனக் கருதி, தங்கையின் காதலனை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். அதற்காக அவனது அறை நண்பர்களையே தேர்ந்தெடுக்கும் அந்தபணக்கார அண்ணன், நண்பர்களுக்கு லட்சலட்சமாக பணமும் தருகிறார். பணத்திற்காக நண்பர்கள், நட்பிற்கு நயவஞ்சகம் செய்தார்களா...? காதலனின் கதையை முடித்தார்களா...? எனும் மீதிக்கதையை தலையை சுற்றி மூக்கை தொட்டு "ஒரு மழை நான்கு சாரல்" படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஆனந்த்!
ரவி, சுதர்ஷன், கண்ணா, சதீஷ், அனகா, ரம்யா, ஷீலா, கவுசிகன், சிட்டிபாபு உள்ளிட்ட புதுமுகங்களுடன் எம்.எஸ்.அருள்மாரி, சிங்கமுத்து, கோவை செந்தில், ஆக்ஷன் பிரகாஷ் உள்ளிட்ட பழகிய முகங்களும் நடித்திருக்கின்றனர். இவர்களில் சிங்கமுத்துவும் அவரது காமெடியும் மட்டுமே ஆறுதல்!
மேஹனின் இசை, டி.மகிபாலனின் ஒளிப்பதிவு, ஆனந்தின் எழுத்து-இயக்கம் எல்லாம் "ஒரு மழை நான்கு சாரல்" படத்தை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாக காட்சியளிக்க செய்துள்ளது பாவம்! "ஒரு மழை நான்கு சாரல்" - கதை வித்தியாசம் என்பது மட்டுமே ஆறுதல்!!