நான் மிருகமாய் மாற,Naan Mirugamai Maara

நான் மிருகமாய் மாற - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - சத்ய சிவா
இசை - ஜிப்ரான்
நடிப்பு - சசிகுமார், விக்ராந்த், ஹரிப்ரியா
வெளியான தேதி - 18 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவும், ரசிகர்களும் எத்தனையோ பழி வாங்கும் கதைகளைப் பார்த்திருக்கிறது. அதில் இந்தப் படமும் ஒன்று. புதிய கதைகள், கதைக்களங்கள் என ஏதாவது கிடைக்குமா என பல இயக்குனர்கள் தேடித் தேடி முயற்சித்துக் கொண்டிருக்க இயக்குனர் சத்ய சிவா 90களின் படங்களைப் போன்ற ஒரு கதையைக் கொடுத்து பின்னோக்கிப் போயிருக்கிறார். 'கழுகு, சிவப்பு' படத்தை எடுத்த சத்ய சிவாவா இது என ஆச்சரியமாக உள்ளது.

சினிமாவில் சவுண்ட் இஞ்சினியராக இருப்பவர் சசிகுமார். ஒரு பெரிய புள்ளியை ஒரு கூலிப்படை கொலை செய்வதில் இருந்து காப்பாற்றுகிறார் சசிகுமாரின் தம்பி. அதனால் ஆத்திரமடைந்த கூலிப்படை சசிகுமாரின் தம்பியைக் கொலை செய்கிறது. தன் தம்பியைக் கொன்றவர்களுக்கு சரியான நீதி கிடைக்காது என முடிவெடுக்கும் சசிகுமார் அந்த கூலிப்படையைச் சேர்ந்த ஆறு பேரைக் கொலை செய்கிறார். இதனால் கடும் கோபமடையும் கூலிப்படைத் தலைவன் விக்ராந்த், சசிகுமாரை மிரட்ட ஆரம்பிக்கிறார். அவர் தம்பி காப்பாற்றிய பெரிய புள்ளியை சசிகுமாரே கொல்ல வேண்டும், அல்லது சசிகுமார் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்வேன் என்கிறார். இந்த நிலையில் சசிகுமார் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் முழுவதும் கத்தி சத்தமும், வெட்டு சத்தமும், ரத்த சத்தமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சவுண்ட் இஞ்சினியர் கதை என்பதால் அதற்கான சவுண்ட்டை படம் முழுவதும் அதிக வால்யூமில் ஏற்றி விட்டிருக்கிறார் படத்தின் இயக்க இஞ்சினியர் சத்ய சிவா. படத்தில் புதிதாக ஏதாவது சொல்லியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றமே.

அப்பாவியான தோற்றத்தில் இருந்து கொண்டு, ஆறு பேரைக் கொலை செய்யும் அளவிற்கு மிருகமாய் மாறுகிறார் சசிகுமார். அவருக்குள் இருக்கும் அந்த மிருகம் தொடர்ந்து உறங்காமல் வெறித்தனமாய் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கூலிப்படைத் தலைவன் விக்ராந்தை அந்த மிருகம் கடித்துக் குதறியதா இல்லையா என்பதை பாசமான மகனாவும், வெறி பிடித்த மிருகமாகவும் மாறி மாறி தவிக்கிறார் சசிகுமார்.

கூலிப் படைத் தலைவனாக விக்ராந்த். அவருக்கும் இயக்குனருக்கும் ஏதோ சண்டை போலிருக்கிறது. விக்ராந்துக்கு வேறு யாரோ டப்பிங் பேசியிருக்கிறார்கள், அது கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை. சிகரெட் பிடித்துக் கொண்டு குளோசப்பில் மிரட்டுவது போல பேசுவதைத் தவிர விக்ராந்திற்கு வேறு வில்லத்தனம் எதுவுமில்லை.

டிவி சீரியல் குடும்பம் போல சசிகுமார் மனைவியாக ஹரிப்ரியா, பெற்றோர்களாக கேஎஸ்ஜி வெங்கடேஷ், துளசி. எப்போதும் பதற்றத்துடனேயே இருக்கிறார்கள்.

இரவு நேரக் காட்சிகள் படத்தில் அதிகமாக உள்ளது. அதற்காக லைட்டிங்கிலும் கவனம் செலுத்தி தன் பங்கிற்கு உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி. ஜிப்ரான் பின்னணி இசையா என்பது ஆச்சரியமாக உள்ளது.

படத்தில் கஞ்சா புகைப்பது, சிகரெட் புகைப்பது என எச்சரிக்கை வாசகங்கள் அதிகம் இருக்கின்றன. படம் முழுவதும் ரத்தம் தெறிப்பதால் 'ரத்தம் தெறிக்கத், தெறிக்க வன்முறை வேண்டாம், கொலை செய்வது பாவம்' என மற்றொரு எச்சரிக்கை வாசகத்தையும் நிரந்தரமாக வைத்திருக்கலாம். படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் செல்லும் காட்சிகளில் 'தலைக்கவசம் அவசியம்' என எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருப்பதை மட்டும் பாராட்டலாம்.

நான் மிருகமாய் மாற - கண்கள் பத்திரம்…

 

நான் மிருகமாய் மாற தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நான் மிருகமாய் மாற

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓