கழுகு 2,Kazhugu 2

கழுகு 2 - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கிருஷ்ணா, பிந்துமாதவி, காளிவெங்கட், எம்எஸ்.பாஸ்கர்
தயாரிப்பு - மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - சத்யசிவா
இசை - யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி - 1 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் முதல் பாகம் திரைப்படங்கள் கொடுத்த வரவேற்பால் இரண்டாவது பாகத்தைக் கொடுக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அந்த ஆசைக்கேற்ப படத்தை அனைவரும் ரசிக்கும்படியாக படமாகக் கொடுக்க முடியாமல் தடுமாறிப் போன இரண்டாம் பாகமாக இந்த 'கழுகு 2' படமும் அமைந்திருக்கிறது.

2012ம் ஆண்டில் வெளிவந்த 'கழுகு' படத்தில் வளரும் நடிகர்களான கிருஷ்ணா, பிந்துமாதவி ஆகியோரை நடிக்க வைத்து சரியானதொரு வெற்றியைப் பெற்றார் இயக்குனர் சத்யசிவா. இந்த இரண்டாம் பாகத்தையும் மலை சார்ந்த படமாக எடுத்திருந்தாலும் முதல் பாகத்தில் இருந்த அழுத்தம் இந்த இரண்டாம் பாகத்தில் காணாமல் போயிருக்கிறது.

கொடைக்கானல் மலையில் உள்ள செந்நாய்கள் இருக்கும் எஸ்டேட் ஒன்றில் மரம் வெட்டுவதற்காக ஒருவர் ஏலம் எடுக்கிறார். அந்த எஸ்டேட்டில் மனிதர்களைக் கொல்லும் செந்நாய்கள் இருப்பதால் மரம் வெட்டும் வேலைக்கு வர மக்கள் தயங்குகிறார்கள். அதற்காக செந்நாய்களை வேட்டையாடும் வேட்டைக்காரர்களை வேலைக்கு வைக்க முடிவு செய்கிறார்கள்.

தேனியில் போலீஸ் காவலிலிருந்து துப்பாக்கியைத் திருடி தப்பித்து ஓடும் திருடர்களான கிருஷ்ணா, காளி வெங்கட் ஆகியோரை எஸ்டேட்டின் சூப்பர்வைசரான எம்எஸ் பாஸ்கர் வேலைக்காரர்கள் என நினைத்து, அவர்களை செந்நாய்களை விரட்டும் வேலைக்கு அழைத்து வருகிறார். வந்த இடத்தில் பாஸ்கரின் மகளான பிந்துமாதவிக்கும், கிருஷ்ணாவுக்கும் காதல் உருவாகிறது. அந்த காதலுக்கு பாஸ்கர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இதனிடையே, அந்த எஸ்டேட்டில் புதையல் இருப்பதை ஹரிஷ் பெரடி கண்டுபிடித்து எடுத்துச் செல்கிறார். அதைத் திருடி வாழ்க்கையில் செட்டிலாக கிருஷ்ணா ஆசைப்படுகிறார். அதன்பின் என்ன என்பதுதான் எதிர்பாராமல் முடியும் படத்தின் கிளைமாக்ஸ்.

சாதாரண லோக்கல் திருடன் கதாபாத்திரத்தில் அப்படியே செட்டாகிறார் கிருஷ்ணா. அவருடைய பேச்சும், திருட்டு முழியும் அவரை அச்சு அசலாக திருடனாகவே காட்டுகிறது. கொடைக்கானல் வந்த பிறகு காதலில் இறங்கி விடுகிறார். பிந்து மாதவியின் காதலை முதலில் ஏற்க மறுத்தாலும் அடுத்த சில காட்சிகளிலேயே பிந்துவின் காதலைப் புரிந்து கொண்டு தீவிரமாக காதலிக்க ஆரம்பிக்கிறார்.

கிருஷ்ணாவைவிட பிந்து மாதவிதான் காதல் நடிப்பில் ரொம்பவே பரபரக்க வைக்கிறார். எதற்கோ வரும் போலீசைப் பார்த்து கல்லும், முள்ளும் தெரியாமல் காதலன் கிருஷ்ணாவைக் காப்பாற்ற ஓடோடி வருகிறார். மரம் வெட்டும் இடத்தை விட்டு அத்தனை கிலோ மீட்டர் தள்ளியா அவர்களுக்கு அவர் டீ போடுவார். குளிரான மலைப் பிரதேசங்களில் டீக்கடைகளில் டீ போட்டு கையில் கொடுத்தாலே சூடு ஆறிவிடும். ஆனால், பிந்து மாதவியோ இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தள்ளி டீ போட்டுக் கொண்டு வருவதற்குள் அது ஐஸ் டீயாக மாறிவிடுமே. இப்படி பல காட்சிகளில் இயக்குனர் சத்ய சிவா லாஜிக் இல்லாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

கிருஷ்ணாவின் நண்பராக காளி வெங்கட். படம் முழுவதும் அவருடனேயே வருகிறார். வழக்கம் போலவே இயல்பான நடிப்பு. பிந்து மாதவியின் அப்பாவாக எம்எஸ் பாஸ்கர். இவருடைய கதாபாத்திரம்தான் படத்தில் டிவிஸ்ட்டான கதாபாத்திரம். அப்பாவியாக, சைலன்டாக வில்லத்தனம் செய்கிறார். ஹரிஷ் பெரடி உள்ளூர் எம்எல்ஏ அவ்வளவு முக்கியத்துவம் இல்லை, ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து மிரட்டிவிட்டுச் செல்கிறார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஒரு பாடல் கூட ரசிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம். பின்னணி இசையும் சுமார்தான். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவு நம்மையும் அந்த மலை கிராமத்திற்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது.

கிளைமாக்சில் மட்டும் நாம் சிறிதும் எதிர்பார்க்காத திருப்பங்களை வைத்து படத்தில் பரபரப்பை கூட்டுகிறார் இயக்குனர். அதே அளவிற்கு படத்தின் ஆரம்பத்திலிருந்து காட்சிகளை படத்தில் வைத்து கொஞ்சமாவது பரபரப்பை கூட்டியிருக்கலாம். கிருஷ்ணாவுக்கும், பிந்துமாதவிக்கும் ஓரிரு காட்சிகளுக்குள்ளேயே காதல் மலர்வதை நம்ப முடியவில்லை. அதற்கு அழுத்தமான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. செந்நாய்களை மையமாக வைத்துதான் கதை நகரும் என்று பார்த்தால் காதல், புதையல் என திரைக்கதை வேறு தடத்தை நோக்கிப் பயணிக்கிறது. கதாபாத்திரங்களும், கதைக்களமும் மட்டும்தான் படத்தில் ரசிக்க வைக்கின்றன. அதை யோசித்த இயக்குனர் கதையையும், திரைக்கதையும் இன்னும் கவனமாக யோசித்திருக்கலாம்.

கழுகு 2 - குறைவான பார்வை...

 

பட குழுவினர்

கழுகு 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓