Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சவாலே சமாளி

சவாலே சமாளி,Savaale Samaali
16 செப், 2015 - 13:06 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சவாலே சமாளி

தினமலர் விமர்சனம்


தெகிடி அசோக் செல்வன் நாயகராக நடிக்க, இந்த காலத்து சில்க் - பிந்துமாதவி நாயகியாக நடித்து கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் முழுநீள காமெடி படம் தான் "சவாலே சமாளி"...


பெரிதாக நேயர்கள் இல்லாத டாப் டி.வி.யின் புரோகிராம் புரொடியூசர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கார்த்திக் எனும் அசோக்செல்வனும், பில்லா எனும் செம்புலி ஜெகனும் இவர்களை நம்பி, ஊரைச்சுற்றி கடன் வாங்கியும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், டாப் டிவியை, டாப் லெவலுக்கு கொண்டுவர நினைக்கும் முதலாளி கருணாஸ் தற்கொலைக்கு முயன்று படுத்த படுக்கையாகிவிட., அந்த டி.வி.யை, நண்பர் ஜெகனோடு சேர்ந்து புதுவித நிகழ்ச்சிகள் நடத்தி அசோக் செல்வன் முன்னுக்கு கொண்டு வந்தாரா? இல்லையா...? எனும் காமெடி கதையுடன் தி்வ்யா எனும் நாயகி பிந்துமாதவியுடனான கார்த்திக் - அசோக் செல்வனின் காதலையும் கலந்துகட்டி சவாலே சமாளியை சலிப்பு ஏற்படாவண்ணம், சீனுக்கு சீன் சிரிப்பாக உருவாக்கி படைத்திருக்கிறார்கள்! கொஞ்சம் படுத்தியும் இருக்கிறார்கள்!!


அசோக்செல்வன், தெகிடியில் திகிலடித்தார். இதில் காமெடியில் கலக்கலான நடிப்பை வாரி வழங்கி ரசிகனை வசியப்படுத்தி விட முயன்றிருக்கிறார்.


பிந்துமாதவி, டூயட் பாடல் காட்சிளிலும், காதல் காட்சிகளிலும் கிறக்கம், இறக்கம் (உடைகளில்...) காண்பித்து, ரசிகனின் உறக்கத்தை தொலைக்க செய்யும் முயற்சியில் கொஞ்சசே கொஞ்சம் வெற்றி காண்கிறார்.


செம்புலி ஜெகன் வழக்கம்போலவே, டபுள் மீனிங் லொட, லொடா!. ஆனாலும் ஜெகனுக்கும் அஅசோக் செல்வனுக்குமான காமெடி சீன்கள் அரங்கத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது.


கருணாஸ்., கடன்கார டி.வி.அதிபராக உருக்கம்! போலி காதல் ஜோடி டி.வி.நிகழ்ச்சி நேர்காணலராக, நடுவராக நடிகையாகவே வரும் ஊர்வசிக்கான பில் -டப்ஸ் ஓவராக தெரிகிறது. நாசர், பரவை முனியம்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் ஓ.கே!. அசோக்செல்வனின் தங்கையாக வரும் ராட்டினம் சுவாதி, சற்றே ஆன்டி லுக்கில் கொழுக் மொழுக் என்று இருந்து கொண்டு சில இடங்களில் நாயகி பிந்துமாதவியையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார். கூடவே, பி, சி, ரசிகர்களையும் கபளீகரம் செய்துவிடுகிறார்....


எஸ்.எஸ்.தமனின் இசையில் ஐஸ்வர்யா லட்சுமி, எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஆடும் நல்லவனா, கெட்டவனா.. .பாடல் காட்சி படத்திற்கு சற்றே பலம்!.


பி.செல்வகுமாரின் ஒளிப்பதிவு ஓவியப்பதிவு!


டூப்ளிகேட் லவ் ஜோடிகளின் வாயிலாக, ஒரு ஒரிஜினல் காதல் ஜோடியை ஒன்று சேர்க்கும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளரின் சாமர்த்தியத்தை செம சிரிப்பாய், கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் விதமாய் சொல்லியிருக்கும் சத்யசிவாவின்


சவாலே சமாளி - சிரி(கடு)ப்பு சமாளிப்பு!!.
---------------------------------------------------------


குமுதம் விமர்சனம்
'தெகிடி' அசோக் செல்வன் 'காமெடி' பண்ணியிருக்கும் படம். ஒரு டப்பா டி.வி. சேனலை, டாப் டி.வி. சேனல் ஆக்குவதற்குத் திட்டம் போடுகிறார்கள் அசோக்கும், நண்டு ஜெகனும் எல்லாம் ஊற்றிக் கொள்ள 'சொ. உண்மை' பாணியில் காதலர்களை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியை ஏகப்பட்ட கோல்மால்களுடன் ஆரம்பிக்கிறார்கள். நிகழ்ச்சி ஹிட் ஆகிறது. ஆனால் ஹீரோவின் காதல் டமால் ஆகிறது. அப்புறம் என்ன ஆச்சு? என்பதுதான் 'சவாலே சமாளி' (புரியற மாதிரி சொல்லிட்டோம்ல!)


டி.வி.க்களில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக என்ன மாதிரியெல்லாம் தகிடுதத்தம் செய்து கல்லா கட்டுகிறார்கள் என்பதை காமெடி போர்வையில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சத்ய சிவா.


தங்கச்சியைப் பார்க்க வரும் எல்லா தோழிகளையும் சின்சியராய் லவ் பண்ணும் ஜொள்ளு நன்றாக வருகிறது அசோக் செல்வனுக்கு.


பிந்து மாதவி பொம்மை மாதவி மார்டன் ட்ரெஸ் போட்டு ஆடும் பாடலில் மட்டும் ஜில்லு மாதவி.


கடி கலந்த கலகலப்புக்கு நண்டு ஜெகன். அவர் போடும் ஒவ்வொரு திட்டமும் சொதப்புவது வேடிக்கை. இடைவேளைக்கு அப்புறம் வந்தாலும் பட்டையைக் கிளப்புகிறார் ஊர்வசி. பயமும், எரிச்சலும், கிண்டலும்... படத்தின் கலரையே மாற்றுகிறார் ராட்சஷி!


நாசரையும் பட்டாபியையும் எடுத்த பேட்டியை, அவர்களைக் கட்டி வைத்து காதலர்களை ஒன்றிணைக்க அதை வீடியோ மிக்ஸிங் செய்வது நல்ல ஐடியா!


ச.ச. - சமாளிக்க முயற்சித்திருக்கிறார்கள்!


குமுதம் ரேட்டிங் - சுமார்


------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்
கொஞ்சூண்டு கதையை அசரீரி சொல்வது இன்றைய திரைப்படங்களில் தவிர்க்க இயலாத விதி என்பதால் ச.சா. படத்திலும் சேர்த்திருக்கிறார்கள். லேசான புதுமையாக இருக்கட்டும் என்பதற்காக இரண்டு பாத்திரங்களின் உரையாடல் மூலம் அசரீரிக் குரல்கள் ஒலிக்கின்றன.


பார்க்கும் இளம் பெண்களுக்கெல்லாம் இலக்கில்லாமல் காதல் கடிதம் கொடுக்கும் கதாநாயகன், இன்னோர் இளம்பெண்ணான கதாநாயகியை கரெக்ட் செய்வதற்குச் செய்யும் முயற்சிகள் இடைவேளைக்கு முந்தைய கதை. அதற்குச் சிறிதும் தொடர்பில்லாமல், மொக்கைத் தொலைக்காட்சி சேனல் ஒன்றை முதல் நிலைக்குக் கொண்டு வரப் பாடுபடுவது இடைவேளைக்குப் பிறகு வரும் இன்னொரு தனிக்கதை.


இரண்டிலுமே கதாநாயகன் அசோக் செல்வனும் அவரது நண்பரான ஜெகனும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.

சில திரைப்படங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கிண்டலடிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் ஒரு தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிகழ்ச்சியை, வணக்கு வணக்கு என்று வணக்கி எடுத்திருக்கிறார்கள். அட! நிகழ்ச்சியை நடத்துபவர் உட்கார்ந்திருக்கும் நாற்காலி அமைப்பு கூட 'அந்த' நிகழ்ச்சியில் இருப்பது போலவே அமைத்திருக்கிறார்கள் என்று 'சொல்வதெல்லாம் உண்மை'தான்! ஆனாலும் அப்பா, அம்மா, அத்தை, மாமா என்ற பாத்திரவாரியாகக் கழுத்தில் குறிப்புகளைத் தொங்கவிட்டிருப்பது கொஞ்சம் ஓவர்தான்! தொகுப்பாளினியையும், விளம்பரதாரர்களையும்கூடக் கலாய்ப்பு விட்டுவைக்கவில்லை.


நாசர், பாஸ்கர், கருணாஸ், ஊர்வசி, போன்றோரும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பாதிப் படத்தில் சில காட்சிகளிலேயே வரும் கதாநாயகி பிந்துமாதவி நடமாடும் அழகான மெழுகுச் சிலையாக வந்து போகிறார். அவ்வளவுதான்! பாட்டி பரவை முனியம்மாவே பேரனுடன் சேர்ந்து குடிப்பது போன்ற 'புரட்சி'க் காட்சிகளும் உண்டு.


ஊர்வசி, தன்னையும் பாக்யராஜையும் வைத்து, முந்தானை முடிச்சு பார்ட்-2 படம் எடுக்க ஆலோசனை கூறும்போது நண்பர்கள் இருவரும் ஜெர்க் ஆவது இயல்பாக இருக்கிறது. அவ்வளவு ஏன், படம் பார்க்கும் நமக்கே ஊர்வசியின் அந்த யோசனை, 'கெதக்' எனறுதானே இருக்கிறது!


படத்தின் டெம்போவைக் குறைப்பதைப் போலக் கருணாஸ் அளிக்கும் நீண்ட பிரசங்கம் அமைந்திருக்கிறது. அதே மாதிரி ஊர்வசியின் டாக் ஷோ சில சமயம் ஜவ்வாக இழுக்கிறது.


ஆண்களை மட்டம் தட்டி ஐஸ்வர்யா நடனமாடிக் கொண்டே பாடுவது கேட்கும்படி இருக்கிறது. நடன அசைவுகளும் ஆபாசம் இன்றி இருக்கின்றன.


டூயட் பாடல் படமாக்கியிருக்கும் லொகேஷன்கள் அருமை. ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுகள். தமனுக்கும் ஒரு சலாம்.


முதல் பாதியில் கதாநாயகியின் அன்பைப் பெற நாயகன் நடத்தும் சொதப்பல்கள் அபத்தங்களின் உச்சம்! அதனால் என்ன? படம் பார்க்கும் ரசிக மகா ஜனங்கள் அவற்றுக்குத்தானே சிரிக்கிறார்கள். நாமும் சிரித்து வைத்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.


சவாலே சமாளி - நல்ல சமாளிப்புவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in