சீறு,Seeru

சீறு - பட காட்சிகள் ↓

சீறு - சினி விழா ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜீவா, ரியா சுமன், நவ்தீப், வருண்
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - ரத்னசிவா
இசை - இமான்
வெளியான தேதி - 7 பிப்ரவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் தவிர மற்ற நடிகர்கள் நடித்த கமர்ஷியல் படங்கள் அதிகமாக வருவதேயில்லை. வித்தியாசமாக எடுக்க நினைக்கிறோம் என எதையெதையோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வித்தியாசம் எப்போதாவதுதான் ரசிக்க வைக்கும். ஆனால், வழக்கமான கமர்ஷியல் பார்முலா படங்கள் சினிமாவை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களை தியேட்டருக்குள் வரவழைக்கும். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரத்னசிவா.

மாயவரத்தில் நடக்கும் கதை. அங்கு கேபிள் டிவி ஆபரேட்டராக இருப்பவர் ஜீவா. அவரது கொக்கரக்கோ டிவியில் மாயவரம் சம்பந்தப்பட்ட பல செய்திகளையும் போட்டு பரபரப்பூட்டுபவர். ஊர் எம்எல்ஏ மனோகர் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். அதனால், ஆத்திரமடையும் மனோகர், ஜீவாவைக் கொல்ல சென்னையிலிருக்கும் ரவுடியான வருண்-ஐ வரவழைக்கிறார். ஜீவா வீட்டில் இல்லாத போது அவரது வீட்டிற்கு வருகிறார் வருண். வந்த இடத்தில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும் ஜீவா தங்கையை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, ஜீவாவைத் தேடிக் கொல்லாமல் சென்னை திரும்பி விடுகிறார். தன் தங்கை வேண்டுகோளுக்கிணங்க, வருணை தன் வீட்டிற்கு அழைத்து வருவதாக உறுதி அளிக்கிறார். வருணைத் தேடி சென்னை வருகிறார். அங்கு வருணை யாரோ சிலர் வெட்டி சாய்த்திருக்கிறார்கள். அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார் ஜீவா. வருணைக் கொல்ல முயன்றவர்கள் யார் என்பதை ஜீவா கண்டுபிடிக்க முயல்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் இடைவேளை வரை பெரிய அளவில் எந்த ஒரு கதையோ, அழுத்தமான காட்சிகளோ படத்தில் இல்லாதது பெரும் குறை. இடைவேளை வரை ஏதோ நகர்கிறது படம். இடைவேளைக்குப் பின்னர்தான் கதையே ஆரம்பம். அதன்பின் ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக், பல ஆக்ஷன் பிளாக் என பக்கா கமர்ஷியலுக்கு படத்தை நகர்த்துகிறார் இயக்குனர்.

தேவையான ஒரு வெற்றிக்காக கடந்த சில வருடங்களாகவே தடுமாறிக் கொண்டிருக்கிறார் ஜீவா. அதை இந்த சீறு கொஞ்சம் தேடிக் கொடுக்கும் என நம்பலாம். ஒரு கமர்ஷியல் படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பான காட்சிகளைப் பார்க்க முடியாது. ஏற்கெனவே பல படங்களில் பார்த்த தங்கை சென்டிமென்ட்டில் மட்டும் கொஞ்சம் நடித்திருக்கிறார் ஜீவா. மற்றபடி ஆக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார். அவருக்காக ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துக் கொடுத்த மாஸ்டர் பாராட்டுக்குரியவர்.

படத்தின் நாயகியாக ரியா சுமன். ஆமாம், படத்தில் அவர் எதற்கு ?. வா வாசுகி... என்ற இனிமையான பாடலுக்கு மட்டும் வந்துவிட்டுப் போகிறார். இவருக்கும் ஜீவாவிற்கும் மூன்று காட்சிகளாவது படத்தில் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

நாயகியை விட பிளாஷ்பேக்கில் பள்ளி மாணவியாக வரும் சாந்தினிக்கு அதிக காட்சிகள். இடைவேளைக்குப் பின் அரை மணி நேரம் இவர் தான் படத்தை ஆக்கிரமித்து விடுகிறார். பிளஸ் 2வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெறும் மாணவி. டிவியில் பேட்டி கொடுக்கும் போது பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள் பற்றிப் பேசி கைதட்டல் வாங்குகிறார். அவர் அப்படிப் பேசும் போது அவருக்கு அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடிகிறது.

அஜித் நடித்த ஏகன் படத்தில் பச்சை புள்ள யாகப் பார்த்த நவ்தீப் தான் இந்தப் படத்தின் வில்லன். பிரபல கிரிமினல் வக்கீலாக நடித்திருக்கிறார். தொழில்தான் வக்கீல், ஆனால், தாதா போல படத்தில் நடந்து கொள்கிறார். அவரது நடிப்பு ஓகே, இருப்பினும் கதாபாத்திரம்தான் நம்ப முடியாதபடி இருக்கிறது.

பணம் கொடுத்தால் கொலை செய்யும் அடியாளாக வருண். அவருக்குத் தாடியெல்லாம் வைத்து முரட்டுத்தனமாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள்.

இமான் இசையில் வா வாசுகி...., செவ்வந்தியே... ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

அதிரடியான ஆக்ஷன் படமாகவும் இல்லாமல், லைட்டான ஆக்ஷன் படமாகவும் இல்லாமல் மிதமான ஆக்ஷன் படமாக இருக்கிறது சீறு. பொழுதுபோக்கிற்கு தியேட்டருக்குச் செல்பவர்களுக்கு ஒரு ஓகே படம்.

நட்பு என்பதுதான் படத்தின் மையக் கரு. ஆண்கள் மட்டும்தான் தங்களது நண்பர்களுக்காக களம் இறங்குவார்களா, பெண்களும் இறங்குவார்கள் என்பதை புதிதாகச் சொல்லி இருக்கிறார்கள். அநியாயமாக தங்களது தோழியை பறி கொடுத்தவர்கள், வில்லனை எதிர்த்து களமிறங்குவது புதிது.

சீறு - சிறப்பு

 

சீறு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சீறு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓