பேச்சுலர்,Bachelor

பேச்சுலர் - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் - சதீஷ் செல்வகுமார்
இசை - சித்துகுமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், திவ்யபாரதி
வெளியான தேதி - 3 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 55 நிமிடம் (A சான்று பெற்ற படம்)
ரேட்டிங் - 2.5/5

கதாநாயகியை ஏமாற்றிய கதாநாயகன் என்ற டைப்பிலான பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. அந்த டைப்பில் வந்திருக்கும் மற்றுமொரு படம்தான் இது.

ஐ.டி. துறையில் இருக்கும் இன்றைய பேச்சுலர்களில் இந்தப் படத்தின் கதாநாயகன் எப்படி இருக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. காமமும், வெளிப்படையான வசனங்களும் படத்தில் இருந்தால் இன்றைய ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்கைப் போட்டிருக்கிறார் படத்தின் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை எப்படி சொல்கிறார்கள் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அதை சரியாகச் செய்திருக்கம் இயக்குனர், இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையை எப்படி நகர்த்திச் செல்வது என்பதில் தடுமாறிப் போயிருக்கிறார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞனான ஜிவி பிரகாஷ்குமார் பெங்களூரில் ஐ.டி. வேலை கிடைத்துச் செல்கிறார். அங்கு நண்பர்களுடன் தங்கியிருக்கப் பிடிக்காமல் வேறொரு நண்பன் 'லிவிங் டு கெதர்' ஆக இருப்பதைப் பார்த்து அந்த வீட்டிலேயே சண்டை போட்டுத் தங்குகிறார். அந்த வீட்டில் வேறொரு அறையில் படத்தின் கதாநாயகி திவ்யபாரதி தங்கியிருப்பதுதான் அதற்குக் காரணம்.

நண்பன் வெளிநாடு சென்றுவிட, ஜிவியும், திவ்யாவும் அந்த வீட்டில் தனியாக வசிக்க வேண்டிய சூழல். இருவரும் நெருக்கமாக ஒரு சந்தர்ப்பம் அமைய, அந்த நெருக்கம் அப்படியே உடலால் இணைந்துவிடுகிறது. திவ்யபாரதி கர்ப்பமடைய, அந்தக் கர்ப்பத்தை ஜிவி கலைக்கச் சொல்ல பிரச்சினை ஆரம்பம். திவ்யா அக்காவின் வக்கீல் கணவர் 'குடும்ப வன்முறை' என சித்தரித்து வழக்கு தொடர அதன்பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதாநாயகி திவ்யாவைப் பார்த்ததும் ஜிவிக்கு காதல் பார்வை வருவதை விட காமப் பார்வை தான் அதிகம் வருகிறது. படம் முழுவதும் ஆங்காங்கே முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள், நெருடலான வசனங்கள் என நெளிய வைக்கிறது. இடைவேளை வரை உள்ள காட்சிகளில் காமத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று சொல்லுமளவிற்கான காட்சிகள்தான். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்திற்குப் பிறகு ஜிவி பிரகாஷ்குமார் இப்படியான படத்தில் நடிக்க வேண்டியதன் காரணம் என்னவோ ?.

அறிமுகப்படத்திலேயே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தனி துணிச்சல் வேண்டும். மேக்கப்பில்லாத திவ்யபாரதி அவரது கதாபாத்திரத்தில் அழுத்தமாய் நடித்திருக்கிறார். இடைவேளை வரை ஜிவியை காமப் பார்வையில் கொல்பவர் அதன் பிறகு அழுதழுதே கொல்கிறார். 2021லும் தன்னை ஏமாற்றத் துணியும் காதலனை (?) எதிர்க்கும் துணிச்சல் இல்லாத பெண்ணாக இருக்கிறாரே என்பது ஆச்சரியம். லிவிங் டு கெதர் ஆக வாழ்பவர், திருமணத்திற்கு முன்பே உறவு கொள்ள சம்மதிப்பவர் எதிர்க்க மட்டும் துணிச்சல் இல்லாதவரா இருப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

படத்தில் நண்பர்கள் என பத்துப் பதினைந்து பேர் ஜிவி பிரகாஷுடன் எப்போதும் இருக்கிறார்கள். சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது கூட பெங்களூருவில் வேலை பார்க்கும் நண்பர்கள் சென்னையில் உடன் வந்து தங்கியிருப்பதெல்லாம் என்ன லாஜிக்கோ, அவ்வளவு நெருங்கிய நண்பர்களா ?. மற்ற நடிகர்களில் பகவதி பெருமாள், முனிஷ்காந்த் ஆகியோருக்கு மட்டும் நடிக்கக் கொஞ்சம் வாய்ப்புகள். நண்பர்களில் யாராவது ஒருவருக்கு மட்டும் அதிக வசனம் கொடுக்கலாம் என அருண் குமாருக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. சில உணர்வுபூர்வமான காட்சிகளில் பின்னணி இசையில் சித்து குமார் கவனிக்க வைக்கிறார். 3 மணி நேரத்திற்கு 4 நிமிடம் குறைவாக ஓடும் படம். தேவையற்ற காட்சிகள், இழுக்கப்பட்ட காட்சிகள் என அரை மணி நேரத்தை எடிட்டர் ஷான் லோகேஷ் 'கட்' செய்திருக்கலாம்.

இந்தக்கால இளைஞர்களின் பெற்றோர்கள், குறிப்பாக பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் பெண்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைத்தால், இந்தப் படத்தைப் பார்த்தால் அவர்களை வேலைக்கு அனுப்ப ரொம்பவே யோசிப்பார்கள். படம் முழுவதும் ஒரு நெகட்டிவ் வைப்ரேஷனிலேயே செல்கிறது, பெயருக்குக் கூட ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இல்லை.

பேச்சுலர் - சீட்டர்

 

பேச்சுலர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பேச்சுலர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓