காட்டேரி
விமர்சனம்
தயாரிப்பு - அபி அன்ட் அபி பிக்சர்ஸ், ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - டீகே
இசை - பிரசாத்
நடிப்பு - வைபவ், சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி
வெளியான தேதி - 5 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2/5
பேய்ப் படங்களை விதவிதமாகக் காட்டி போரடித்துவிட்டது, அதனால் வித்தியாசமாக காட்டேரியைக் காட்டுவோம் என இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். அதை கொஞ்சம் கதையுடன் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மனதில் பட்ட எதையெதையோ கதை என எழுதி அதைப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டீகே.
ஒரு கிராமத்தில் இருக்கும் தங்கத்தைக் கண்டுபிடித்து எடுத்து வருவதற்காக வைபவ், அவரது மனைவி, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி மற்றும் அந்த தங்கப் புதையலைப் பற்றிச் சொன்ன ஆத்மிகா ஆகியோர் செல்கிறார்கள். அந்த ஊருக்குச் சென்றால் பலரும் பேயாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். சில பல பேய்களை சந்தித்து தப்பிய பின் பேயாக உலவும் வரலட்சுமியிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பேய்க் கதைகள் என்றாலே காதில் பூவைச் சுற்றும் கற்பனைக் கதைதான். இந்தப் படத்தில் கூடை கூடையாக பூவைச் சுற்றுகிறார்கள். ஆனாலும், சில கற்பனைகள் அம்புலிமாமா கதை படிப்பதைப் போல சுவாரசியமாக இருக்கின்றன. குறிப்பாக வரலட்சுமி வீட்டிற்குள் இருக்கும் அந்த தங்கக் கிணறு. ஓரிரு சுவாரசியத்திற்காக மொத்த படத்தையும் தாங்கிக் கொள்வதற்கு தனிப் பெரும் தைரியம் வேண்டும்.
வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி மற்றும் ஆத்மிகா படம் முழுவதும் வருகிறார்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒன்றாகவே சுற்றுகிறார்கள். இடையில் காமெடி என சில காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்றன. 'நான் அழகா இருக்கேனா' எனக் கேட்டு வரும் வரலட்சுமி கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். படத்தில் பிளாஷ் பேக் காட்சிகள் மட்டும் பரவாயில்லை ரகம்.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை இலங்கையில் எடுத்திருக்கிறார்கள். இரவு நேரத்தில் பேய்களைக் காட்டுவதற்கு, எதற்காக இலங்கை போய் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.
புதிதாக ஏதாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், கடைசியில் காட்டேரிகள் என சிலவற்றை விட்டு கொஞ்சமே கொஞ்சம் பயமுறுத்தப் பார்க்கிறார்கள்.
நான்கு வருடங்கள் போராடி படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தியேட்டர்களில் வெளியிட்டதற்கு ஓடிடியிலாவது வெளியிட்டிருக்கலாம்.
காட்டேரி - காப்பாத்துங்க...