விமர்சனம்
கல்கி சினி விமர்சனம்
நகைச்சுவைக்கு என்று தனியே காட்சிகள் இருந்த ட்ரெண்டை மாற்றி, முழுக்க முழுக்க நகைச்சுவையாலேயே நிரம்பி வழியும் படம்தான் கப்பல். இதில் தரமானவையும் உண்டு. இரட்டை அர்த்தம் மற்றும் ஆபாசம் போன்றவையும் ஆங்காங்கே உண்டு. படத்தில் பார்த்த முகங்கள் அதிகம் இல்லாமல் இருப்பதால் ஒருவித ஃப்ரெஷ்னெஸ் நிலவுகிறது. பெண் சகவாசமே கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்ளும் நண்பர்களில், ஹீரோவுக்கு உடன்பாடு இல்லை. அவருக்கு நண்பர்களும் வேண்டும்; காதலும் வேண்டும். இதுதான் கதையின் மையப்புள்ளி.
கதாநாயகியைப் பெரும் குடிகாரியாகவும், ஆண் நண்பருடன் (கதாநாயகக் காதலன் அல்ல என்பதைக் கவனிக்கவேண்டும் மை லார்ட்!) அர்த்த ராத்திரியில் அலைபவராகவும் ஆரம்பத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதன்மூலம், தான் மாத்தி யோசித்திருப்பதை வெளிப்படுத்துகிறார். ஆனால், அடுத்த காட்சியிலிருந்து தமிழ்படக் கதாநாயகிக்குரிய குணாதிசயங்களோடு மாற்றிவிடுகிறார். அதேபோல பயத்தில் சிறுநீர் கழிப்பது, மது அருந்துவதுபோன்ற காட்சிகளை சினிமாவின் மரபை மீறாமல் காட்சிப்படுத்தி, தான் மாத்தாமல் யோசிப்பவர் என்பதையும் இயக்குநர் தெளிவாக்குகிறார்.
காட்சிகளோடு இரண்டறக் கலந்த நகைச்சுவை இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். தான் அலுவலகத்தில் இருப்பதை செல்போனில் கதாநாயகன் புருடாவிடுவதை ஜெர்க்குடன் காய்கறி வாங்கும் பெண் பார்க்கும்போது, எம்.டி., பார்க்கிறாங்க. அப்புறம் பேசுறேன் என்ற சீன் இதற்கு நல்ல உதாரணம். ஹீரோவுக்குக் காதல் ஆலோசகராகத் தனிப்பட்ட குரலுடன் வரும் வி.டி.வி. கணேஷ் எதைச் சொன்னாலும் - எதைச் செய்தாலும் தியேட்டரே சிரிப்பில் குலுங்குகிறது.
பாட்டிலும் காமெடி வழிகிறது. ஊருவிட்டு ஊருவந்து ரீமேக் சுமார் ரகம். கெட்ட வார்த்தை போட்டி, விரசம்தான் என்றாலும் தியேட்டரில் சிரிப்பொலி காதைப் பிளக்கிறது.
கப்பல் - கரை சேரும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!