Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்,Kavalai Vendam
20 டிச, 2016 - 10:16 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கவலை வேண்டாம்

ஆர்.எஸ்.இன்போடெயின்ட்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், "யாமிருக்க பயமேன்" டி.கே இயக்கத்தில், ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சுனைனா... உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏறக்குறைய இரண்டு மணிநேரம் இருபது நிமிடப்படமாக கண்ணைக் கட்டும் விதத்தில் வெளிவந்திருக்கிறது "கவலை வேண்டாம்" திரைப்படம்.!


கதைப்படி, யார்கூடவோ ஒடிப்போய் எஸ் ஆன பொண்டாட்டி குறித்து எந்த லஜ்ஜையும், கவலையும் இல்லாது எவ கிடைத்தாலும் அவ கூட குடும்பம் நடத்தும் வெட்கமில்லா தந்தை மயில்சாமிக்கு ஆண் மகவு அரவிந்த் எனும் ஜீவாவும், ஆம்பளையானை மட்டுமல்ல... ஆடவர்களையே பொருட்டாக மதிக்காத பணத்திமிர் பிடித்த மம்மி மந்த்ரா (மாஜி ஹீரோயினே தான்....)வுக்கு பிறந்த பெண் திவ்யா எனும் காஜல் அகர்வாலும், சின்ன வயது முதலே ஒரே ஏரியா நண்பர்கள்... ஒரு கட்டத்தில் "தொபுக்கடீர் " என காதலில் விழும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு பிரண்ட்ஷிப் மறந்து பேமிலியாய்.... இணைகிறார்கள். அவ்வாறு, கல்யாணம் கட்டிக் கொண்ட இரண்டாவது நாளே கருத்து வேறுபாட்டால் திடீரென்று பிரிகின்றனர். சில ஆண்டுகளில் இரண்டாவது திருமண ஏற்பாட்டில் ஜீவாவுக்கு ஜீவனாம்சம் தந்து விவாகரத்து கேட்டு ஜீவாவைத் தேடி வரும் காஜல் அகர்வால், ஜீவனாம்சமெல்லாம் வேண்டாம்.... விவாகரத்து வேண்டுமென்றால் ஒரு வாரம், நாமிருவரும் ஒன்றாக வாழ வேண்டும்... எனும் ஜீவாவின் அதிரடி கட்டளைக்கு கீழ்படிந்து, ஒரு வாரம் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ சம்மதிக்கிறார்.


அங்கு அதுவரை காணாத ஜீவாவின் நற்குணங்களை காஜல் கண்டுணர்ந்ததல் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தனரா ? அல்லது ., ஜீவாவின் மாறாத புத்தியைப் பார்த்து மிரண்டதால் காஜல்., தெறித்து ஓடி, தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கூடவே வந்து காத்திருக்கும் அர்ஜூன் - பாபி சிம்ஹாவிற்கு டபுள் ஒ.கே சொன்னாரா ..? ஜீவாவும் காஜலைத் துறந்து தன் பின்னாலேயே சுற்றி வந்து ஒன்சைடாக லவ் பண்ணும் தீபா எனும் சுனைனாவிற்கு சம்மதம் சொன்னாரா...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காமெடி என்ற பெயரில் கர்மம், கர்மம் .... என ரசிகன் கதறும் அளவிற்கு காமம் நெடியதாக கொப்பளிக்க மிகவும் வல்கராவும், அவர்ஷனாகவும் விடை தந்திருக்கும் கரு, கதை, களம் மற்றும் காட்சியமைப்புகளைக் கொண்ட கண்றாவி படம் தான் "கவலை வேண்டாம்".


ஒடிப்போன அம்மாவுக்கும், உருப்படியில்லாத அப்பாக்கும் பிறந்த பிள்ளையாக, நாயகர் அரவிந்த்தாக ஜீவா அசால்ட்டாக தன் பாத்திரத்தை உணர்ந்து உள்வாங்கி பக்காவாக நடித்திருக்கிறார். நக்கல், நையாண்டி காட்சிகள் அவருக்கு கைவந்த கலை என்பதால் வெகு இயல்பாக நடித்திருப்பது படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.


மயில்சாமியும், ஜீவாவும்., "அப்பனுக்கே அரணா கயிறு மாட்ட கத்து தராத..." என்பதும் "நீங்களும் பாப்பாக்கு பால் குடிக்க கத்து தராதீங்க... " என்பது வரையிலும் ஓ.கே.அதற்க்கப்புறம் அப்பா, பிள்ளை இடையே பச்சை பச்சையாக இடம்பெறும் வசனங்களும் செய்கைகளும் படு அபச்சாரமாக படமாக்கப்பட்டுள்ள விதங்கள் கண்டிக்கத்தக்கது!


இன்னொரு நாயகராக., இண்டெர்வெல்லுக்கு முந்தய சீனில் என்ட்ரி கொடுத்து, பின்பாதி படம் முழுக்க ஜீவா அண்ட் கோவினருடனும், காஜலுடனும் வரும் பாபி சிம்ஹா., "ஹாய் நான் திவ்யா ஹஸ்பெண்ட்" எனும் ஜீவாவிடம்... "ஹை நான், திவ்யாவை கட்டிக்கப் போறவன்..." என தன் வசீகரகுரலால் வாய்ஸ் கொடுத்து எக்குத்தப்பாய் நடித்திருக்கிறார். ஆமாம், இந்த கேரக்டருக்கு பாபி? எதற்கு ..? என கேட்கும் வகையில் இருக்கிறது... அவர் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கும் விதமும் அவர் பண்ணும் ரெளத்திரமும்!


கதாநாயகியரில் திவ்யாவாக வரும் முதல் நாயகி காஜல் அகர்வால், தனது துறு துறு நடிப்பால் படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்திருக்கிறார். ஆனாலும் ஹீரோயினான அவர், தன் புருஷன் ஜீவாவிடம், "என்னடா முட்டி கழண்டவன் மாதிரி பேசுற.... எவன் ஒருத்தன் மேட்டு மேல சைக்கிள டபுள்ஸ் வைத்துக் கொண்டு வேகமா ஓட்டுறானோ... அவன் அந்த விஷயத்துல செம ஸ்ட்ராங்கா இருப்பானாம்..." என்பதெல்லாம் டூ-மச், த்ரி-மச்!


மற்றொரு நாயகியாக, தீபாவாக சுனைனா, திவ்யா _ காஜலுக்கு போட்டியாக, அழகில் மின்னவில்லை என்றாலும், நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். இரண்டு நாயகியரும் அவர்களது அழகும் நடிப்பும் இருந்தும் என்ன பயன்? எல்லாம் டாய்லெட், வாமிட் , அதிக பிரசங்கித்தன டயலாக்குகள் மற்றும் காட்சிகளால் விழழுக்கு இறைத்த நீராகவே இப்பட லாஜிக் இல்லா கதைக்கும் காட்சியமைப்புகளுக்கும் பொருந்தாது ரசிகனைத் தியேட்டரில் இருந்து தெறிக்க விடுகிறது.. என்பது கொடுமை!


நட்டி - நடராஜாக வரும் ஆர்.ஜே பாலாஜியின் டபுள், ட்ரிபிள் மீனிங் டயலாக் டெலிவரிகளும் சில்மிஷ செய்கைகளும் ரொம்ப ஓவர் பாலாஜி. அதிலும் ., பட்சாதாபத்தில் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி தர வரும் ஷில்பா - ஸ்ருதி ராமகிருஷ்ணனிடம் அவர், நிர்வாணமாய் பண்ண முயற்சிக்கும் கலாட்டாக்களையும் போலீஸ் ஸ்டேஷனை கக்கா போய் நாறடிக்கும் காட்சிகளையும் க்ளைமாக்ஸில் சப்பிட்டுத்தான்(விரல்) தூங்குவேன் எனும் நாரச டயலாக்குகளையும் சென்சாரில் எப்படித் தான் அனுமதித்தார்களோ.? தெரியலை சாமி! அதே மாதிரி, இவரை விட சீனியர் நடிகர்களான சிம்பு, தனுஷ் உள்ளிட்டவர்களை ஆர் ஜே.பாலாஜி, தான் நடிக்கும் படங்களில் அடிக்கடி வம்புக்கு இழுப்பது இவருக்கு அவ்வளவு நல்லதல்ல..... என்பதை யாராவது எடுத்து சொல்வது நல்லது.


பாலாஜியுடன் பாலசரவணன், மயில்சாமி, ஆகியோர் செய்யும் காமெடிகளும் காமநெடி ரகம். காஜலின் அம்மாவாக மப்பும் மந்தாரமுமாக வந்து நாகரீகம் தெரியாது பேசி அவரை விட நாகரீகம் தெரியாத மருமகன் அரவிந்த் ஜீவாவிடம் மொக்கை வாங்கும் மாஜி நாயகி மந்த்ரா, தேவிப்பிரியா, ஸ்ரீரஞ்சனி, பாபி சிம்ஹாவை மயில்சாமியின் சதியால் மாட்டிவிடும் மாயா ஆன்ட்டியாக வரும் மறைந்த ஜோதிலட்சுமி.... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட முயற்சித்து இப்படத்தின் வழவழ கொழ. கொழ கதையால்., தோற்றிருக்கின்றனர் பாவம் !


டி.எஸ் சுரேஷின் படத்தொகுப்பு பரவாயில்லாத தொகுப்பு! அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்... என்பது ஆறுதல்.


லியோன் ஜேம்ஸின் இசையில், "ஜன்னல் காத்து போலவே...", " உன் காதல் இருந்தா போதும்... ", "நான் இருந்தால் உன்னோடு என் தேடல் தீருமடி ...நீ தொலைந்தாயோ..." உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் லொகேஷன்களும் பரவச பிரமாதம்.


டி.கேயின் எழுத்து இயக்கத்தில் "நான் அடிச்ச ஆணியில நீங்க என்னடா படம் மாட்டிக்கிட்டிருக்கீங்க..?" , "எல்லா வடைக்கும் ஒரு காக்கா இருக்கும் போல....", "ஏம்மா, டோர சரியா சாத்தலையா.. பாவம் அவரு வந்து சாத்திட்டுப் போறாரு... ", "குழாயில தண்ணி வரும் போதே பக்கெட்டை வச்சிடுன்னு சொல்றாங்கப்பா...." என்பது உள்ளிட்ட காமெடி, காம நெடி தூக்கலான வசனங்களும், வட இந்திய மலை வாழ் பழங்குடியின பெண்ணை டாவடித்து., திருமணம் முடித்த பாலசரவணனுக்கு ஆண்மை இழக்கும் படியான, டைவர்ஸ் வழங்கப்படும் விதத்தையும், அதில் காமெடி என்ற பெயரில் பாலாஜியும் கலந்து கொண்டு செய்யும் அட்டகாசங்களையும், பத்து வயது பாலகன் , நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிப்பதையும் நீச்சல் டீச்சரிடம் சில்மிஷம் செய்ய முயல்வதையும்., மனைவியை அபிநந்தனும் நானும் எனும் செக்ஸ் படத்துக்கு ஹீரோகூட்டிப் போவதையும்.... ஹீரோயினான மனைவியும், "என்னடா முட்டி கழண்டவன் மாதிரி பேசுற.... எவன் ஒருத்தன் மேட்டு மேல சைக்கிள டபுள்ஸ் வைத்துக் கொண்டு வேகமா ஓட்டுறானோ... அவன் அந்த விஷயத்துல செம ஸ்ட்ராங்கா இருப்பானாம்..." என்பதையும் தியேட்டருக்கு வரும் இளைஞர் பட்டாளம் ரசிக்கும். மற்ற வயதினர் ? எப்படி ரசிப்பார்கள் ..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! அது வரை திரையரங்குகளில் இப்படம்

இருக்க வேண்டும்!


மேலும், ஒரு வாரம் கண்டீஷன் அப்ளேயுடன் சேர்ந்து வாழ வந்திருக்கும் காஜல் அகர்வால் மேல், குடித்துவிட்டு ஹீரோ ஜீவா, வாமிட் எடுப்பதும், அடுத்த சீனிலேயே ... காஜல், தான் சாப்பிட போட்டு வைத்த ஆபாயிலை எடுத்துபோட்டு சாப்பிட்டபடி அதை தான் எடுத்த வாமிட்டோடு, ஜீவா ஒப்பிட்டு பேசுவதும்.... "உவ்வே" ரக காமெடிகள் அல்ல ... கர்மங்கள்! அதே போன்று, சுழலில் மாட்டிய போட்டில் சிக்கியதால் ஜீவா, காஜல் உள்ளிட்ட அனைவரும் உண்மை பேசுவதாக நினைத்து, காப்பியில் எச்சில் துப்புவேன் என்பதும், ஆர்.ஜே.பாலாஜி, நான், "சப்பியபடி தூங்குவேன்.." என்று விட்டு, விரல் சப்பியபடி என்பதும்..., எல்லோரும் அடிக்கடி ஊர் மேஞ்சா.... என்பதும், எலி குஞ்சை பிடிக்கக் கூடாத இடத்தில் பிடித்துக் கொண்டு, எவனோ ஒருத்தன்... நிற்பதும், அது சம்பந்தமான டயலாக்குகளும் படத்திற்கு பெரிய மைனஸ்.


ஆக மொத்தத்தில் டி.கே.வின் எழுத்து, இயக்கத்தில் "கவலை வேண்டாம்" எனும் பாசிடீவ் டைட்டில் மட்டுமே ப்ளஸ். மற்றபடி எண்ணற்ற குறைகள், நிறைய லாஜிக் மீறல்கள், வரம்பு மீறிய டபுள் மீனிங் வசனங்கள் காட்சிகள்... நிரம்பிய, "கவலை வேண்டாம் படத்தால் தமிழ் திரையுலகம், நிச்சயம், நிறைய கவலை கொள்ள வேண்டியிருக்கும்!" அதையும் தாண்டி, அதிசயபிறவிகள் ஒரு சிலர்... "கவலை மறந்து சிரிக்கலாம், ரசிக்கலாம், பார்க்கலாம்..!"

-------------------------------------------------

கல்கி திரை விமர்சனம்


எதிர்பார்ப்பைத் தூண்டிய அம்சங்கள்:

சற்றே கீழ்நோக்கி வளைந்த கூர் மூக்கு இருந்தாலும் அழகான ஹீரோ ஜீவா.

கச்சிதமான உடற்கட்டு, கவர்ச்சியான உச்சரிப்பு, மிகையில்லாத இயல்பான நடிப்பைக் கொண்டிருக்கும் பாபி சின்ஹா.

'காஜூ பர்ஃபி' காஜல் அகர்வால்.

யாமிருக்க பயமேன் வெற்றிப்படம் தந்த இயக்குநர் டீகே.

தமிழ்த் திரைப்படம் புது அல்லைக்கை ஆர்ஜே பாலாஜி.

காமெடி டைம் மயில்சாமி, மனோபாலா.

ஆனால் இவ்வளவு எதிர்பார்ப்பபையும் தவிடு பொடியாக்கியிருக்கிறது. 'கவலை வேண்டாம்' படம், உண்மையிலேயே கவலைப்படவும் வைக்கிறது. மோசமான படத்துக்கு விமர்சனம் எதற்கு? என்ற கேள்வி எழுவது நியாயமானதே! காரணம் சொல்கிறேன்.

இதுபோன்ற திரைப்படங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வாய்ப்பாகத்தான் இந்த விமர்சனம். சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் இந்தப் படத்தில் வந்திருப்பன போன்று மலிவான ஆபாச வசனங்களும், காட்சி அமைப்புகளும் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு பீப் பாடலுக்குக் கொந்தளித்த சமூக ஆர்வலர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? நூறு பீப் பாடலுக்குச் சமமான பல கொச்சை வார்த்தைகள் படம் நெடுகிலும்.

அத்துடன் ஆபாச வார்த்தைகளில் ஓரெழுத்தை மாற்றிப் பாத்திரங்கள் உச்சரித்து கிச்சு கிச்சு மூட்ட முயன்றிருக்கிறார்கள். கத்துக்குட்டி ஆர்ஜே.பாலாஜி இதைச் செல்வதைக்கூட மன்னித்துவிடலாம்.

ஆபாசத்துக்கு இணையாக அருவருப்பையும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் நீச்சல் குளத்தை அசிங்கப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது அருவருப்புக் கலாச்சாரம், பாத்திரங்கள் மற்றவர் மீது வாந்தி எடுப்பது, இயற்கை உபாதையை கழிப்பது, ஆடையின்றி இருப்பது எனப் பட்டியல் நீள்கிறது.

கதாநாயகி தாம் பள்ளிப் பருவத்தில் மஞ்சள் புத்தகம் படிப்பதாகச் சொல்லிக் கொள்வது மாதிரியான முகச்சுளிப்பு வசனங்களுக்கும் பஞ்சமேயில்லை.

இரு பெண்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம்தான் கதையின் கரு. அதையும் சமீபத்தில் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் பார்த்தாகிவிட்டது. படத்தில் காண்டு என்ற சொல் பல முறை வருவதைக் கேட்டு ரசிகர்கள் காண்டு ஆவதென்னவோ உண்மை!

பாபி சிம்ஹா எப்பேர்ப்பட்ட நடிகர்! அவரையும் வீணடித்திருக்கிறாரகள். மயில்சாமியெல்லாம் பஞ்ச் டயலாக் சொல்கிறார் ஹீம்!

ஊட்டி, குன்னூர் வனப்பையெல்லாம் குழைத்து திவ்யமாய்க் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஜே.

ஒலிப்பதிவு கிரிஸ்டல் கிளியர்.

நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு ஆபாசம் மற்றும் அருவருப்பை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். கடும் கண்டனங்கள்!

மொத்தத்தில்: படம் பார்க்காதவர்களுக்குக் கவலை வேண்டவே வேண்டாம்!

(திரையரங்கில் படம் பார்த்த ரசிகர்கள் பலரிடமும் கருத்து கேட்டோம். சண்டைக்கு வருகிறார்கள்)வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
கவலை வேண்டாம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in