தினமலர் விமர்சனம்
''சீனிகம், பா, ஷமிதாப்'' போன்ற படங்களை இயக்கிய ஆர்.பால்கி இயக்கத்தில், அடுத்து வெளிவந்திருக்கும் படம் ''கி அண்ட் கா''. கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், விட்டுகொடுக்காமை.... உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் கலந்து கட்டி தந்திருக்கிறார் இயக்குநர். இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் ஒரு வரிக்கதை. கதைப்படி, ஹீரோயின் கியா எனும் கரீனா கபூர், ஒரு ஆயில் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனாஜராக இருக்கிறார். ஹீரோ கபூர் எனும் அர்ஜூன் கபூர், பெரிய பணக்கார வீட்டு பையன். கரீனாவை, அர்ஜூன் பார்த்த மாத்திரத்தில் கவருகிறார். அர்ஜூனை பொறுத்தமட்டில் அவருக்கு தனது அம்மாவை போன்று சிறந்த இல்லத்து அரசியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். இப்படிப்பட்ட சூழலில் கரீனா-அர்ஜூன் இடையே திருமணம் நடக்கிறது, கரீனா வேலைக்கு செல்கிறார், அர்ஜூன் வீட்டை கவனிக்கிறார். இவர்களது இல்லற வாழ்வு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒருக்கட்டத்தில் கரீனா தான் வேலை பார்த்த நிறுவனத்தின் துணை தலைவராக உயருகிறார். அதன்பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னைகள் எழுகிறது. வழக்கமாக கணவன்-மனைவிக்குள் நடக்கும் சண்டை, பொறாமை, விட்டுகொடுக்காமை.... உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் எழ ஆண் - பெண் பேதம் நிகழ்கிறது. இறுதியில் இந்த சண்டை எங்கு போய் முடிகிறது. கணவன் - மனைவி இருவரும் சுமூகமாக இல்லற வாழ்வில் இணைந்தார்களா.? என்பது 'கி அண்ட் கா' படத்தின் மீதிக்கதை.
கபூராக வரும் அர்ஜூன் கபூர் நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றே சொல்ல தோன்றுகிறது. சில இடங்களில் அவரது நடிப்பு சுத்தமாக எடுபடவேயில்லை. அவர் இன்னும் கொஞ்சம் நடிப்பு பயிற்சி எடுத்தால் நல்லது.
கியாவாக வரும் கரீனா கபூர், முதல்பாதியில் சிறப்பாக நடித்திருக்கிறார். கார்பரேட் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணாகவும், அர்ஜூனின் மனைவியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் அவரிடம் எதிர்பார்த்த நடிப்பு இல்லை.
அர்ஜூன், கரீனா தவிர படத்தில் வரும் ரஜித் கபூர், ஸ்வரூப் ஆகியோரின் நடிப்பும், சிறப்பு தோற்றத்தில் வரும் அமிதாப்-ஜெயாபச்சனின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
பொதுவாக கணவன் - மனைவிக்கு இடையே இருக்கும் பலவித பிரச்னைகளை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பால்கி. உதாரணத்திற்கு... கணவன்-மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம், பணப்பிரச்னை, பொறாமை.... என விஷயங்களை சொல்லியிருக்கிறார். கூடவே காமெடியான விஷயங்களையும் நிறைய சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் கதையில் எதிர்பார்த்த அளவுக்கு உயிரோட்டம் இல்லை. மேலும் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட விஷயங்களும் சுமாராகவே இருப்பது படத்திற்கு பலவீனம். ஆனாலும் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
மொத்தத்தில், 'கி அண்ட் கா' - கணவன்-மனைவிக்கு இடையோன ''ஊடல்-கூடல்''