2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
சினிமாவையும், நம்மையும் பிரிக்க முடியாது என்று சொல்லுமளவிற்கு சினிமாவும், சினிமா பிரபலங்களும் நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை சினிமா பிரபலங்களைப் பின் தொடரும் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள், நடிகைகள் என்ன செய்கிறார்களோ அதை பின்பற்றும் ஒரு மனநிலைக்கு ஆளாகிவிட்டார்கள். அந்தப் பிரபலங்கள் செய்வது தவறென்று தெரிந்திருந்தாலும் அதை ஆதரிக்கும் மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சினிமா பிரபலங்களின் வாழ்க்கையைக் கூட பின்பற்றும் சில மோசமான ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளும் கூட ரசிகர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காதல் திருமணங்கள், திருமண விவாகரத்து என சினிமா பிரபலங்கள் செய்வது காலப்போக்கில் சாமானிய மனிதர்களிடத்திலும் பரவியது. சினிமா பிரபலங்கள் காதலிக்கும் போது ஏற்படும் பரபரப்பு அவர்கள் பிரியும் போதும் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவில் சில பிரபலங்களின் விவாகரத்துக்கள் அந்தந்த காலங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் தனது முதல் மனைவி வாணி, இரண்டாவது மனைவி சரிகா ஆகியோருடன் சில காலம் வாழ்ந்து பின்னர் பிரிந்தார். சரிகா- கமல் தம்பதியினருக்கு ஸ்ருதி, அக்ஷரா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். மகள்கள் வளர்ந்த பிறகுதான் இவர்கள் பிரிந்தார்கள் என்பது முக்கியமானது. அடுத்து நடிகை கவுதமியுடன் கமல்ஹாசன் சில காலம் வாழ்ந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே பிரிந்தார் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை கவுதமி 1999ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சில வருடங்களிலேயே அவரைப் பிரிந்தார். கவுதமிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
பார்த்திபன் - சீதா
பார்த்திபன் - சீதா தம்பதியினரின் காதல் அவர்கள் முதலில் இணைந்து நடித்த 'புதிய பாதை' படத்தில் ஆரம்பமானது. இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு வளர்ப்பு மகன் என அருமையாகப் போன அவர்களது குடும்ப வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபுதேவா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருக்கும் பிரபுதேவா எப்போது அவரது மனைவி ரம்லத்தைக் காதல் திருமணம் செய்தார் என்பது ரகசியமாகவே இருந்தது. அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்து, அதில் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். நயன்தாரா உடன் காதல் கிசுகிசுக்கப்பட்டவர் பத்து வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விட்டுப் பிரிந்தார்.
பிரகாஷ்ராஜ்
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வில்லன், குணச்சித்திரம் என இப்போதும் பிஸியாக இருப்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். நடிகை லலிதாகுமாரியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகளும் பிறந்தார்கள். மகன் உடல்நலக் குறைவால் காலமானார். லலிதா குமாரியை விவாகரத்து செய்த பிரகாஷ்ராஜ், நடன இயக்குனர் போனி வர்மாவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.
ராதிகா
சினிமா, டிவி என பிஸியாக இருப்பவர் ராதிகா. நடிகர், இயக்குனர் பிரதாப் போத்தனைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். அவரை விவகாரத்து செய்துவிட்டு வெளிநாட்டவரான ரிச்சர்ட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை பெற்ற பிறகு ரிச்சர்ட்டைப் பிரிந்தார் ராதிகா. பின்னர் நடிகர் சரத்குமாரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
சரத்குமார்
நடிகர் சரத்குமார், சாயாதேவியைக் கல்யாணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றார்கள். 20 வருடங்களுக்கு முன்பே தனது மனைவியைப் பிரிந்தார் சரத்குமார். பின்னர் ராதிகாவைத் திருமணம் செய்து கொண்டார். சரத்குமார், சாயாதேவி தம்பதியினரின் மகள்தான் நடிகை வரலட்சுமி.
செல்வராகவன்
இயக்குனர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வால் சில படங்களில் சேர்ந்து பணியாற்றினார்கள். திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தார்கள். பின்னர் செல்வராகவன் அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கீதாஞ்சலியைத் திருமணம் செய்து கொண்டார்.
ரேவதி
80களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரேவதி. அவருடைய சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுரேஷ் மேனனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு இருவரும் பிரிந்தார்கள்.
ராமராஜன் - நளினி
80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்குப் போட்டியாக பல வசூல் படங்களைக் கொடுத்தவர் ராமராஜன். அவருடன் கதாநாயகியாக நடித்த நடிகை நளினியைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஒரு ஆண், பெண் என இரட்டையர்களைப் பெற்றார்கள். பத்து வருடங்களுக்கும் மேலான வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிந்தார்கள்.
ரகுவரன் - ரோகிணி
தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை வியக்க வைத்தவர் மறைந்த நடிகர் ரகுவரன். நடிகை ரோகிணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். ரகுவரன் மறைவுக்கு முன்பே இருவரும் பிரிந்தார்கள்.
அரவிந்த்சாமி
தமிழ் சினிமாவில் அரவிந்த்சாமி என்றால் ஒரு காலத்தில் இளம் பெண்களிடம் அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. ஆனால், அவரது மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது என்பது ஆச்சரியம்தான்.
பிரசாந்த்
தமிழ் சினிமாவில் அதிகமாக செய்திகளில் அடிபட்டு விவகாரத்து பெற்றவர் நடிகர் பிரசாந்த். தன்னைத் திருமணம் செய்து கொண்ட கிரகலட்சுமி ஏற்கெனவே திருமணமானவர் என்பதை மறைத்து தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி அவரைப் பிரிந்தார் பிரஷாந்த்.
யுவன் ஷங்கர் ராஜா
இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா. இரண்டு முறை திருமணமாகிப் பிரிந்தவர். மூன்றாவதாக முஸ்லிம் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள அம்மதத்திற்கே மாறினார்.
இன்னும் சில முக்கியமான திருமணப் பிரிவுகள் தமிழ் சினிமாவில் உள்ளன. காதலித்துத் திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர்கள்தான் அதிகம் என்பது கசப்பான உண்மை. காதலிக்கும் போது இனித்த வாழ்க்கை திருமணத்திற்குப் பின் கசந்தது ஏன் என்பது அவர்களுக்கே தெரிந்த உண்மை.
இன்னும் சில நடிகர்கள், நடிகைகளின் திருமணங்கள் நிச்சயதார்த்தத்துடன் நின்று போன நிகழ்வுகளும் நடந்துள்ளன. விஷால் ஐதராபாத் பெண் ஒருவருடன் நிச்சயம் செய்தார். த்ரிஷா தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயிக்கப்பட்டார். இருவரது திருமணமும் அத்துடன் நின்று போனது.
சமந்தா - நாகசைதன்யா
கடந்த சில தினங்களாக நடிகை சமந்தா, நாக சைதன்யா திருமணப் பிரிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்து, கிறிஸ்துவ முறைப்படி தங்கள் திருமணத்தை நடத்தினார்கள். திருமணம் செய்வதற்காக அந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து புரிந்து நடந்து கொண்டவர்கள் பிரிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான்.
பிரபலங்களின் பிரிவுகளுக்கு ஆணாதிக்க மனநிலையும், வேறு சில தனிப்பட்ட காரணங்களுமே காரணம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அதேசமயம் எல்லா பிரிவுகளுக்கும் ஆண் மட்டும் காரணமாகி விட முடியாது. திருமண வாழ்க்கை என்பது அந்தந்த பிரபலங்களின் தனிப்பட்ட விவகாரம் தான். ஆனால், அவர்கள் காதலிக்கும் போதும், திருமணம் செய்து கொள்ளும் போதும் அதை மக்களிடம் கொண்டு செல்ல நிறையவே மெனக்கெடுகிறார்கள். அவர்களது திருமணமும் மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம், அவர்கள் மண வாழ்க்கை முறியும் போது அது தங்களது தனிப்பட்ட விவகாரம், இது பற்றி அதிகம் பேச வேண்டாம் என முடித்துக் கொள்கிறார்கள். எது எப்படியோ, தங்களைப் பின் தொடரும் ரசிகர்களுக்காக தங்களது வாழ்க்கையை கவனத்துடன் அமைத்துக் கொள்வது நல்லது.