2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
கொரோனா தாக்கம் தமிழ் சினிமாவை கடந்த 18 மாதங்களாக நிறையவே பாதித்துவிட்டது. கடந்த வருடத்தில் முதல் அலை தாக்கத்திற்குப் பிறகு மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. அதன்பிறகு வெளிவந்த படங்களில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் மட்டுமே பெரும் வசூலைக் குவித்தது.
அதற்கடுத்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் தாக்கிய இரண்டாவது அலைக்கு முன்பாக தனுஷ் நடித்த 'கர்ணன்', கார்த்தி நடித்த 'சுல்தான்' ஆகிய படங்கள் ஓரளவிற்கு வசூலித்தன. அந்தப் படங்களும் இரண்டாம் அலையில் சிக்கியதால் பெரிய வசூலைக் குவிக்க முடியவில்லை.
ஏப்ரல் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திறக்கப்பட்டன. இருந்தாலும் செப்டம்பர் 3ம் தேதியிலிருந்துதான் புதிய தமிழ்ப் படங்களை தியேட்டர்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் கடந்த மாதத்தில் வெளியாகவில்லை. இருந்தாலும் மக்கள் ஓரளவிற்குதான் தியேட்டர்கள் பக்கம் வந்தனர். இனி வரும் நாட்களில் அது மாறுமா என்பது வரும் வாரங்களில் வெளிவர உள்ள படங்களைப் பொறுத்து அமையும்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் தியேட்டர்களில் 12 படங்களும், ஓடிடி தளங்களில் 6 படங்களும் வெளியாகி உள்ளன.
செப்டம்பர் 3ம் தேதியன்று 'தேவதாஸ் பிரதர்ஸ்' படம் வெளிவந்தது. இப்படி ஒரு படம் வெளிவந்ததா என்று கூட தெரியாத அளவிற்கு இந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
செப்டம்பர் 9ம் தேதி மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்த 'லாபம்' படம் வெளிவந்தது. ஒரு முழுமை பெறாத படமாக பல குறைகளுடன் இந்தப் படம் வெளிவந்ததால் எந்த ஒரு தாக்கத்தையும் இந்தப் படம் ஏற்படுத்தவில்லை.
செப்டம்பர் 10ம் தேதி மறைந்த முதல்வர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்று சொல்லப்பட்ட 'தலைவி' படம் வெளிவந்தது. கற்பனையான பல காட்சிகள் படத்தில் இருந்ததாக விமர்சனம் எழுந்தது. பயோபிக் படம் என்றால் இப்படியா இருக்க வேண்டும் என்று ரசிகர்களே கமெண்ட் செய்தார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட இந்தப் படத்தைக் கண்டு கொள்ளாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய படம் தள்ளாடிப் போனது அதிசயம்தான்.
செப்டம்பர் 17ம் தேதி விஜய் ஆண்டனி நடித்த 'கோடியில் ஒருவன்', ஹர்பஜன் சிங், அர்ஜுன் நடித்த 'பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த சில படங்கள் தோல்வியைத் தழுவியிருந்தன. இந்த 'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றி விஜய் ஆண்டனிக்குத் தேவையான ஒன்றாக இருந்தது. மோசமான படமாக இல்லாத காரணத்தால் வேறு படங்கள் எதுவும் போட்டிக்கு இல்லாததாலும் இந்தப் படத்திற்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாகவே இருந்தது. எப்படியும் 4 கோடி ரூபாய் வரை இந்தப் படத்திற்கு 'ஷேர்' கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். 'பிரண்ட்ஷிப்' மாதிரியான படங்களில் எல்லாம் நடித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய பெருமையை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
செப்டம்பர் 24ம் தேதி 'சின்னஞ்சிறு கிளியே, சூ மந்திரக்காளி, சிண்ட்ரெல்லா, பேய் மாமா, பிறர் தர வாரா, வீராபுரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு இத்தனை படங்கள் ஒரே வாரத்தில் வந்தது ஆச்சரியம்தான். ஆனாலும், இந்தப் படங்களில் சில ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தைப் பெற்றாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை.
செப்டம்பர் 30ம் தேதி ஹிப்ஹாப் தமிழா இயக்கம், இசை, நடிப்பில் உருவான 'சிவகுமாரின் சபதம்' படம் வெளியானது. காஞ்சிபுரம் நெசவாளர்களின் பிரச்சினையைப் பற்றி சொல்லி உள்ளோம் என்றார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் ஒரு குடும்பக் கதையாக சுமாரான படமாகத்தான் கொடுத்திருந்தார்கள்.
50 சதவீத இருக்கைகளில்தான் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. அந்த 50 சதவீத இருக்கைகள் கூட ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் ஒரு சில படங்களுக்கு நிறைந்தன. மற்ற படங்களுக்கு கூட்டம் வராததால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தது.
தியேட்டர்கள் நிலைமை இப்படியிருக்க ஓடிடியில் வெளியான 6 படங்களின் நிலவரம் எப்படி இருந்தது ?.
ஓடிடி வெளியீடுகள்
“ஆல்பா அடிமை, டிக்கிலோனா, அனபெல் சேதுபதி, நடுவன், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்,” ஆகிய படங்கள் ஓடிடி தளங்களிலும், 'துக்ளக் தர்பார்' படம் நேரடியாக டிவியிலும் வெளியானது.
விஜய் சேதுபதி நடித்த 'துக்ளக் தர்பார்' படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக டிவியில் வெளியானது. அதற்கடுதத வாரத்தில் அவர் நடித்த மற்றொரு படமான 'அனபெல் சேதுபதி' ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே ஏமாற்றத்தைத்தான் தந்தன.
சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' படத்தில் இடம் பெற்ற ரீமிக்ஸ் பாடலான 'பேரு வச்சாலும்...' பாடல் இந்தப் படத்தைப் பற்றிக் கொஞ்சம் பேச வைத்தது. படத்தில் இடம் பெற்ற சில நகைச்சுவைக் காட்சிகள் பிறகு மீம்ஸ்களாக வலம் வந்ததால் படம் ஓடிடியில் வெளியானது ரசிகர்களுக்குத் தெரிந்தது. அதனால், படம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது.
பரத் நடித்த 'நடுவன்' படம் டிவி சீரியல் அளவிற்குத்தான் இருந்தது. 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படம் தேவையான ஒரு கருத்தைச் சொன்னாலும் ஒரு 'டிரை' ஆன சப்ஜெக்டாக இருந்ததாகவே ரசிகர்கள் கருதினர். 'ஆல்பா அடிமை' படம் எதில் வந்தது என்று தேடிப் பார்க்க வேண்டியதாக இருந்தது.
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்கள் எப்படி வருவார்கள் என்பது செப்டம்பர் மாதப் படங்களுக்கு ஒரு சோதனையாக அமைந்துவிட்டது. வேறு வழியில்லாத காரணத்தால்தான் படங்களை ரிலீஸ் செய்தார்கள்.
அக்டோபர் மாதம் சில பெரிய படங்கள் வெளிவர உள்ளதால் செப்டம்பர் மாதத்தை விட அக்டோபரில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வருவார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
செப்டம்பர் 2021 வெளியான படங்கள்
செப்டம்பர் 3 : தேவதாஸ் பிரதர்ஸ்
செப்டம்பர் 9 : லாபம்
செப்டம்பர் 10 : தலைவி
செப்டம்பர் 17 : கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்
செப்டம்பர் 24 : சின்னஞ்சிறு கிளியே, சூ மந்திரக்காளி, சிண்ட்ரெல்லா, பேய் மாமா, பிறர் தர வாரா, வீராபுரம்
செப்டம்பர் 30 : சிவகுமாரின் சபதம்
ஓடிடி வெளியீடுகள்
செப்டம்பர் 3 : ஆல்பா அடிமை
செப்டம்பர் 10 : டிக்கிலோனா, துக்ளக் தர்பார் (டிவி)
செப்டம்பர் 17 : அனபெல் சேதுபதி
செப்டம்பர் 24 : நடுவன், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்